கடிதமும் பதிலும்

 

 

(Guru with Friends , Bangalore Meet )

அன்புள்ள சாருவுக்கு,

எனக்கு உங்களைப் பற்றி அதிகம் தெரியாது. நான் ஓரளவு வாசிப்பதில் ஆர்வம் உள்ளவன். தமிழில் சுஜாதாவின் எழுத்துக்களை அவ்வப்போது படித்திருக்கிறேன். பிற எழுத்தாளர்களைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. (உங்களையும் தான்).

நான் கமலின் ரசிகன். என் நண்பர்கள் சொன்னார்கள், நீங்கள் சரமாரியாக தசாவதாரத்தை விமர்சித்து இருக்கிறீர்கள் என்று. சரி, யார்டா இவன்; இவனைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று உங்கள் இணைய தளத்துக்கு வந்தேன். ஒரு சில பதிவுகளைப் படித்தேன். மிகவும் பிடித்துப் போனது.

உங்கள் எழுத்துக்கள் அனைத்தையும் வாசித்து விடத் துடிக்கிறேன். எனக்கு ராம் ஷங்கர் என்று ஒரு நண்பன் இருக்கிறான். அவன் உங்கள் எழுத்துக்களைப் படித்து இருக்கிறான். இப்போதும் படிக்கிறான். அவன் உங்களைப் பற்றி இப்படித்தான் சொல்லி இருக்கிறான். “அவன் சரியான மண்டைக்கனம் பிடித்தவன் டா .”

ஒரு கலைஞனுக்குத் தனது படைப்புகளின் மீது கண்டிப்பாக நம்பிக்கை இருக்க வேண்டும். உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. எனக்கு உங்களின் எழுத்து நடை பிடித்து இருக்கிறது; உங்களையும்தான்.

தொடர்ந்து எழுதுங்கள். என்னையும் உங்கள் வட்டத்தில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

அன்புடன்

வினோத் பாபு.

19.8.2008.

நன்றி வினோத் பாபு. ஒரே ஒரு தன்னிலை விளக்கம். எனக்கு மண்டைக்கனம் போன்ற வியாதிகள் எப்போதுமே வந்ததில்லை. ஒருவன் ஆறரை அடி உயரம் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் தன் உயரத்தை ஆறரை அடி என்று சொல்லாமல் நான்கு அடி என்றா சொல்லுவான்? அதே போல்தான் உலக இலக்கியத்தின் வாசகன் என்ற முறையில் எனக்கு என் எழுத்தைப் பற்றியும் ஒரு மதிப்பீடு இருக்கும் அல்லவா? அதைத்தான் சொல்லுகிறேன். போலியான அவையடக்கம் எனக்குப் பிடிக்காது. கண்ணதாசனையும், ஜெயகாந்தனையும் விடவா எனக்கு மண்டைக்கனம் அதிகம் என்று சொல்லுகிறீர்கள்?