நடிகைகளிடம் மட்டுமே சென்று உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் , நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் வார்த்தைகள் என்று கேட்டுக் கொண்டிருக்கும் நிருபர்கள் மீது எனக்கு தீராத பகை உண்டு . எழுத்தாளர்களாகிய நாங்கள் என்ன பாவம் செய்தோம் ? ஏன் எங்களை மட்டும் தனியாக ஒதுக்கி வைக்கிறீர்கள் ? சரி , இதோ நான் அடிக்கடிப் பயன்படுத்தும் வார்த்தைகள் .
1. இல்லடீ செல்லம்,
(‘ எங்கே, பார்ல இருக்கீங்களா ?’ என்று அவந்திகா கேட்கும்போது பயன்படுத்துவது)
2. அச்சா. அச்சா,
( தில்லியில் வசித்ததால் ஏற்பட்ட பழக்கம். யாராவது ஓவராக அறுத்தால் பயன்படும்).
3. ஓ, அப்படியா ?
(தொலைபேசியில் பேசும் பெண்கள் தங்களுடைய ப்ளஸ் டூ குழந்தைகள் 95 க்கு மேல் எடுத்திருப்பது பற்றியும், தமது யோகா வகுப்புகள் பற்றியும் நீண்ட நேரம் லெக்சர் கொடுக்கும்போது பயன்படுத்துவது).
4. அடங்... ( பிரசரிக்க முடியாத வார்த்தை)
(இங்கிலீஷ் மீடியத்தில் படித்த பண்பாளர்கள் ஒ மை காட் என்று சொல்வதைப் போல் வியப்பைத் தெரிவிப்பதற்கு... )
5. அடியேன்
(மடங்காத பெண்களிடம் ஆரம்ப கட்டத்தில்).
6. இப்படி ஒரு குரலைக் கேட்டதேயில்லை...
(நுழைவதற்கு லேசாக இடமிருப்பது தெரிய வந்தவுடன் பயன்படுத்துவது - புதிதாக அறிமுகமாகும் பெண்களிடம்).
7. டைப்பிங்ல இருக்கு,
(மலையாளத்தில் மூன்று இலக்கிய வாரப் பத்திரிக்கைகளில் அடியேனின் தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது தவிர அடிக்கடி கவர் ஸ்டோரிகள் வேறு. அதனால் சரியான தேதிக்குக் கொடுக்க முடியாமல் போகும்போது பத்திரிக்கை ஆசிரியரிடம் பயன்படுத்தும் வார்த்தைகள்).
8. ‘ முட்டாக் ... ’
(குஷியாக இருக்கும்போது அவந்திகாவிடமும் நிக்கியிடமும் பயன்படுத்துவது. சாமி படததில் விக்ரம், திரிஷாவிடம் பேசி தமிழ் சினிமாவில் இதை அறிமுகப்படுத்தியுள்ளார்).
9. மி மியல் ( Mi miel…)
(ஸ்பானிஷில் குறுஞ்செய்தி அனுப்பும் 19 வயது தோழிக்கு பதில் குறுஞ்செய்தி அனுப்பும்போது பயன்படுத்துவது. ஸ்பானிஷில் மி என்றால் ‘ என்னுடைய ’ என்று பொருள். மியல் = தேன்).
***
சாரு கல்லூரிப் பருவத்தில் (1972)
எந்தப் பெண்ணாவது கிட்டத்தில் நெருங்கியிருப்பாளா பாருங்கள் ?
எனக்குப் புகழோ பிராபல்யமோ பிடிக்காது . காரணம் , அதற்காக நாம் கொடுக்க வேண்டிய விலை அதிகம் . ரஜினிகாந்த்தால் சாவகாசமாக நடந்து வந்து ஒரு டாஸ்மார்க் கடையில் நின்று ஓல்ட் மாங்க் குவார்ட்டர் அடிக்க முடியுமா ? இப்போது கைத்தொலைபேசியிலேயே கேமரா வந்தபிறகு அந்தரங்கம் என்பது அறவே போய்விட்டது. ஏதோ படப்பிடிப்புக்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தபோது ஷாப்பிங்கில் அவர் கூட கௌதமியும் இருந்ததை கைத்தொலைபேசியில் பிடித்து உலகம் பூராவும் இண்டர்நெட்டில் அனுப்பிவிட்டார்கள். தொழில் நுட்ப வளர்ச்சியைத் தமிழர்கள் பயன்படுத்தும் விதம் இப்படி!
பல ஆண்டுகளுக்கு முன்பு - ஆண்டு ஞாபகமில்லை; ஆனால் ரஜினிக்கு அப்போது திருமணம் ஆகவில்லை- அவரை நான் சோளா ஓட்டலில் உள்ள ‘ தாயம் ’ என்ற பாரில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். (ரகுவரனும் அப்போது அங்கே ஒரு வாடிக்கையாளர்). இப்போது அந்த பாரின் பெயரை Charles Durand என்று மாற்றி விட்டார்கள்.
