சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது. பீச்சில் நண்பர்களுடன் வழக்கம் போல் நின்று கொண்டிருந்தேன். இரவு 10 மணி இருக்கும். நண்பன் ரெங்கராஜ் “ லெ மேரிடியன் போகலாமா ?” என்று கேட்டான். ‘வீட்டுக்குக் கிளம்புகிறோம்’ என்று மற்ற நண்பர்களிடம் பொய் சொல்லி விட்டு நைசாகக் கிளம்பினோம்.
நண்பர்கள் மத்தியில் ரெங்கராஜை மன்னார் அண்ட் கம்பெனி ஓனர் என்று குறிப்பிடுவோம். ஞாபகம் இருக்கிறதா ? ‘கல்யாணப் பரிசு ’ படத்தில் தங்கவேலு. காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் ஆபீஸ் செல்வது போல் வெளியே கிளம்பிச் சென்று, நாள் பூராவும் பார்க்கில் உட்கார்ந்திருந்து விட்டு மாலை வீடு திரும்பி விடுவார் . கேட்டால் மன்னார் அண்ட் கம்பெனியில் வேலை என்பார்.
அப்போது ஒரு உறவினர் வந்து “ நான்தானே மன்னார் அண்டு கம்பெனியின் முதலாளி? ” என்று சொல்ல, ” என்னுடையது ராஜ மன்னார் அண்டு கம்பெனி ” என்பார் தங்கவேல். அந்த மாதிரி ஒரு கம்பெனிதான் ரெங்கராஜுடையது. ஆபீஸ் கிடையாது. ஆள் அம்பு கிடையாது. காலையில் பேப்பர் படிக்க வேண்டியது . டெண்டர் நோட்டீஸ்களைப் பார்த்து தன் ‘தொடர்பு ’ கள் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைப்பது. காலையில் ஒரு மணி நேரம்தான் வேலை . கமிஷனாக வருடத்தில் ஒரு கோடி, ரெண்டு கோடி வரும்.
‘வேலை நேரம்’ போக ஐயாவை ப்ரவுசிங் சென்டரிலோ, கெஸ்ட் ஹவுஸிலோதான் பார்க்க முடியும். மெரிடியன் சென்று கொண்டிருக்கும்போது அவன் ஒரு விஷயம் சொன்னான். ப்ரவுசிங் சென்டரில் இவனுக்குப் பக்கத்து கேபினில் இருந்த பெண் இவனுடைய மெயில் ஐ.டியைக் கேட்டாளாம். இவன் கொடுத்ததும் வந்த மெயிலில் கண்டிருந்தது:
”என் பெயர் ஷ்ரேயா. நாங்கள் மூன்று பேர். பூனா. எஞ்சினியரிங் பட்டதாரிகள். வேலை தேடி சென்னை வந்திருக்கிறோம். உங்கள் உதவி தேவைப்பட்டால் போன் செய்யலாமா ? போன் நம்பர் தரவும்.”
‘சிலுக்கு ஸ்மிதா மாதிரி இருந்தாள் ’ என்றான் ரெங்கராஜ். இன்னும் பலதும் சொன்னான். அதையெல்லாம் இவ்விடத்தில் தணிக்கை செய்கிறேன். அப்போது அவனுக்கு ஒரு போன் வந்தது. பார்த்தால் ஷ்ரேயா.
( இந்த கதையில் நான் விவரிக்கும் சம்பவங்களெல்லாம் சினிமாவில் வருவதை விடவும் நம்ப முடியாததாக இருக்கும். ஆனால் நூற்றுக்கு நூறு நிஜம் !) மூன்று பேரும் கிண்டியில் ஏதோ ஒரு டப்பா லாட்ஜில் தங்கியிருக்கிறார்களாம். அதனால் இன்றிரவு மட்டும் அவர்களுக்கு அடைக்கலம் தந்தால் பிறகு சமாளித்து கொள்வார்களாம்.
“ நீ என்னுடைய காரில் முதல் முதலாக ஏறிய அதிர்ஷ்டம் ” என்றான் ரெங்கராஜ்.
ஷ்ரேயாவை மெரிடியன் வாசலில் வந்து நிற்கச் சொன்னான்.
