சென்ற வாரம் எழுதியிருந்த விஸிட்டர் கதையின் முடிவை சொல்லி வைத்தாற்போல் பல வாசகர்கள் ஒரே மாதிரி யூகித்திருந்தார்கள் - அன்று இரவு ப்ளேபாயின் அறைக்கு வந்தது ஷேக்தான் என்பதாக. அநியாயம்! என்னதான் இருட்டாக இருந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்குமா வித்தியாசம் தெரியாமல் போய்விடும் ? சரி. இதோ ரொவால்ட் டால் எழுதிய முடிவு:
திரும்பி வரும் வழியில் ப்ளோபாயிடம் சொல்கிறார் ஷேக்: “ ஒரே நாள் பழகினாலும் உங்களோடு நீண்ட நாள் பழகி விட்டது போல் இருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் உங்களிடம் அந்த உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை... ”
“ எந்த உண்மையை ?”
“ எனக்கு இன்னொரு மகளும் இருக்கிறாள் ?”
“ ஏன் அவளை எனக்கு அறிமுகம் செய்யவில்லை ?”
“ அவள் ஒரு தொழுநோயாளி. ”
***
குமுதத்தில் கோணல் பக்கங்களைப் பார்த்துவிட்டு “ எப்படி இருந்தது ரெஸ்பான்ஸ் ?” என்று ஆர்வத்துடன் கேட்டான் நிக்கி. அவனுக்கு நான் கூறிய பதிலை உங்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இப்பத்தியைப் பாராட்டி ஒரே ஒருவர்தான் பேசினார். அவர் மனுஷ்ய புத்திரன்.
மற்றபடி இதைத் திட்டி பல பேர் போன் செய்தார்கள்.
ஏன் ?
இதற்கு ஒரு பெரிய பின்னணியே இருக்கிறது.
கேரளாவில் நான் டீக்கடை, கள்ளுக்கடை என்று எங்கே சென்றாலும் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேசுவார்கள். ஒருமுறை ஒரு கல்லூரி மாணவன் என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்கும்போது அவனுடைய கை காலெல்லாம் தடதடவென்று ஆடின. என்னவென்று கேட்டபோது, ” உங்களைப் பார்த்த சந்தோஷம் ; என்னால் இதை நம்பவே முடியவில்லை ” என்றான் .
இதேபோல் பாரிசில் ஒரு பாருக்குச் சென்றிருந்தேன். பார் உரிமையாளருக்கு நான் எக்ரிவான் என்று தெரிந்ததும் பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார்.
(ஃப்ரெஞ்ச்சில் எக்ரிவான் என்றால் எழுத்தாளன்). தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் எழுத்தாளன் என்றால் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாடு நடிகர்களைக் கொண்டாடுகிறது.
நாமும் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் இரண்டு நிபந்தனைகள். ஒன்று, அந்த எழுத்தாளர் பாரதி, புதுமைப்பித்தன், ஆத்மாநாம் மாதிரி அல்பாயுசில் செத்திருக்க வேண்டும். அல்லது, பத்து இருபது நூற்றாண்டுகளுக்கு முன்னால் பிறந்திருக்க வேண்டும். உ-ம்: திரு. வள்ளுவர் திரு. கம்பர், திரு. இளங்கோ, மிஸ்.அவ்வையார். இந்த வேகத்தில் போனால் நம்முடைய ப.சிங்காரத்தையும், அசோகமித்திரனையும் கொண்டாட இன்னும் 1000 ஆண்டுகளாவது ஆகும். ( இவ்வளவு ‘ஸ்லோ’ வான மனித இனம் உலகில் வேறு எங்காவது உண்டா என்று தெரியவில்லை !)