இது ஒரு காரணப் பெயர் சார்லஸ் துராந் என்ற ஃப்ரெஞ்சுக்காரர்தான் சென்னையில் முதன் முதலாக ஒயின் ஷாப்பை திறந்தவர். ஆண்டு 1860 . ( எந்த இடம் என்பதை யாரேனும் தெரிவித்தால் அடியேன் இன்புறுவேன். சென்னை நிபுணர் எஸ். முத்தையாவுக்குத் தெரிந்திருக்கலாம்).
பழைய வெள்ளை நிற ஃபியட் காரில் வருவார் ரஜினி. சொந்த ட்ரைவிங். ( இப்போதும் அப்படித்தான்; டிரைவர் வைத்துக் கொள்வதில்லை). தாயத்தில் வேலை முடிந்த பிறகு, சோளாவின் எதிரே இடதுகைப் பக்கமுள்ள ஒரு சந்தில் நுழைந்து அங்கிருந்த தேவர் ஒயின்ஸுக்குச் செல்வார்.
ஜெமினி ஸ்டுடியோ அதிபரின் வீட்டுக்கு 100 மீட்டர் முன்னால் இருந்தது தேவர் ஒயின்ஸ். இப்போது அந்த இடத்தின் அருகே மேம்பாலம் வந்து விட்டது. ஜெமினி அதிபர் வீட்டை நீங்கள் பழைய ஜமீந்தார் படங்களில் பார்த்திருக்கலாம். இப்போது அந்த வீடு விற்கப்பட்டு பல மாடிக் கட்டிடமாக மாறிவிட்டது.
தேவர் ஒயின்ஸுக்கு வரும் ரஜினி அங்கே ஒரு குவார்ட்டர் வாங்கி ஒரே ஒரு பெக் சாப்பிட்டுவிட்டு மீதியை கடைப் பையனிடமே கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார். ரொம்ப நாட்களுக்கு இதன் அர்த்தம் எனக்கும் நிக்கிக்கும் புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது. தலைவர் வேறு சில இடங்களிலும் சரக்கு சாப்பிட வேண்டியிருந்தது.
ஒரு நாள் பின்னிரவில் அவரை வேறொரு பாரில் பார்த்த போதுதான் விஷயம் விளங்கியது. அன்றிரவு அவரை நான் அதற்கு முன்பு தாயம், தேவர் ஒயின்ஸ் இரண்டு இடங்களிலும் பார்த்திருந்தேன். இதிலிருந்து என்ன தெரிகிறது ? நானும் நிக்கியும் கூட ரஜினியைப் போல் இரவுப் பறவைகளாக சுற்றிக கொண்டிருந்தோம்! இன்றும் நானும் நிக்கியும் அப்படித்தான். ஆனால் ரஜினியால் இப்போது அவ்வளவு சுதந்திரமாக நடமாட முடியுமா ? ( ஆனால் ரஜினி தற்போது மதுவையும் , புகையையும் விட்டு விட்டார் என்கிறார் நிக்கியின் சகோதரர். ரஜினியின் நண்பரான அவர் சில ஏரியாக்களில் ரஜினி படங்களின் விநியோகஸ்தராகவும் உள்ளார். அவரிடமிருந்து நான் அறிந்து கொண்ட தகவல்கள்:
ஷூட்டிங் இல்லாத சமயங்களில் பெரும்பகுதி நேரத்தை ரஜினி சென்னைக்கு அருகே கேளம்பாக்கத்திலுள்ள அவருடைய கெஸ்ட் ஹவுஸில்தான் கழிக்கிறார். அதில் நட்சத்திர ஒட்டல்களில் இருப்பதைப் போன்ற பெரிய நீச்சல் குளம் ஒன்று உள்ளது. ஏகப்பட்ட புத்தகங்கள் வைத்திருக்கிறார். ஆன்மீக ஆராய்ச்சி, யோகா, தியானம், நீச்சல் என்று பொழுது போகிறது. மற்றபடி நண்பர்கள் யாரையும் அங்கே சந்திப்பதில்லை.
அங்குள்ள டைனிங் டேபிளைப் பார்த்தாலே அது தெரிந்த விடுகிறது. ஒரே ஓரு ஆள் மட்டுமே அமர்ந்து சாப்பிடக்கூடிய டேபிள் அது. ( உலகத்திலேயே இவ்வளவு சின்ன டைனிங் டேபிளில் சாப்பிடுவர் ரஜினியாகத்தான் இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டேன்). போதக் குறைக்கு சைவ உணவு!