நாங்கள் போய்ச் சேர்வதற்கும் அவள் நின்று கொண்டிருப்பதற்கும் சரியாக இருந்தது. ரெங்கராஜ் கூறியது மெத்த சரி. சிலுக்கு ஸ்மிதாவேதான். அமெரிக்க ஆங்கிலம். ஃப்ரெஞ்சும் தெரியும். இந்திய மொழிகளில் இந்தி மட்டும் தோடா தோடா ... மேட்டுக்குடி வர்க்கம் என்று ‘நெற்றியில்’ எழுதியிருந்தது.
லாட்ஜ் வாசலிலேயே பெட்டி படுக்கைகளுடன் தயாராக நின்று கொண்டிருந்தனர் ஷ்ரேயாவின் தோழிகள். செலின் மற்றும் ஷெரீன். ஷ்ரேயா முன்னால் அமர்ந்து கொள்ள செலினும். ஷெரீனும் என் சீட்டில். சாமான்களையும் அதிலேயே வைத்திருந்ததால் செலின் ஏறத்தாழ என் மடியிலேயே அமர்ந்திருந்தாள்.
”உங்களுடைய லாட்ஜிங் பற்றிய கவலையை விடுங்கள். எனக்கு இங்கே ஒரு கெஸ்ட் அவுஸ் உள்ளது. வேலை கிடைக்கும் வரை நீங்கள் அதில் தங்கிக் கொள்ளலாம். எங்கள் இருவரையும் முழுமையாக நம்பலாம். ஓகே. இப்போது நாங்கள் ஃப்ளேம்ஸ் போகிறோம். நீங்கள் டான்ஸ் ஆடுவீர்களா ?” - இது ரெ.ராஜ்
(ஃப்ளேம்ஸ் என்பது மெரிடியன் ஓட்டலிலுள்ள டிஸ்கோ பார்)
“ ஆட்டத்தில் எங்களை மிஞ்ச ஆள் கிடையாது ” என்றனர் மூவரும் கோரஸாக.
“ சரி. என்ன சாப்பிடுவீர்கள் ? பியர் ?”
“ நோ. கோக் ”
அன்று மெரிடியனில் ஏதோ ஒரு வெளிநாட்டுப் பிரதம மந்திரி வந்து தங்கியிருந்ததால் ஒரே களேபாரமாக இருந்தது. இதற்கிடையில் பீச்சிருந்து சேட்டையும் மெரிடியனுக்கு வரச் சொல்லியிருந்தோம் - மூன்று ஆண், மூன்று பெண் ஜோடி சரியாக இருக்கும் என்று.

( Charu with Guru )
சேட் தில்லியைச் சேர்ந்தவன். வயது 30 தான் என்பதால் ஒருமையில் அழைத்துப் பழகிவிட்டது. சேட்டின் தந்தை தில்லியில் ஒரு பிரபலமான ஆங்கில தினசரியின் முதலாளி. சேட் சென்னை லயோலாவில் படித்து இங்கேயே செட்டிலாகி விட்டதால் நன்றாகத் தமிழ் பேசுவான்.
ஃப்ளேம்ஸில் எங்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். காரணம் ? பெண்கள். அண்டர் ஏஜ்.18 அகவைக்குக் கீழ் உள்ள சிறுமிகள் இங்கே அனுமதிக்கப்படார்.
இவர்களா சிறுமிகள் ? ஐந்தரை அடி உயரம். அரேபியக் குதிரைகளை ஒத்த வாளிப்பு. மதமதப்பு ...
“உங்கள் உண்மையாக வயது என்ன ?” என்று கேட்டோம்.
“எங்கள் எஞ்சினியரிங் சான்றிதழ்கள் காரில் உள்ளன. பார்த்துக் கொள்ளுங்கள் ” என்றாள் ஷ்ரேயா.
“உங்கள் முதலாளி என் நெருங்கிய நண்பர். இப்போதே அவரிடம் என்னால் பேச முடியும் ” என்றான் சேட்.
பணியாளர்கள் அதைச் சட்டை செய்யவில்லை. போன் போட்டு நிக்கியை அழைத்தோம்.