இதன் காரணமாகவே தமிழில் எழுத்தாளர் ஜனத்தொகை மிகவும் குறைந்து போய் இப்போது புலியின் எண்ணிக்கையைப் போல் extinct ஆகிவிடும் நிலைக்கு வந்து விட்டது. யாளி , டைனசார் போன்ற விலங்கினங்களைப் போல் தமிழ் எழுத்தாளர் இனமும் விரைவில் அழிந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மொத்தம் 299 பேர் இருக்கிறோம். (300 பேரில் கோபி கிருஷ்ணன் என்ற ஒருவர் சமீபத்தில் வறுமையில் இறந்து விட்டார்). இந்த 299 பேர்தான் எழுத்தாளர்கள். வாசகர்களும் இவர்களே. இதுதான் பிரச்சினை. எக்ஸ் என்ற எழுத்தாளரின் நாவலைத் திட்டி நான் ஒரு 40 பக்க கட்டுரை எழுதுவேன். என் நாவலைத் திட்டி அவர் ஒரு 200 பக்க கட்டுரை எழுதுவார்.
1989- இல் வெளிவந்த என்னுடைய ஸீரோ டிகிரி நாவலைப் பற்றி சமீபத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு விமர்சனம் இது: சாரு நிவேதிதாவுக்கு தமிழே தெரியாது;அவர் சொல்லச் சொல்ல வேறு ஒருவர்தான் எழுதித் தருகிறார்.
இந்த விமர்சனத்துக்கு பதில் விமர்சனம் எழுதிய மற்றொருவர்: ” சா.நிக்கு எழுத மட்டுமல்ல; யோசிக்கவும் தெரியாது. அந்த நாவலை எழுதிக் கொடுத்ததே நான்தான். ”
என் பெயரைச் சுருக்கியிருக்கும் பாங்கை கவனிக்கவும். இதில் சுவாரசியம் என்னவென்றால், எழுதியவரின் தற்போதைய வயது 30. அப்படியானால் 13 வயதிலேயே எனக்கு அவர் அந்த நாவலை எழுதிக் கொடுத்திருக்கிறார் . பார்வதியின் முலைப்பால் அருந்தி ஐந்து வயதிலேயே பாடத் துவங்கிவிட்ட ஞானசம்பந்தரின் அவதாரம்!

சில ஆண்டுக்களுக்கு முன்னால் ஒரு கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவுக்காக சிறப்பு அழைப்பாளராக திருச்சூர் சென்றிருந்தேன். தெருவெங்கும் வரிசையாக கட் அவுட். அதில் என்னுடைய உருவம்! உண்மையில் அதைப் பார்த்த போது எனக்கு மிகவும் கூச்சமாகவே இருந்தது.
கூட்டம் முடிந்ததும் நடிகை கோபிகாவைப் போல் தோற்றம் கொண்ட ஒரு பெண் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் இப்படி ஒரு பாக்கியம் கிடைக்குமா? எழுத்தாளன் என்றாலே பெண்களுக்கு ஆகாது. அதிலும் அழகான பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
அந்த கோபிகா யாரென்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நண்பர் ருபேஷ் பாலை விசாரித்தேன். ருபேஷ் பால் எழுதிய கவிதைத் தொகுதியைத்தான் அன்று நான் வெளியிட்டிருந்தேன்.
“ ருபேஷ். ஒரு அழகான பெண் வந்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் யார் ?”
“ பெயர் இந்து மேனன். என் வருங்கால மனைவி ” என்றார் ருபேஷ்.
மறுநாள் இந்துவும் ருபேஷும் என்னை விருந்துக்கு அழைத்திருந்தனர் .
“ உங்களைப் பார்த்தால் கோபிகாவைப் போல் இருக்கிறது ” என்றேன் இந்துவிடம்.
நம்மூர் பெண்களாக இருந்தால் ‘ரொம்ப வழியாதே ’ என்பது போல் முறைப்பார்கள். ஆனால் இந்து என்ன சொன்னார் தெரியுமா ? கலகலவென்று சிரித்தபடி “ தப்பாகச் சொல்லாதீர்கள் சாரு ; நான் கோபிகாவை விட அழகாக்கும் ” என்றார்.
