டியர் பெருமாள்,
இது உண்மையா ? தமிழகத்தின் ஒரு சிறந்த எழுத்தாளர் ஒரு மிகச்சிறிய வாசகியின் முதல் மின்னஞ்சலுக்கு பதில் எழுதுவாரா ? என்னால் நம்ப முடியவில்லை பெருமாள். முதலில் நன்றிகள் பல.
என் பெயர் தீபிகா. கேரளாதான் எனது பூர்வீகம் என்றாலும் வளர்ந்தது திருச்சியில்தான். மிகப்பல கஷ்டங்கள் , அவமானங்கள் , ஏமாற்றங்கள் தோல்விகளுக்குப் பிறகு இப்போது ஒரு வருடமாக துபாய் வாசம். ஆறு மாதமாக. இரண்டு தோழிகளுடன் ஒரு தனி அறையில் தங்கியிருக்கிறேன்.
துபாயில் மத்திய தர வாழ்க்கைக்கு இன்னொரு பெயர் நரகம். வேறென்ன சொல்ல? ஒரு பஞ்சாபிக் குடும்பத்தின் சமையலறையில் ஒரு ஓரம்தான் எனது மற்றும் எனது தோழிகளின் சமையற்கூடம். இரவு முழுதும் ஆட்டம். பகல் முழுதும் தூக்கம். மாலையில் ஒரு வேளை சமையல் சாப்பாடு. இதுதான் எங்கள் உலகம்.
மன்னிக்கவும். எனக்கே புரிகிறது இவ்வளவு விபரங்கள் மிகவும் பிஸியான ஒரு எழுத்தாளரின் நேரத்தைச் சாப்பிட்டு விடும் என்று. ஆனாலும் உங்களின் பரிவான முதல் கேள்வி இவ்வளவையும் பேச வைத்து விட்டது.
உங்கள் எழுத்துதான் உங்களைக் காட்டும் கண்ணாடி என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன் பெருமாள். இன்னும் உங்களின் archives முழுதாக படித்து முடிக்கவில்லை.
உங்களின் தொலைபேசி எண் பகிர்ந்தமைக்கு நன்றி. என்னால் உங்களை இங்கிருந்து அழைக்க இயலாது. துபாயின் தொலைத் தொடர்பு கட்டணம்தான் உலகிலேயே மிக அதிகமானது என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே?. சென்னை வரும்போது கண்டிப்பாக உங்களிடம் சொல்லி விட்டு நேரில் வருகிறேன்.
என் மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. சத்தியமாக யாரிடமும் உங்கள் தொலைபேசி எண்ணைத் தர மாட்டேன்.
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மிகவும் மகிழ்வாக இருக்கிறேன்.
நமது நட்பு தொடருமா பெருமாள்?
அன்புடன்
தீபிகா.
* * *

டியர் பெருமாள்,
மிகவும் நன்றி பெருமாள் . இப்போது நான் அழுகிறேன். வேறு என்ன செய்ய?. என்ன சொல்ல?. மிகவும் நெகிழ்வாக உணர்கிறேன்.
கண்டிப்பாக உங்களால் முடியும்போது நீங்கள் பேசலாம் பெருமாள்...இப்போது அறையில் இருக்கும் மூவரும் ஒரே அலைபேசியைத்தான் உபயோகித்து வருகிறோம். இன்னும் ஓரிரண்டு மாதங்களில் ஒரு அலைபேசியை எனக்கே எனக்காக வாங்கத் திட்டமிட்டுள்ளேன். அதன்பிறகு கண்டிப்பாக உங்களுக்கு எண் தருகிறேன். அல்லது உங்களால் இணைய உரையாடலில் பங்கேற்க முடியுமானால் நேரத்தைச் சொல்லுங்கள். நான் வந்து இணைந்து கொள்கிறேன்.