வந்து பார்த்த நிக்கி. “ஆளை விடுங்கள் சாமி” என்று சொல்லி இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிடு போட்டு விட்டு ஓடிவிட்டான்.
அடுத்து, நாங்கள் சென்றது பார்க் ஷெரட்டன். அங்குள்ள டிஸ்கோ பாரின் பெயர் டப்ளின். ( இதையெல்லாம் ஞாபகமாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி என் எழுத்தில் வரும்). அங்கேயும் அதே கதை. அண்டர் ஏஜ்!
எங்களுக்கோ ஒரே குழப்பம். ஏன் சொல்லி வைத்ததுபோல் எல்லோரும் இப்படியே சொல்கிறார்கள் ? அந்தப் பெண்களோ சத்தியம் செய்தார்கள். ‘ எப்படி 18 வயதுக்குள் எஞ்சினியரிங் முடிக்க முடியும் ? எங்களைப் பார்த்தால் பொடிசுகளைப் போலவா தெரிகிறது ?’
‘இல்லை. இல்லை. இல்லவே இல்லை’ என்று சொல்லி விட்டு சேட் எங்களை வேறொரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றான். அந்த இடம் சேட்டுக்கு மிகவும் வேண்டப்பட்டது. அங்குள்ள நடன விடுதி சென்னையில் பிரசித்தமான ஒன்று.
அங்கேயும் அதே விஷயத்தைத்தான் கூறினார்கள் - அண்டர் ஏஜ் - ஆனாலும். சேட்டுக்காக உள்ளே விட்டார்கள். என்னைத் தவிர மற்றவர்களை!
காரணம், நான் செருப்பு அணிந்திருந்தேன். கவனிக்கவும்: டிஸ்கோவில் நுழைய ஆண்களுக்கு மட்டும் இரண்டு நிபந்தனைகள் உண்டு 1. பெண் துணையின்றி தனியாகப் போக அனுமதி இல்லை. Stag (ஆண் மான்) என்று கூறித் துரத்தி விடுவார்கள்.
( ஆனால் பெண்களுக்குத் தனியே செல்ல அனுமதி உண்டு. காலிலும் வெறும் ரப்பர் செருப்பைக் கூட மாட்டிக் கொண்டு போகலாம். உண்மையில் ஆண்களுக்குச் சிறிதும் மரியாதை இல்லாத இடம், டிஸ்கோ). 2. ஆண்கள் ஷூ போடாமல் செருப்பு போட்டிருந்தால் உள்ளே விட மாட்டார்கள். இது தவிர. ஜெஃப்ரி போன்ற பார்களில் (ராதா பார்க் இன்) ட்ரெஸ் கோடும் உண்டு. உ.ம்: காலர் இல்லாத சட்டைக்கோ, வேஷ்டிக்கோ அனுமதி இல்லை. எப்போதும் மிகபபெரிய பூட்ஸ் அணிந்திருக்கும் வழக்கமுள்ள நான் அன்றைக்கு என்று பார்த்து செருப்பு போட்டிருந்தேன்.
பிறகு, சேட்டின் சிபாரிசில் அங்கிருந்த பவுன்சர் ஒருவர் ஸ்பேர் ஷுவைக் கொடுத்தார். ( டிஸ்கோக்களில் ஏதாவது தகராறு ஏற்பட்டால் சம்பந்தவர்களைத் தூக்கி வெளியே போட ஏழு அடி உயரமும் வாட்ட சாட்டமான உருவமும் கொண்ட சஃபாரி சூட் போட்ட ஆட்களை வைத்திருப்பார்கள். அவர்கள் பெயர் : பவுன்சர்) .
பவுன்சர் கொடுத்த ஷுவைப் பார்த்து விட்டு எனக்கு அழுகையே வந்து விட்டது. காரணம், என் செருப்பு 6000 ரூபாய்க்கு வாங்கியது. அந்த ஷுவோ 200 ரூ கூடப் பெறாத டப்பா ஷு.
“அதற்கென்ன? கிளம்பும்போது உங்கள் செருப்பைத்தானே போட்டுக் கொள்ளப் போகிறீர்கள் ?” என்று கேட்டான் சேட்.