இந்து ஒரு எழுத்தாளரும் கூட. ‘லெஸ்பியன் பசு’ என்ற சிறுகதைத் தொகுதி வந்திருக்கிறது. ( இந்தக் கதையை தமிழில் மொழிபெயர்த்தால் பெரிய கலவரமே உண்டாகும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை).
‘ என் எழுத்தைப் படித்திருக்கிறீர்களா ?’ என்று இந்துவிடம் கேட்டேன். என்னுடைய கதை வந்த பத்திரிகையை கடை வாசலேயே நின்று கொண்டு படித்து முடித்ததாகக் கூறினார். அதோடு, ஸீரோ டிகிரியைப் படித்துவிட்டு, தான் எழுதிக் கொண்டிருந்த நாவலையே பாதியில் நிறுத்தி விட்டதாகவும் சொன்னார்.
ஏன் ?
“ சான்ஸே இல்லை; உங்கள் நாவலுக்குக் கொஞ்சமாவது பக்கத்தில் வரவேண்டாமா ?”
இது ஒரு புறம் இருக்க, அந்த விழாவின் அழைப்பிதழை சுகுமாரனிடம் கொடுக்கச் சென்றுள்ளார் ருபேஷ். சுகுமாரன் ஒரு தமிழ்க் கவிஞர். மலையாளத்திலும் புலமை மிக்கவர். அவர் அந்த அழைப்பிதழைப் பார்த்துவிட்டு “ ஏன், இந்த ஆள்தான் உங்களுக்குத் கிடைத்தாரா ?” என்று கேட்டிருக்கிறார் . தமிழ் நண்டு கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அதேதான் . இதற்கிடையில். தமிழில் எனக்குப் பிடித்தமான கவிஞர், சுகுமாரன்!
இதுதான் சூழ்நிலை. சமீபத்தில் தேர்தல் முடிந்து கருணாநிதி முதல்வரானதும் ‘கருணாநிதிக்கு ஒரு கடிதம்’ என்ற கட்டுரை எழுதினேன். மலையாளப் பத்திரிகையான ‘கலா கௌமுதி’ யில் அது வெளி வந்தது. ஒரு தமிழ் எழுத்தாளன் தமிழ் நாட்டு முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் ஒரு மலையாளப் பத்திரிக்கையில் வெளிவரும் அபத்தத்தை உணர்ந்த மனுஷ்ய புத்திரன் அதை ‘ உயிர்மை ’ யில் வெளியிட்டார். அது அதைவிட அபத்தம். காரணம், உயிர்மை வெறும் 5000 பேர் படிக்கும் சிறுபத்திரிகை.
ஃப்ரான்ஸில் மிஷல் வூல்பெக் என்ற ஒரு இலக்கிய எழுத்தாளர் உள்ளார். அவருடைய நாவல்கள் 25 லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன. இங்கே நான் குமுதத்தில் ஒரு பத்தி எழுதுவது இலக்கிய அன்பர்களுக்கு சங்கடமாக உள்ளது!
***
பீச் கோஷ்டி என்று அழைக்கப்படும் எங்களுக்கு எப்போதாவது வந்து சேர்ந்து கொள்வார் அந்த இயக்குனர். இப்போது அவர் மற்ற இயக்குனர்களைப்போல் நடிக்கவும் செய்கிறார். சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் தின இரவு மணி 12 ஐத் தாண்டியிருக்கும். எனக்கு கடல் அலைகளைப் பார்க்கும் ஆசை வந்து விட்டதால் நிக்கி, நான், இயக்குனர் மூவரும் எங்களுடைய வழக்கமான இடத்தை விட்டு அலைகள் கரையைத் தொடும் இடத்திற்குச் சென்றோம் .
“ திருடர்கள் வந்தால் என்ன செய்வது ?” என்றேன் பயத்துடன்.
நிக்கி தன் இடுப்பிலிருந்த பிஸ்டலை எடுத்துக் காண்பித்தான். ( லைசன்ஸ் பெற்றது)
இயக்குநருக்கு நிறைய வேர்க்கும் என்பதால் சட்டைக் காலரை அடிக்கடி பின்னுக்குத் தள்ளி விட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர். ஆனால் இரண்டு பெக் உள்ளே போனால் சுத்தமாகச் சட்டையைக் கழற்றி வைத்து விடுவார்.