“ எல்லாம் சரி. காரைக் கூடவா இவ்வளவு எளிமையாக வைத்திருக்க வேண்டும் ?” என்று கேட்டேன். காரணம் , ரஜினி வைத்திருப்பது ஒரு சாதாரண ஹோண்டா சிட்டி கார். லைட்டான வாடாமல்லி கலர். பார்ப்பதற்கு மொழுக்கென்று அசிங்கமாக இருக்கும். ( எனக்கு அவருடைய கார் நம்பரும் தெரியும். அதை வெளியிடுவது தர்மம் அல்ல).
எனக்கு கார்களில் மிகுந்த ரசனை உண்டு. தற்சமயம் என்னைக் கவர்ந்த கார் கேம்ரி (ஆனால் எனக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது , அது வேறு விஷயம்). ஹோண்டா சிட்டியைப் போல் அசிங்கமான தோற்றமுள்ள மற்றொரு கார் மாருதி ஸ்விஃப்ட்.
நிக்கியின் தம்பி பேசிக் கொண்டிருந்தபோது ‘ ரஜினி பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ‘ ரஜினி சார் ’ என்றே சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்து எரிச்சலடைந்த நிக்கி ஒரு கட்டத்தில் “ தோ பார் பிரதர்... சபையில் பேசும்போது ‘ ரஜினி ’ என்று பேசு; ரஜினியிடம் பேசும்போது ‘ சார் ’ போட்டுக்கோ ” என்று சொன்னதை நான் மிகவும் ரசித்தேன்.
1996 ஆம் ஆண்டு. ஒரு நாள் முன்ளிரவு நேரம். சோளாவின் எட்டாவது மாடியிலுள்ள சாகிரி ரெஸ்ட்டராண்ட். எனக்கும் நிக்கிக்கும் எதிரேயுள்ள டேபிளில் ரஜினியும், அவர் மனைவி லதாவும், இரண்டு குழந்தைகளும். மற்றும் அவர்களோடு இண்டியன் ஏர்லைன்ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த லதாவின் மூத்த சகோதரியும் அவர் கணவரும் உணவருந்திக் கொண்டிருந்தனர். ( அவர் ஒரு நடிகர். அவர் பெயரை மறந்து விட்டேன்).
அன்றைய தினம் மெக்ஸிகன் உணவுத் திருவிழா. ஸ்பானிஷ் உச்சரிப்புப்படி மெக்ஸிகோவை மெஹிகோ என்றுதான் சொல்ல வேண்டும் , இருந்தாலும் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக மொழி தர்மம் மீறி மெக்ஸிகோ என்கிறேன்.
சாகிரியின் பணியாளர் தர்மராஜ் மெக்ஸிகன் உடையில் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். தர்மராஜ் தமிழராக இருந்தாலும் பார்ப்பதற்கு மெக்ஸிகனைப் போலவே இருப்பார். ( அவர் இப்போது சோளாவின் பெஷாவரி ரெஸ்டராண்டுக்கு மாற்றப்பட்டு விட்டார்).
கரும்பச்சை நிறப் புட்டியில் வரும் VAT புட்டியை ஞாபகப்படுத்தும் ஒரு வெள்ளை நிறப் புட்டியிலிருந்து ஊற்றப்பட்ட டக்கீலாவை அருந்திக் கொண்டிருந்தார் ரஜினி.
நெருப்பாக உள்ளே இறங்கும் டக்கீலாவை ஒரே மடக்கில் குடிக்க வேண்டும். டக்கீலாவுக்கென்று மிகச் சிறிய க்ளாஸ் ஒன்று பிரத்தியோகமாக உள்ளது. குடிப்பதற்கு முன்பே இடதுகை கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சேரும் இடத்தில் எலுமிச்சையைப் பிழிந்து அதில் சிறிது உப்பையும் தூவிக் கொண்டு, டக்கீலாவை இறக்கியதும் கையை நக்கிக் கொள்ள வேண்டும்.
தனது மெக்ஸிகன் உடையின் இடது பக்கப் பாக்கெட்டிலேயே டக்கீலா புட்டியைப் வைத்திருந்த தர்மராஜ் அதிலிருந்து அவ்வப்போது ரஜினிக்கு ஊற்றிக் கொண்டிருந்தார். எங்களுக்கு நேரமாகி விட்டது. தேவர் ஒயின்ஸ் போய்விட்டு இன்னும் பல இடங்களுக்குப் போக வேண்டும் என்பதால் சாகிரியிலிருந்து கிளம்பினோம்.
