பாத யாத்திரை

 

கொக்கோ கோலாவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் கேரளம் சென்றிருந்தேன். போராட்டக்காரர்கள் இரண்டு நாட்கள் பாத யாத்திரையாக வந்து, பாலக்காட்டுக்குப் பக்கத்தில் உள்ள கஞ்சிக்கோடு என்ற கிராமத்தில் உள்ள சத்திரப்படி என்ற இடத்திலிருக்கும் கோலா தொழிற்சாலையின் எதிரே தங்கள் எதிர்ப்பு ஊர்வலத்தை முடித்துக் கொள்வதாக ஏற்பாடு.

முன்னமே தெரிந்திருந்தால் பாத யாத்திரையின் ஆரம்பத்திலேயே அவர்களோடு சேர்ந்து கொண்டிருப்பேன். திடீரென்று அழைப்பு வந்ததால் விமானத்தைப் பிடித்து ஓடினேன். (ரயில் பயணச் சீட்டில் ரயில் கிளம்பும் நேரம் கண்ணுக்குத் தெரியாத ‘பொடி ’ எழுத்தில் இருந்ததால் தவறாகப் பார்த்து ரயிலைக் கோட்டை விட்டு விட்டேன்). பாத யாத்திரையின் கடைசி இரண்டு மணி நேரத்தில் நான் கலந்து கொண்டு அவர்களோடு நடந்தேன்.

கோலா கம்பெனி வாசலில் ஒரு பெரிய போலீஸ் பட்டாளம். அவ்வளவு போலீஸையும் ஆயுதங்களோடு பார்த்த போது அப்படியே நழுவி ஓடி விடலாமா என்றுதான் தோன்றியது. ஆனால், என்னோடு வந்து கொண்டிருந்த பெண்களோ ஒரு துளியும் அஞ்சுவதாகத் தெரியவில்லை. வீராங்கனைகளாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத்தானே தெரியும் குடி தண்ணீருக்காக அவர்கள் படும் கஷ்டமும் வேதனையும்? (கோக் கம்பெனி நிலத்தடி நீர் பூராவையும் உறிஞ்சி எடுத்து அந்தப் பகுதியையே பாலைவனமாக்கிக் கொண்டிருக்கிறது).

என்னுடைய பெயரை தொடர்ந்து ஒலி பெருக்கியில் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள் போராட்டக்காரர்கள். அதற்கு ஒரு காரணம் இருந்தது. ‘ போலீஸ்காரர்களே, நாங்கள் தனியாக வரவில்லை; ஒரு எழுத்துக்காரரும் எங்களோடு இருக்கிறார் ’ என்பதே அந்தத் தொடர்ந்த அறிவிப்பின் செய்தி.

போலீஸ்காரர்களுக்கு அது புரிந்தது. அவர்களும் பதற்றத்தோடுதான் இருந்தார்கள். ஆனால் வன்முறையில் இறங்கவில்லை. போராட்டக்காரர்கள் சற்றே பிசகினாலும், போலீஸ் தடையை மீறி உள்ளே செல்ல முயன்றாலும் தடியடிதான் என்று தெளிவாகத் தெரிந்தது. என்னைத் தனியாக ‘ கவனிப்பார்களா ’ அல்லது விட்டு விடுவார்களா என்றும் தெரியவில்லை. ஏனென்றால், நான் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில் கேரள முதலமைச்சரைக் கடுமையாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தேன்.

அதோடு, மாத்ரு பூமி பத்திரிகை வாயிலாக அவருக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தேன். ” கடிதத்தில் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஏன் ஓடி ஒளிகிறீர்? ” என்று மறுபடியும் கேட்டுத் தொந்தரவு செய்து கொண்டிருந்தேன். பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களும் அதை வைத்து என்னுடைய கடிதத்தை மேற்கோள் காட்டி அவரிடம் கேள்வி கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் எல்லாம் எரிச்சலடைந்து என்னை ‘ விசேஷமாக ’ கவனிக்கச் சொல்லி போலீஸாருக்கு உத்தரவு வந்திருக்கலாம். கூட்டத்தோடு கூட்டமாக ஒரே அடியில் மண்டையைப் பிளந்து விடலாமே? அப்புறம் வருத்தம் தெரிவித்து விட்டால் போகிறது? இப்படியும் செய்யலாம்; அல்லது, என் காரணமாக பிரச்சினை பெரிதாகி விடலாம் என்று எண்ணி போலீஸார் அமைதி வழியைக் கையாளலாம்.

என்னோடு திருப்பூர் நண்பர் சிவாவும், தங்கவேலும் வந்திருந்தார்கள். சிவா என் கூடவே இருந்தார். சற்று தூரத்தில் தங்கவேல் காரில் காத்திருந்தார். . கைது செய்யப் பட்டால் நண்பர்களுக்குத் தகவல் கொடுப்பதற்காக அவரிடம் என் தொலைபேசியைக் கொடுத்திருந்தேன். எல்லோரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போக போலீஸ் வேன்கள் தயாராகவே காத்திருந்தன.