இணையநிலையத்தில் வந்துதான் மின்னஞ்சல் அனுப்புகிறேன். எப்போதாவது ஊர் நினைவு வரும்போதும் இங்கே வந்துதான் பேசுவேன். (கடைசியாகப் பேசியது 8 மாதங்களுக்கு முன்பு).
நீங்கள் எழுதலாம் பெருமாள். கண்டிப்பாக என்னைப்பற்றி நீங்கள் எழுத வேண்டும். ஆனால் பெயரை மாற்றி விடுங்கள். அநேகமாக எல்லா துபாய் தமிழர்களுக்கும், குடிக்கும் தமிழர்களுக்கும் என்னை நன்றாகவே தெரியும்.. ஆனால் எல்லோருக்கும் அவரவர் கவலைகள் அவர்கள் அமீர்கள் அல்லவே. எனக்காகப் பரிந்து பேசி கவலைப்பட்டு நேரத்தை விரயமாக்கிக் கொள்ள.?
இரவினில் ஆட்டம் என்றவுடனே புரிந்து கொண்டிருப்பீர்கள் என எண்ணினேன். இங்கே ஒரு இந்திய pub ல் இரவில் ஆடுவதுதான் என் வேலை. எட்டு மணியிலிருந்து அதிகாலை மூன்று மணி வரை.
உங்களால் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத அளவு கால்வலியை தினந்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.. சில நேரங்களில் சிறிதளவு கொக்கேய்ன் , பெரும்பாலும் விஸ்கி குடித்துவிட்டு காலையில் தூங்கி மாலையில்தான் எழுவோம். இப்போது அதன்மேல் வெறுப்பு ஏற்பட்டு சில மாதங்களாக இயல்பாக வரும் உறக்கத்தை மட்டுமே மேற்கொண்டிருக்கிறேன். அதனால் வலியின் வேதனையை அனுபவிக்கிறேன்.
என் உடம்பின் மேல் வீசப்பட்ட பணக் கற்றைகளை மொத்தமாக எண்ணினால் பல லட்சங்கள் தேறும் மாத இறுதியில். ஆனால் எனக்கு வருவதோ சில ஆயிரங்கள்தான். அதிலும் எனது கடன் போக குடும்பத்துக்கெனெ மீதம் இருப்பது நான்கு இலக்க வருமானம்தான் என்று எண்ணிப் பார்க்கும்போதுதான் கண்கள் பீறிட்டு வரும் அழுகையை நிறுத்தவே முடிவதில்லை.
கவலைகள்.கவலைகள் மற்றும் கவலைகள்தான் வாழ்க்கை பெருமாள். வேறு எதுவுமே இல்லை. எவ்வளவு துயர் நிறைந்த வாழ்வினை இறைவன் எங்களுக்காகப் படைத்து வைத்திருக்கிறான் என்று நினைக்கும் கணம்தோறும் வருந்துவதைத் தவிர வேறேதும் தோன்றுவதில்லை.
மன்னிக்கவும் பெருமாள். அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டு விட்டேன். நட்பு மட்டும்தான் என்னை அரவணைத்துக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக அதில் ஒரு உயர்ந்த நட்பாக மிகுந்த பெருமையாக உங்களை சொல்லிக் கொள்வேன். கண்டிப்பாக எனக்கு அந்த வாய்ப்பினை வழங்குவீர்கள் என எண்ணுகிறேன்.
நிறைய எழுதுங்கள் பெருமாள். உங்களின் ராஸ லீலா இங்கே ஒருவரிடம் இருக்கிறதாம். கேட்டிருக்கிறேன். படித்து முடித்துவிட்டுத் தருவதாகக் கூறியிருக்கிறார். அதைப் படிக்க பெரும் ஆவல் கொண்டிருக்கிறேன். இன்னும் உங்களின் பல புத்தகங்களின் பெயர்களைக் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் படிப்பேன்.
உங்களின் பேரன்பிற்கு மிக்க நன்றி.
அன்பு
தீபிகா.