“நிச்சயமாக இல்லை. கிளம்பும் போது நாம் என்ன அவ்வளவு சுய நினைவுடன் இருப்போம் என்றா நினைக்கிறாய் ?” என்றேன்.
அன்று சனிக்கிழமை என்பதால் டிஸ்கோ அதகளப்பட்டுக் கொண்டிருந்தது. இடம் தேடி அமர்ந்து பேரரை அழைத்தேன்.
ஷ்ரேயா தங்கள் மூவருக்கும் வோட்கா என்று சொல்லி விட்டு மெனு கார்டை எங்கள் பக்கம் நீட்டினாள் பக்கத்தில் பெண்கள் இருப்பதால் நிதானம் முக்கியம் என்று கருதி எங்களுக்கு பியர் ஆர்டர் கொடுத்தேன்.
கல்ப் கல்ப்பாக மூன்று பெக்கை அடித்து விட்டு (ஆரம்பத்தில் சாப்பிடுகிறவர்களின் பாணி அது) ரெ.ராஜுவை அழைத்துக் கொண்டு டான்ஸ் ஃப்ளோருக்குச் சென்று விட்டாள் ஷ்ரேயா.
அவர்களைத் தொடர்ந்து ஷெரீனை அணைத்தபடி சேட்டும் கிளம்பினான். நானும் செலினும் டான்ஸ் ஃப்ளோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அல்லது, அவ்வாறாக பாவனை செய்து கொண்டிருந்தோம்.
செலினும் என்னைப் போல் ‘ரிஸர்வ்ட்’ போல. டான்ஸ் ஃப்ளோரில் ஷ்ரேயா பாம்பைப் போல் வளைந்து நெளிந்து ஆடிக் கொண்டிருந்தாள். டான்ஸை முறையாகக் கற்றவளாக இருக்க வேண்டும்.
ஆடிக் களைத்த சேட் (பெயருக்கேற்றாற்போல் ஆளும் குண்டாக இருப்பான் இருக்கைக்கு வந்து என்னையும் செலினையும் பார்த்து “என்ன இது, இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள் ? எழுந்து ஆடுங்கள்... கமான் ” என்றான்.
நானும் செலினும் டான்ஸ் ஃப்ளோர் சென்று மற்றவர்களோடு சேர்ந்து கொண்டோம். விளக்குகள் விட்டு விட்டு பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. ஸ்பானிஷ் பாடகி ஷகீராவின் பாடல்கள். பக்கத்தில் பார்த்தேன். ஷ்ரேயா.
ரெ.ராஜின் காதில் “ ஷ்ரேயாவுடன் கொஞ்சம் ஆடிக் கொள்ளவா ?” என்று கேட்டேன்.
“தாராளமாக” என்றவுடன் ஜோடி மாற்றி ஆடினோம். அப்போது செலினுக்கு என்ன தோன்றியதோ, “கீழே போய் ஆடலாம்” என்றாள்.
டான்ஸ் ஃப்ளோரில் மட்டுமே ஆடுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் அன்றைய ‘உஷ்ணத்தில்’ அதைப் பற்றியெல்லாம் யாருக்குக் கவலை ? கீழ்த்தளத்தில் இரண்டு பேரும் எங்களை மறந்து ஆடினோம். அப்படி ஒரு ஆட்டத்தை என் வாழ்நாளில் ஆடியதில்லை.
அன்றைய தின நிகழ்ச்சிகள் எல்லாமே ஒரு க்ளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது போல் தோன்றியது.
‘டைட்டானிக் ’ படம் வந்ததிருந்த நேரம் அது. கீழ்த்தளத்திலிருந்த கூட்டம் அத்தனையும் எங்கள் இருவரையும் வட்டமாகச் சுற்றி நின்று கை தட்டி ஆரவாரம் செய்து எங்களை உற்சாகப்படுத்தியது.
அப்போது உற்சாகம் எல்லை மீறி, யாருமே எதிர்பாராபடி சட்டென்று தன் மேல் சட்டையைக் கழற்றி கூரையை நோக்கி விட்டெறிந்தாள் செலின்.
( சொச்சத்தை அடுத்த வாரம் எழுதுகிறேன்)
***
|