வெற்று உடம்புடன் நின்று கொண்டிருந்த இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்துக்கான கதையை என்னிடம் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சொல்லிக் கொண்டிருந்தார். எவ்வளவு உணர்ச்சிவசம் என்றால், தன் இரண்டு கைகளையும் என்னுடைய தோள்களின் மீது போட்டவர் ஒரு மணி நேரமாக எடுக்கவில்லை.
பொதுவாக பெர்க்மன், அகிரா குரசவா போன்ற இயக்குனர்களின் தரத்திலுள்ள படங்களை மட்டுமே சினிமாவாகக் கருதும் எனக்கு அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் அந்த இயக்குனரின் கதை ஒரு காவியமாகத் தோன்றியது.
கையில் பிடித்திருந்த ப்ளாஸ்டிக் குவளையிலிருந்த ஸ்காட்ச் விஸ்கி சிந்தி விடாமல் தரையில் அமர்ந்து விக்கி விக்கி அழ ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட அதே நிலையிருந்த இயக்குனரும் நிக்கியை அவ்விடத்துக்கு அழைத்து “ ஆறு ஏழு பிசினஸ்களை வெற்றிகரமாக நடத்தும் நீங்கள் இதுவரை சினிமா பக்கமே வந்ததில்லை. இதோ இந்தக் கதையை கேட்டு விக்கி விக்கி அழுது கொண்டிருக்கும் சாருவைப் பாருங்கள். நிச்சயமாக இந்தப் படம் வெள்ளி விழாதான். ஏற்கனவே என்னுடைய படத்துக்கு நீங்கள் விசிறி. இதை நீங்கள்தான் தயாரிக்க வேண்டும் ” என்றார்.
அதற்கு நிக்கி “ ஜி, நான் நல்லா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலியா ? ஏற்கனவே நான் ப்ளு லேபிள் சாப்பிட வசதியில்லாமல் ப்ளாக் லேபிள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் நான் ஓல்ட் மாங்க் லெவலுக்கு இறங்க வழி சொல்கிறீர்களா ? ” என்று கூற பேச்சு திசை மாறியது.
இயக்குனர் பல மாவட்டத்துப் பேச்சையும் அதே பாணியில் பேசிக் காண்பிப்பார். அப்படி அவர் சொன்ன ஒரு விஷயம் இது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு இளம் தம்பதியினர் வெளியே செல்கின்றனர். கணவன் கேட்கிறான் : “ ஏட்டி, பக்கடா வாங்கட்டுமா ?”
மனைவி : வே. கூறு கெட்டுப் போனீரா நீரு .. உன்னியப்பம் வாங்கும். வயித்துக்கும்
பணியாரம் ஆச்சு. தலைக்கும் எண்ணையெத் தேச்சுக்கிடலாம்.
( உன்னியப்பம் என்பது மைதா மாவு மற்றும் பனை வெல்லத்தில் செய்யப்படுவது. ஒரு அப்பம் 100 மில்லி எண்ணையை உறிஞ்சும்) .
இயக்குனரிடம் “ உங்கள் பெயரைக் குறிப்பிட்டே எழுதுகிறேனே ?” என்றேன்.
“ வேண்டாம் ; இப்போது நான் நடிக்கவும் ஆரம்பித்து விட்டதால், பார்க்கிறவர்கள் ‘ ரெண்டு பெக் அடிச்சா சட்டையெக் கழட்டுவானே. அவன்தானே இவன் ?’ என்பார்கள். அப்படி ஒரு அடையாளம் வேண்டாமே ” என்றார்!
இந்தச் சம்பவம் நடந்த தேதியை கவனித்தீர்களா ? நாங்கள் கடற்கரையை விட்டுக் கிளம்பிய நான்கு மணி நேரத்தில் அங்கே சுனாமி!
***
|