கைது என்றால் பரவாயில்லை; ஆனால் அடித்து விட்டால்? எதற்கும் நாம் ஜாக்கிரதையாகவே இருப்போம் என்று சொல்லி, போலீஸார் என்னை நெருங்காதபடி போராட்டக்காரர்கள் என்னைச் சுற்றி வளையம் அமைத்துக் கொண்டார்கள்.

ஒரு மாதிரி போராட்டக்காரர்கள் போலீஸின் தடையை மீறாமலேயே கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் முன்னே சென்று “போலீஸ் நம்முடைய எதிரி அல்ல; இந்தப் பன்னாட்டு நிறுவன முதலாளிகளும், அச்சுதானந்தன் போன்ற இடைத் தரகர்களும்தான் நம்முடைய எதிரிகள் ” என்று பேசி ஒருவழியாக அந்த யாத்திரையை முடித்து வைத்தேன்.

இரண்டு தினங்களாகத் தொடர்ந்து நடந்திருந்ததால் போராட்டக்காரர்கள் மிகவும் களைத்து இருந்தார்கள்.

அப்போது போராட்ட ஒருங்கிணைப்பாளரான பிஜீ என்னிடம் ”இன்று நீங்கள் தான் எங்களைக் காப்பாற்றினீர்கள் என்றார். நீங்கள் இல்லாதிருந்தால் இன்றைய தினம் நிச்சயம் லத்தி சார்ஜ்தான் “ நாம் அமைதியாக இருந்ததால் போலீசும் அமைதி காத்தது என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

சிவா, தங்கவேல் மட்டும் அன்றைய தினம் என்னோடு இருந்திராவிட்டால் நான் ரொம்பவே சிரமப்பட்டுப் போயிருப்பேன்.

இவ்வளவுக்கும் இடையில் மதியமே டெக்கான் கிரானிக்கிள் தினசரியிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. மாலை ஆறு மணிக்குள் ‘ கடவுளும் நானும் ’ என்ற அவர்களுடைய புகழ் பெற்ற பத்திக்காக என்னுடைய கருத்தைக் கேட்டிருந்தார்கள். அதை வேறு மதியத்திலிருந்தே எழுதிக் கொண்டிருந்தேன். கோவை திரும்பி தங்கவேல் வீட்டிலிருந்து அதை டைப் செய்து அனுப்பினேன். (தங்கவேலின் துணைவியார் பூங்கோதை சமைத்துப் பரிமாறிய நாட்டுக் கோழிக் குழம்பு அருமை; சிவா சைவம் என்பதால் அவருக்குத் தனியாக சாம்பார்).

( திருப்பூர் சிவா உடன் ... )

சென்னை திரும்பும் போது மீண்டும் பிரச்சினை. பயணச்சீட்டை நான் மட்டும் பார்த்தால்தானே அஜாக்கிரைதையாகத் தவறு நேர்கிறது என்று இந்த முறை சிவாவிடமும், தங்கவேலிடமும் கொடுத்துச் சோதிக்கச் சொன்னேன். ஆனால், சென்னை எக்ஸ்பிரஸ் பாலக்காட்டிலிருந்து கோவை வராமலேயே குறுக்குப் பாதை வழியாக சென்னை போகும் என்பது கோவை ரயில் நிலையத்தில்தான் தெரிந்தது. சிவா தான் காரை சடுதியில் ஓட்டி போத்தனூர் ரயில் நிலையத்தில் என்னைக் கொண்டு வந்து விட்டார். அங்கே அந்த ரயில் நிற்கும்.

இதிலும் ஒரு விஷயம் இருக்கிறது. கோவை ரயில் நிலையத்தில் ஒரு ரயில்வே அதிகாரியிடம் “சென்னை எக்ஸ்பிரஸ் எந்த பிளாட்ஃபாரத்திற்கு வரும்? ” என்று கேட்ட போது “மூணாவது பிளாட்பாரம், மூணாவது பிளாட்பாரம், மூணாவது பிளாட்பாரம் ” என்று மூன்று தடவை மிகச் சலிப்புடன் சொன்னார். ஆனால் மூன்றாவது பிளாட்பாரத்தில் உள்ள ஒரு கடையில் விசாரித்த போது அந்தக் கடைக்காரர் வியாபாரக் கூட்டத்தை கவனித்தபடியே சென்னை எக்ஸ்பிரஸ் கோவை வராது என்றும், போத்தனூர் சென்றால் பிடிக்கலாம் என்றும், இப்போதே ஒரு கால் டாக்ஸி பிடித்துச் சென்றால் பிடித்து விடலாம் என்றும் சொன்னார்.

***