அன்பார்ந்த வாசகரே!
என்னை மன்னியுங்கள். சரியாக ஒரு மாதமாக குட்டிக் கதைகளைத் தொட முடியவில்லை. Field work – இல் கொஞ்சம் பிஸியாக இருந்தேன். அதாவது, என் இளம் தோழியை மகளிர் கல்லூரியில் சேர்க்க வேண்டியிருந்தது. கல்லூரி திறந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டபடியால் சேர்க்கை அவ்வளவு சுலபமாக இல்லை.
இளம் தோழி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அவளுக்கு இந்த நாவலில் என்ன பெயர் வைத்தேன் என்றே மறந்து போய் விட்டது. மதனாவா? வதனாவா? அனிதாவா? வனிதாவா? ம்ஹும். ஞாபகமில்லை. ஏபீஸீடி, எக்ஸ் ஒய்ஸீ என்று குன்ஸாக எழுதித் தப்பியது மட்டும் ஞாபகம் உள்ளது. பிறகு என்ன செய்வது சொல்லுங்கள்? ஜனனி, ரங்கநாயகி போன்ற என் குடும்ப உறுப்பினர்களே இதை வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். எத்தனை நாள் விஷாலையே ஸ்கேப்கோட் ஆக்கி எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்க முடியும்? ஒரு கட்டத்துக்கு மேல் அது ஆகவில்லை. அலெக்ஸின் பெயரை கிருஷ்ணா என்று மாற்றிப் பார்த்தேன். மறுநாளே எவனோ ஒருத்தன் அலெக்ஸுடன் ‘ சாட் ’ டுக்கு வந்து ‘ குட் மார்னிங் கிருஷ்ணா ’ என்றானாம். ம்...

இதற்கிடையில் அலெக்ஸ் பண்ணும் லொள்ளுகளுக்கும் அளவே இல்லை. காலையில் பத்து மணிக்கெல்லாம் கல்லூரிக்குக் கிளம்பி விடுவேன். அவனுக்கு எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ, சரியாகப் பத்து மணிக்கு போன் போடுவான்.
(முன்பெல்லாம் அவன் இப்படி இல்லை. இப்போது சமீப காலமாகத்தான் ஆரம்பித்திருக்கிறான்). ‘ கல்லூரியில் இருக்கிறேன்; அப்புறம் பேசுகிறேன் ’ என்பேன்.
அதை உடனடியாக நிக்கிக்குக் குறுஞ்செய்தி செய்திருப்பான். (“பெருமாள் காலேஜுக்குப் போயிருக்கிறான்; அவனுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லி விடு. ”)
மதியம் பனிரண்டு மணிக்கு நிக்கி என்னை அழைத்து ஏதாவது சொன்னாலோ, கேட்டாலோ வேறு ஏதாவது முக்கியமான வேலையில் இருப்பதாகச் சொல்லி மாட்டிக் கொள்வேன்.
இப்படி ஒவ்வொரு நாள் காலையிலும் மகளிர் கல்லூரிக்குச் சென்று கொண்டிருப்பதற்கு ஒருநாள் அலெக்ஸ் அடித்த காமெண்ட்: “காலையில் டூட்டிக்கு வந்ததும் போலீஸ்காரர்களுக்குத்தான் ‘ நீ இந்த காலேஜ் பக்கம் போ, நீ அந்த காலேஜ் பக்கம் போ ’ என்று ‘பீட் ’ போடுவார்கள். அந்த மாதிரி அல்லவா இருக்கிறது? ”
அதை விட பெரிய காமெண்ட் என்னவென்றால், உத்தமத் தமிழ் எழுத்தாளன்தான் என்னுடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டு என் எழுத்தை முடக்கிப் போடுவதற்காக அந்தப் பெண்ணை என்னிடம் அனுப்பியிருக்கிறானாம். அலெக்ஸின் மூளை எப்படியெல்லாம் வேலை செய்கிறது பாருங்கள்!
அலெக்ஸின் நோக்கம் என்னவென்றால், என்னையும் அந்தப் பெண்ணையும் பிரிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால் ஒன்று. இப்படிப்பட்ட எதிர்ப்புகள் இருந்தால்தான் கதையும் வாழ்க்கையும் சுவாரசியமாக இருக்கும்.
ம்... தோழியை நேற்று வெற்றிகரமாக காலேஜில் சேர்த்து விட்டேன். இனிமேல் குட்டிக் கதைகளைத் தொடரலாம். எஞ்ஜாய்!
***
8.8.08.
9.45 a.m.
|