ராபித்தும் பள்ளிவாசல் பாங்கும் - கென்

 

(கென்னை எனது மூன்றாவது வாரிசு என்று சொன்னேன் அல்லவா ? அந்த கென் சமீபத்தில் எழுதிய கதை இது)

ராபித்து வருதா பாருடான்னு அம்மா சொன்னாலே எனக்குத்தெரியும் ரெண்டு தேங்கா , ரெண்டு படி அரிசி கொஞ்சம் உளுந்துன்னு போகப்போகுதுன்னு. வாயில பித்தள சொப்பு வச்ச சுருட்டும் , அழுக்கான வெள்ள புர்காவுமா வரும்போதே , எவனையாவது ஒரு கழிசல்ல போறவனேன்னு சாபத்த கொடுத்திட்டே வரும்.

சுருட்டுப்பிடிக்கிற பொம்பளய பாக்க ஊர்க்கார குஞ்சுக்குளுவான்னு எல்லாருமா எங்க வீட்டுக்கு வந்து வேடிக்கைப்பாப்பாங்க.

என்னை எப்போ பாத்தாலும் , ஏண்டி இவளே புள்ளைக்கு நல்ல மீனு ஆனமா காச்சு ஊத்துடி எப்போவும் மொளுத்தண்ணியும் (ரசம் )முருங்கைகீரையுமா கொடுத்து வைக்காதன்னு செல்லமா திட்டும்.

கொஞ்ச நேரம் ஊர்ல ஓடிப்போனவ ஓடிப்போகப்போறவ , பக்கத்து வீட்டுக்காரனோட போயிட்டு வரவன்னு ஊர் நாயத்தை எல்லாம் ஒன்னு விடாம சொல்லிட்டே எனக்குன்னு வந்து பொறந்திருகானுவோ பாரு , நல்ல மைத்துக்கொல்ல பைசாசமானு மொவனப்பத்தி கொறயா சொல்லும்.

ஆளும் பாக்க நல்ல ஓங்குத்தாங்கா , கருப்பா இருந்தாலும் ரெண்டு ஆம்பிளய ஒத்தயா அடிக்கிற மாதிரி இருக்கும். பேச்சும் அப்படித்தான் , முஸ்லீம் தெருவுல எந்த வீட்டு விசேசம்னாலும் ராபித்துதான் சமையல் மேற்பார்வை , தேங்கா அரைக்கிறது , நாட்டுக்கோழி முட்டை வாங்கிக்கொடுக்கிறது தண்ணி நிரப்பித்தரதுன்னு எல்லா வேலயும் செஞ்சிட்டு தர பணத்த வாங்கிக்கும். எப்போவுமே அஞ்சி வேல தொழுகையும் , யா அல்லாஹ்ன்னு வாய் நிறைய ஆண்டவனையுமா பேசிட்டு இருக்கும்.

ஊர் ஜமாத்தில ஒன்னுமண்ணா வெள்ளிக்கிழம ஜீம்மா தொழுகைக்கு போனவங்க , விரல் நீட்டி ஆட்றதுல ஆரம்பிச்சு , ஆமென் சொல்றதுல முட்டிக்கிட்டதுல , ராபித் மவன கத்தியால குத்திட்டாங்க

எங்கோ பழய பொடவ யாவரத்துக்கு போயிட்டு வந்த ராபித்து

ஆங்காரமா மம்முட்டி காம்ப புடுங்கிட்டு போயி ஒத்தப்பொம்பளயா மூனு பேர மண்டைய ஒடச்சிடுச்சி.

இதக்கரவமா வச்சிட்டே இவ ஊரெல்லாம் போயி தேவடியாத்தனம் பண்ரான்னு சொல்லி ஜமாத்தக்கூட்டடி ஊரை விட்டு தள்ளி வச்சிட்டாங்க , மக்கா போயிட்டு வந்த பெரிய மனுசங்க

இனிமே வேலைக்கு ராபித்த யாரும் வீட்டுக்கும் சேக்க கூடாதுன்னு கண்டிசனா சொல்லிட்டாங்களாம் , மைத்தான மைத்துக்கொல்லையிலேயும் இடம் தர மாட்டாங்களாம் , அவனவன் மண்டத்தையல பிரிக்காமலே முடிஞ்ச வரைக்கும் பழி வாங்கிட்டாங்க.

ஒத்தப்பொம்பளயும் வேற எங்கேயும் வேலைக்கு போக முடியாம , ஜமாத்த கூட்டச்சொல்லி கேட்டுப்பாத்திச்சாம் முண்டச்சி சொல்லி கூட்ட மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம் .
அத்தா ரெண்டு எஸ்கேடி பெரிய சுருட்டு வாங்கி தரீயான்னுதான் கேக்கும் எப்போவுமே , அம்மாக்கும் ராபித்து இல்லாம ஊர்க்கத எதுமே தெரியாம போச்சி.
கொஞ்ச நாளான சரியாகிடும்னு பேசாம இருந்து , ராபித்த எல்லாருமே மறந்தே போயிட்டாங்க .. ,

வீட்டில எப்போ தேங்காப்பறிச்சாலும் ராபித்து வருமான்னு பாத்திட்டே இருப்பேன்

பசியும் பட்டினியுமா யாரும் கவனிக்காம கிடந்து ராபித்து செத்துப்போனப்போதான் தெரியும் , மொய்னார காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதாலதான் இந்துவா இருந்து முஸ்லீமா மதம் மாறிடுச்சுன்னு

ராபித்து மவனும் , அவன கத்தியால குத்தினவன் மவனுமா விரல நீட்டி ஆட்டி , ஆமேன் சொல்லி ஒன்னுமன்னா தொழராங்களாம் இப்போல்லாம்

அதிர்ர நகராவோட , பாங்கு சத்தம் எதிரொலிச்சிட்டே இருக்கு