கேள்வி பதில்

 

 

கேள்வி:

1. ஏன் நீங்கள் பியானோ டீச்சரை தமிழில் மொழி பெயர்க்கக் கூடாது?

2. எஸ். ராமகிருஷ்ணன் எழுத்தில் என்ன குறைபாடு?

3. உங்கள் நண்பர்கள் போல எனக்குக் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்?

(பாலமுரளி கிருஷ்ணா. ஆர்.. பெங்களூர்)

பதில்: உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன்பு உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி. ஆமாம், பெங்களூரிலேயே இருந்து கொண்டு பெங்களூரில் நடந்த வாசகர் சந்திப்புக்கு ஏன் நீங்கள் வரவில்லை?

1.பியானோ டீச்சரை நான் ஏன் மொழி பெயர்க்க வேண்டும்? எனக்குப் பிடித்த நாவல்கள் ஒரு ஐநூறு இருக்கும். அவ்வளவையும் மொழி பெயர்க்க முடியுமா என்ன? மேலும், நானே பியானோ டீச்சரை விட நல்ல நாவலை (ராஸ லீலா) எழுதியிருக்கிறேனே?

2. எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்தில் ஏன் குறைகளை மட்டுமே பார்க்க வேண்டும்.? அவரிடம் எனக்குப் பிடித்தவை ஏராளம் உண்டு. அவருடைய பேச்சு, சிறுகதைகள், உயிர்மையில் எழுதும் கட்டுரைகள் என்று நிறைய சொல்லலாம். ஆனால் விகடனில் எழுதும் போது மட்டும் ஏன் ரொம்ப அழுவாச்சியாக எழுதுகிறார் என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். தயவு செய்து அதை அவரிடமே கேளுங்கள் என்று ரீ-டைரக்ட் செய்திருக்கிறேன்.

3. என் நண்பர்களைப் போல் உங்களுக்குக் கிடைக்க நீங்கள் சாருவாக மாற வேண்டும். அது முடியாது. எனக்கும் இந்தப் பாடாவதி சென்னையை விட்டு விட்டு உங்களைப் போல் பெங்களூரில் வசிக்க வேண்டும் என்று ஆசை. முடியுமா? ஒருவரை ஒருவர் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட வேண்டியதுதான்.

நேற்று என்னுடைய தோழி பானு சொன்னாள்... ” உன்னைப் போல் யாருமே காதலிக்க முடியாது ” என்று. அப்படி என்ன விசேஷம் என்று நான் கேட்கவில்லை. ஒருவேளை எல்லாக் காதலிகளுமே தங்கள் காதலன்களிடம் அப்படிச் சொல்வார்களாயிருக்கும். அல்லது...சரி வேண்டாம். காதலோ நட்போ அது எதுவாக இருந்தாலும் அதில் நான் தீவிரமாக இருப்பேன். காரியம் சாதித்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல நோக்கம் இல்லாமல் நட்பில் நேர்மையைக் கடைப் பிடிப்பேன். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் சரி, நட்புக்காக அதை இழக்கத் தயங்க மாட்டேன்.

சிலுக்கு ஸ்மிதா போன்ற பேரழகி ஒருத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் சொன்னாள்... ” சாரு, உனக்காக நான் சொர்க்கத்தையே காண்பிக்கிறேன்; அலெக்ஸின் நட்பை மட்டும் விட்டு விடு.. ” சொன்னது மட்டும் அல்ல; நான் இருதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் கிடந்த போது எனக்காக அவள் எடுத்துக் கொண்ட சிரமங்களை வார்த்தைகளில் எழுத முடியாது. அந்த அளவுக்கு என்னை நேசித்த ஒரு தோழியை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. போதாக்குறைக்கு நல்ல வசதி படைத்தவள் வேறு.

எல்லாவற்றையும் விட பெரிய விஷயம், அவந்திகாவுக்கும் அவளை ரொம்பவும் பிடிக்கும். அவள் இருக்கும் இடம் சந்தோஷத்தினால் மட்டுமே நிறைந்திருக்கும். எப்போதும் அப்படி ஒரு சிரிப்பு. வயது 27 இருக்கலாம். ஆனால் பார்க்க அதை விட இளமையாகத் தோன்றுவாள். அவளுடைய நட்பை ஒரு வரம் எனவே நினைத்துக் கொண்டாடினேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஏதாவது ஒரு விசேஷமான பரிசுப் பொருளை எனக்காகக் கொண்டு வருவாள். மொத்தத்தில் அவள் ஒரு அற்புதம்.

ஆனால் அவளுக்காக அலெக்ஸின் நட்பை நான் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. நட்போ காதலோ எதுவாக இருந்தாலும் அது எந்தவித நிபந்தனைகளும் அற்றதாக இருக்க வேண்டும். என்று நம்புகிறவன் நான் வாஸ்தவத்தில் பார்த்தால் அலெக்ஸ் எனக்கு அவ்வப்போது நரகத்தைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறான். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மாதத்தின் 15ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை அந்த நரகத்தில் என் கைப்பிடித்து அழைத்துச் செல்வான்.

இதோ இப்போது கூட பாருங்கள்; நேற்று பானுவுக்கு போன் போட்டு ”20 ஆம் தேதி வரை நீ சாருவைப் பார்க்கவோ பேசவோ கூடாது; அவன் எனக்குத் தர வேண்டிய கட்டுரையை எழுதிக் கொடுத்த பிறகுதான் நீ அவனோடு பேசலாம் ” என்று உத்தரவு போட்டு இருக்கிறான். இதற்காக அவனை நான் கோபிக்க முடியுமா? அலெக்ஸ் என் நண்பன்.

எனக்கு சொர்க்கத்தைக் காண்பித்த அந்த தேவதையிடம் அவள் கேட்டதைத் தர முடியாது என்று மறுத்து விட்டேன். என்னுடைய பதிலால் அவள் மிகவும் காயமடைந்து விட்டாள் என்று தெரிந்தது. இரண்டு ஆண்டுகளாயிற்று அவள் என்னோடு பேசி.

நட்புக்காக இப்படி ஒரு முடிவை நீங்கள் எடுக்க முடியுமா? ஆம் எனில் வெறும் மனிதர்கள் அல்ல; கடவுளர்களே உங்களுக்கு நண்பர்களாக வருவார்கள் – என்னுடைய நிக்கி, வெங்கி, குரு, விவேக், தங்கவேல், பானு ஆகியோரைப் போல்!

***

18.8.2008.

10.40 a.m.