டியர் சாரு,
உங்கள் எழுத்துக்களைப் படிப்பது வெகு சுவாரசியம். அதிலும் குறிப்பாக உங்கள் பதில்கள்...
ருவாந்தாவிலிருந்து சுந்தர் எழுதியிருப்பதைப் போல் உங்கள் எழுத்து எங்களுக்கெல்லாம் அதீத உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் தருகின்றன.
உள்நாட்டில் இருக்கும் போது அவ்வளாகத் தெரியவில்லை. வெளிநாட்டில் இருந்து படிக்கும்போது தான் தமிழில் படிப்பது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
இங்கே நைஜீரியாவிலிருந்து பணம் அனுப்புவது என்பது சாத்தியமில்லை ஆகையால் உங்களுடைய ஸீரோ டிகிரியை இப்போது என்னால் படிக்க முடியாது என்று நினைக்கிறேன். இந்தியா வரும் போதுதான் உங்களுடைய எல்லாப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வர வேண்டும்.
அங்கே இருக்கும் போது என் சம்பளத்திலிருந்து மாதம் 200 ரூ. சேமித்து வைத்து புத்தகச் சந்தையின் போது 2500/- ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்குவேன். அந்தச் சமயத்தில் உங்களை எனக்குத் தெரியாமல் போனதே என்று இப்போது மிகவும் வருத்தமடைகிறேன். சிங்கப்பூரில் உள்ள என் நண்பர் ஓம் ஷங்கர்தான் உங்களை எனக்கு அறிமுகம் செய்தார். ஓம் ஷங்கருக்கு நன்றி.
நான் இந்தியா வரும்போது ஒருநாள் மாலையில் அடையார் கேட் ஓட்டலில் சந்திப்போம்.
இப்போது உங்களிடம் இரண்டு கேள்விகள்:
1. நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது உங்களோடு தமிழ் நண்பர்கள் இல்லாத நிலையில் தமிழ்ப் பேச்சை யதேச்சையாகக் கேட்க நேரும் போது என்ன செய்வீர்கள்?
2. வெளிநாட்டுத் தமிழர்கள் வெளி நாட்டில் வாழும் மலையாளிகளைப் போல் ஏன் ஒற்றுமையாக இருப்பதில்லை?
உங்களுக்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்தைத் தர பிரார்த்திக்கிறேன்.
மிக்க அன்புடன்,
ராகவன்,
FCT, Abuja, நைஜீரியா.

பதில்:
1.தமிழ் சத்தம் கேட்டால் அந்த இடத்தை விட்டே தலை தெறிக்க ஓடி விடுவேன். பிற நாட்டினரையும், பிற கலாச்சாரங்களையும் பார்ப்பதற்குத்தானே வெளி தேசம் செல்கிறேன். அங்கே போய் என்னுடைய மச்சான் மாமனுடன் எதற்கு உறவு கொண்டாட வேண்டும்? அப்படியே போய் பேசினாலும் அவர்கள் தமிழ் சினிமா தவிர வேறு எதைப் பேசப் போகிறார்கள்?
நேற்று ஒரு நண்பரிடம் அலெக்ஸ் என்னை அறிமுகப்படுத்தினான். பெயரைச் சொன்னதோடு விட்டிருக்கக் கூடாதா? எழுத்தாளர் என்ற அடைமொழி வேறு. உடனே பிடித்து விட்டார் நண்பர். “சினிமாவுக்கு எழுதுகிறீர்களா அல்லது நாவல் மாதிரி? ”
நான் “நாவல் மாதிரி ” என்றேன்.
ஓரான் பாமுக்குக்கோ ஸல்மான் ருஷ்டிக்கோ இப்படி ஒரு அவமானம் நடக்குமா?
எனக்கு பாரதிக்கு இருந்த மாதிரி கற்பிதங்கள் ஏதும் இல்லை. அவன் வாழ்ந்த காலம் அப்படி. அந்நியர்களின் ஆதிக்கத்தில் இருந்தது நாடு. எனவே இந்த மண்ணின் மீதும் இந்த மொழியின் மீதும் அதீதமான பற்றுதல் இருக்க வேண்டியிருந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எனக்கு இந்தியாவும் ஒன்றுதான்; நைஜீரியாவும் ஒன்றுதான்.
தமிழ் மொழியின் மீது எனக்கு ஒன்றும் விசேஷமான பற்றோ பாசமோ கிடையாது. எனக்கு எல்லா மொழியும் ஒன்றுதான். யாதும் ஊரே யாவரும் கேளிர்.
மேலும், நான் எந்த ஊரிலும் அந்த ஊர்க்கார நண்பர்களிடையே தான் இருப்பேன். தமிழர்களோடு சேரவே மாட்டேன். பாங்காக் சென்றிருந்த போது காஞ்சனா என்ற பாலியல் தொழிலாளியை சிநேகம் பிடித்துக் கொண்டு லாவோஸ் எல்லை வரை அவளோடு சுற்றினேன். அந்தக் கதையெல்லாம் ராஸ லீலாவில் உண்டு.
எழுத்தை விட நேரில் அதிக வசியம் பண்ணுவேன் என்பதால் எப்போதுமே எங்குமே இளைஞர் கூட்டத்தில் தான் இருப்பேன்.
வெளிநாட்டில் வாழும் மலையாளிகள் கூட என்னிடம் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். தமிழர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கும் போது மலையாளிகள் மட்டும் ஏன் பிரிந்து கிடக்கிறார்கள் என்று என்னைக் கேட்காத மலையாளியே கிடையாது. இதே போல் ஒரு இந்திக்காரர் கேட்பார்; சீக்கியர் கேட்பார். உலகம் பூராவும் இப்படி ஒரு மனோபாவம் உண்டு. இது ஒரு நல்ல விஷயம்தான். நம்முடைய ஆட்கள் மட்டும் ஏன் உருப்படாமல் கிடக்கிறார்கள் என்று ஒவ்வொரு இனத்துக்காரரும் நினைக்கிறார். அளவோடு இருந்தால் அவ்விதமான சுய அபிமானம் நன்மை தரக் கூடியதுதான். ஆனால் எனக்கு அப்படிப் பட்ட இன உணர்வு எதுவும் இல்லை.
நைஜீரியாவில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு. பெயர் Helon Habila. அவரைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். இப்போது அவர் வாஷிங்டனில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். அவரைப் பற்றி உங்கள் நைஜீரிய நண்பர்களிடம் விசாரித்துப் பாருங்கள்.
22.8.2008.
2.30 a.m.
* * *