ஸீரோ டிகிரியில் அவந்திகாவின் கதையில் வரும் அந்த ஸ்க்ராப்பர் மூலம் சுரண்டுவதால் ஏற்பட்ட வலியை நீங்கள் வர்ணிக்கும் போது ஏன் தான் பெண்ணாகப் பிறந்தோமோ என்று இருக்கும்....படித்துவிட்டு சிறிது நேரம் திரும்பத் திரும்ப அந்தப் பத்தியை நினைத்துப் பார்த்தேன். கண்ணீரே வந்துவிட்டது...கருக்கொலை செய்வோர் கவனிக்க வேண்டும். இப்போது உங்கள் மகளைப் பார்த்துவிட்டீர்களா-வைப் படித்தபோது நான் நினைத்தது சரியாக இருக்கிறது. நீங்கள் உண்மையில் பெரியவர்தான்...வயது , படிப்பு , அனுபவம் இதில் மட்டுமல்ல... நடைமுறையிலும் , பண்பிலும் பெரியவர் எனக் கூறுகிறேன். நான் உங்களுக்கு சர்டிபிகேட் கொடுக்கவில்லை....உண்மையில் என் மனதில் பட்டதை சொல்கிறேன். சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...உணர்ச்சிவசத்தால் அல்ல....
நீங்கள் புதிய புதிய பிரெஞ்ச் , ஐரோப்பிய , அராபிய எழுத்தாளர்களைக் குறிப்பிடுகிறீர்கள்..அவர்கள் எழுதிய புத்தகம் எங்கு கிடைக்கும் ? அவர்கள் எழுதிய சிறந்த புத்தகங்கள் எவை என்று கூறுங்கள். அதை நீயே தேடிப் படி என்று சொல்லாதீர்கள். உங்கள் வாசகனாக இருக்க எனக்குத் தகுதி தேவைப் படுகிறது. ஒரு எழுத்தாளனாக ஆகமுடியாவிட்டாலும் ,.. உங்களால் ஒரு நல்ல வாசகனாக உருவாக வேண்டுமென்பது என் விருப்பம்.
கருப்புத் தொகுப்பில் புதுமைப்பித்தன் பற்றிய உங்கள் விமர்சனக் கட்டுரை படித்தபோதுதான் அவரைப் பற்றி என்னிடம் இருந்த மாயை விலகியது. உங்களுடய சமரசமற்ற தெளிவான விமர்சனப் பார்வை , உங்கள் எழுத்தை தேடிப் படிக்க வைக்கிறது. மனோஜ் பற்றி நீங்கள் அறிமுகம் செய்ததாலேயே நான் புனைவின் நிழல் தொகுப்பை வாங்கிப் படித்தேன். அதற்கு முன் கடையில் பார்த்திருந்தாலும் வாங்க மனமில்லை. ஆனால் படித்தபின் தான் அதன் அருமை புரிந்தது.
5, 6 வருடங்களுக்கு முன் நக்கீரன் என நினைக்கிறேன்...ஸீரோ டிகிரி எனும் நாவல் மக்கள் பதிப்பு வெறும் ரு. 30 என விளம்பரம் படித்து , அனுப்பி வாங்கினேன்.
அவ்வளவாக செலவு செய்யமுடியாத காலம்.. ஆனால் அவ்வாறு உங்களுடய அனைத்துப் புத்தகங்களும் வெளிவந்தால் அதன் ரீச் பிரமாண்டமாக இருக்குமே...அத்தகைய திட்டம் எதாவது உண்டா ?.. புத்தக விலையே வாங்கமுடியாத அளவு இருப்பதால்தான் விகடன் குமுதம் வாங்குவோர் இலக்கியப் பக்கம் வருவதில்லை என நினைக்கிறேன். .உங்கள் விமர்சனம் , உங்கள் எழுத்து எல்லோராலும் படிக்கப்படவேண்டியவை...அதற்கு தசாவதாரம் ஒரு சோறு பதம். அந்தப் பிரதியை நண்பர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன்...இணைய தளத்தையும் அறிமுகம் செய்துள்ளேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
ரகுநாதன்
கோவை

பதில்: புத்தகங்களின் விலை பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். ஒரு கிலோ வஞ்சிரம் மீனின் விலை 400 ரூ. அதனால் புத்தகங்களையும் அதே விலை கொடுத்து வாங்குவதில் தப்பில்லை. புத்தகங்களின் தயாரிப்புச் செலவு அப்படி இருக்கிறது.
என் நூல்கள் பலரிடமும் சென்றடைவது பற்றி எனக்கு எந்தவிதத் திட்டமோ அபிப்பிராயமோ எதுவும் இல்லை. சுஜாதா பலரிடமும் சென்றடைந்தார். ஆனால் அவருக்கு இந்தச் சமூகம் எதையும் கொடுக்கவில்லை. அவர் நல்ல வேலையில் இருந்ததால் என்னைப் போல் கஷ்டப்படவில்லை. அவ்வளவுதான்.
மழை பொழிவது போல் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல் வெளியே வந்து இந்த மழையில் நனைவதும் நனையாததும் அவரவர் இஷ்டம்.
நான் ஒன்றும் பெரியவர் இல்லை. இப்படியெல்லாம் சொன்னால் அலெக்ஸ் மட்டும்தான் மகிழ்ச்சி அடைவான். என் தோழிகள் கோபித்துக் கொள்வார்கள்.
நானும் உங்களைப் போன்றவன் தான். சாமானிய மனிதனுக்குள்ள அத்தனை ஆசாபாசங்களும் , குற்றம் குறைகளும் நிரம்பியவன் தான் ஆனால் கூடுமானவரை அடுத்த மனிதரைத் துன்புறுத்தாமல் வாழ வேண்டும் என்று நினைப்பேன்.
நான் குறிப்பிடும் ஐரோப்பிய , அராபிய எழுத்தாளர்களின் நூல்கள் அமேஸானில் கிடைக்கின்றன. மேலும் கணினியில் தேடினால் அவர்களின் நேர்காணல்கள் , சிறுகதைகள் போன்றவைகளும் கிடைக்கும்.
22.8.2008.
5.00 a.m.
* * *