அப்போது ரஜினியின் டேபிளைக் கடக்கும்போது நிக்கி ரஜினியை நேருக்கு நேராகப் பார்த்து ” தலைவா, இந்த எலெக்ஷன்ல வாய்ஸ் குடுக்கலியா ? ” என்று சத்தமாகக் கேட்டார். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத ரஜினி நிக்கியை சற்று மிரட்சியுடன் பார்த்தார்.
பிரபலமாக இருந்தால் இதுதான் பிரச்சனை. இதன் காரணமாகவே தொலைக்காட்சிகளில் நான் தலை காண்பிப்பதில்லை. அப்படியிருந்தும் ஒரு நாள் வின் டி.வி.யில் ஒரு நிகழ்ச்சிக்காக அழைத்தபோது ஒப்புக் கொண்டுவிட்டேன். காரணம், அது ஒரு நேரடி ஒளிபரப்பு. அதனால் ஏற்பட்ட ஆர்வம். என்னுடன் பேசப் போவது யார் என்ற விபரம் கூட எனக்கு அப்போது தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இல்லை. திருவிழாவை வேடிக்கை பார்க்கப் போகும் ஒரு சிறுவனின் மனநிலையில்தான் இருந்தேன்.
நாள் 0 7. 04 . 2006 முற்பகல் 11 மணி. ‘ அழகிப் போட்டிகள், ஃபேஷன் ஷோக்கள், டிஸ்கோ நடனங்கள் போன்றவை இளைய சமுதாயத்தைக் கெடுக்கிறதா ?’ என்பது விவாதத் தலைப்பு. என்னோடு விவாவித்தவர் இந்து முன்னணியைச் சேர்ந்த ஆர்.பி.வி.எஸ். மணியன். நானும் அவரும் எங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க, இடையிடையே தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் நேயர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
அழகிப்போட்டிகள் போன்றவை பெண் உடலை நுகர் பொருளாக்கி ஆதாயம் தேடும் நுகர்வுக் கலாச்சார செயல்பாடுகள். அவை பெண்களை மலினப் படுத்துகின்றன என்று பேசிய நான், அதே சமயத்தில் மணியன் முன் வைத்த பண்பாடு பற்றிய கருத்துக்களை மறுத்தேன். அப்போது நிகழ்ச்சி நெறியாளரால் மீரா நம்பியார் என்ற பத்திரிக்கையாளர் கருத்து தெரிவிக்க அழைக்கப்பட்டார். அவர் மணியனை மறுத்துப் பேசத் துவங்கியதுமே மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஆக்ரோஷமாக எழுந்த மணியன், மீராவை ஒருமையில் விளித்து ” நீ ஒரு தேவுடியா; உன் குடும்பம் ஒரு விபச்சாரக் குடும்பம் ” என்று உரத்த குரலில் கத்தினார். மீரா அழுதபடியே தொடர்பைத் துண்டித்தார்.
ஒரு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியிலேயே ஒரு பெண் இவ்வளவு ஆபாசமாகத் தாக்கப்பட்டது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.
***

சென்ற இதழில் நான் குறிப்பிட்டிருந்தபடி யூத மதம், கிறித்தவம், இஸ்லாம் என்று மூன்று மதங்களின் இறைத் தூதர்களும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்று க்யூ டிவியின் சொற்பொழிவாளர் கூறியதன் காரணம், மோஸஸ் எகிப்தில் பிறந்த ஊரும், இயேசு பிறந்த பெத்லஹேமும், முகம்மது நபி பிறந்த மெக்காவும் சுமார் 300 கீ.மீ. தூரத்தில்தான் உள்ளன. உலகின் மூன்று மிகப் பெரிய மதங்களின் தீர்க்கதரிசிகளும் ஒரே நிலப்பகுதியில்தான் தங்களுக்குக் கிடைத்த செய்திகளை மக்களுக்குச் சொல்லியிருக்கின்றனர்.
க்யூ டிவி பாகிஸ்தானிலிருந்து ஒளிப்பரப்படுகிறது என்று நினைக்கிறேன். பாகிஸ்தானின் முஸ்லீம் ஜனத்தொகையும் இந்தியாவின் முஸ்லீம் ஜனத்தொகையும் எண்ணிக்கையில் ஒன்றுதான். அப்படியிருக்கும்போது க்யூ , டிவியைப் போன்ற ஒரு இஸ்லாமிய சேனலை இந்தியாவில் ஏன் துவக்கக் கூடாது ? ( நான் கூறுவது ஆன்மீக இஸ்லாம். அரசியல் இஸ்லாம் அல்ல. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.)
பின் குறிப்பு:
ஒரு நேரடி ஒளிப்பரப்பில் இப்படி ஒரு பெண் ஆபாசமாகத் தாக்கப்பட்டது பற்றி காலச்சுவடு இதழில் செய்தியும் கண்டனம் வந்திருந்தது.
***