“ வரலாற்றின் மிகப் பெரிய கொடூரத்தை அனுபவித்த ஒரு இனம் எப்படி அதே விதமான கொடூரத்தை மற்றொரு மனிதக் கூட்டத்தின் மீது பிரயோகிக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் ” : லுப்னா ஹுசேன் சவூதி எழுத்தாளர்
“ உங்களுக்கு சிகரெட் பற்ற வைக்க ஒரு தீக்குச்சி கிடைக்கவில்லையெனில் ஒருதேசத்தையே கொளுத்தி விடுங்கள் ” சிரியாவைச் சேர்ந்த கவிஞரும் நாடாகாசிரியருமான Mohammed al-Maghout எழுதிய Stand up, Sit Down, Shut up என்ற நாடகத்தில் வரும் வசனம்.
ஒரு தேசம் செய்த ரவுடித்தனத்தால் அதற்கு அடுத்த தேசத்திலிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடத்தையும் உடைமைகளையும் விட்டு அகதிகளாக ஓட வேண்டியதாகியது.
“ ஓடுங்கள் இந்த இடத்தில் குண்டு போடப் போகிறோம் ” என்று ஆகாயத்திலிருந்து துண்டுச் சீட்டுகளை வீசியது மனிதாபிமானமுள்ள அண்டை நாட்டு ராணுவம்.
1948 1967 1982 1996 என்று ஐந்து முறை இப்படி நடந்திருக்கிறது இப்போது 2006 இல் ஆறாவது முறை உலக நாடுகள் வாய்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன ஐநா சபை என்பது அமெரிக்காவின் அயலுறவுத்துறை என்பதாக சுருங்கிப் போனது.
லெபனானிருந்து இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இரண்டு இஸ்ரேலிய ராணுவச் சிப்பாய்களை கடத்தியதற்காக லெபனான் மக்கள் அனுபவித்த துயரக் கதைகள் ஏராளம் ஜூலை 30- ஆம் தேதி கானா ( Qana ) நகரில் 37 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். அக்குழந்தைகளில் பலரும் ஏற்கனவே நடந்த குண்டு வெடிப்பினால் கை கால் இழந்தவர்களாயிருந்தனர். அவர்களைத் தூக்கிக் கொண்டு அவர்களின் பெற்றோரால் மேலே வடக்கு நோக்கிச் செல்ல முடியவில்லை.
லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் நாம் பார்க்கும் பெரும்பாலான குழந்தைகள் கை கால் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். மாயாஜாலக் கதைகளில் வரும் குள்ளர்களின் தேசத்தைப் போல் அந்த இரண்டு நாடுகளும் கை கால் இழந்தவர்களின் தேசங்களாகக் காட்சியளிக்கின்றன.
1982 ஆம் ஆண்டு ஜூனிலிருந்து ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் இஸ்ரேலிய ராணுவ விமானங்கள் லெபனானிலுள்ள பாலஸ்தீனிய அகதி முகாம்களின் மீதும், மருத்துவமனைகளின் மீதும், போரினால் பெற்றோரையும் உறவினரையும் இழந்த அனாதைக் குழந்தைகள் தங்கியிருந்த இல்லங்களின் மீதும் குண்டு வீசின. அக்குண்டு வீச்சினால் அந்த இடங்களில் தங்கியிருந்த சிறுவர்கள் பலர் இறந்து போயினர். ஏற்கனவே நடந்த குண்டு வீச்சில் அவர்கள் தங்களுடைய கை கால்களை இழந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பதும், அவர்கள் தங்கியிருந்த மருத்துவ மனைகளின் கூரைகளில் ஆகாய விமானங்களிலிருந்து பார்க்கக் கூடிய விதமாக மிகப் பெரிய வெள்ளைநிறச் சிலுவைகள் வரையப்பட்டிருந்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
1948 இலிருந்து தொடர்ந்து வரும் கதை இது.
பாலஸ்தீனிய கிராமங்களில் Haganah ராணுவத்தினர் பாலஸ்தீனிய மக்களைக் கொன்று குவித்தனர் ( 1920 முதல் 1948 வரை இயங்கி வந்த யூதர்களின் தலைமறைவு ராணுவம் இது கிட்டத்தட்ட ஹிட்லரின் நாஜி ராணுவத்தைப் போன்ற ஹகானாவின் இலக்கு : முஸ்லீம்கள்) இந்தக் கதையை பற்றிக் கேள்விப்பட்ட அடுத்தடுத்த தலைமுறையினர் இப்போது அதே கதை தங்கள் வாழ்க்கையிலும் நடப்பதைப் பார்த்தனர்.
ஜூலை 28 ஆம் தேதி 2006 அன்று மட்டும் 30 பாலஸ்தீனியர்கள் தங்கள் முகாம்களை விட்டு வெளியேறக் கூட முடியாதபடி தகர்க்கப்பட்டு குண்டு வீச்சுக்கு ஆளாகி இறந்து போயினர். இந்தச் செய்தி பத்திரிக்கையின் மூலையில் ஒரு இடத்தில் இடம் பிடித்திருந்தது இவ்வளவுக்கும் காரணமான இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஆதரவு அளித்து வருகின்றன.
***

("Shi'a" Muslims make their way to the Imam Husayn Shrine in Karbala, Iraq in 2008)
ஹிஸ்புல்லா இயக்கத்தினால் இரண்டு இஸ்ரேலிய ராணுவத்தினர் கடத்தப்பட்டதற்கான காரணம் என்ன ? ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களும் லெபனியர்களும் இஸ்ரேலால் கடத்திச் சிறை வைக்கப் பட்டிருக்கின்றனர்.
மட்டுமல்லாமல் 2000 ஆம் ஆண்டு தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேல் தனது ராணுவத்தைத் திரும்ப அழைத்துக் கொண்டதிலிருந்து தினந்தோறும் எல்லை கடந்து வந்து குண்டு வீசுவதும் அப்பாவிப் பொது மக்களைக் கொல்வதும் இஸ்ரேல் ராணுவத்தின் வழக்கமாக இருந்து வருகிறது.
அதைத் தொடர்ந்துதான் ஜூலை மாதம் லெபனானுக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ராணுவம் லெபனானிலிருந்த மின் நிலையங்கள் பாலங்கள் தொழிற்சாலைகள் சாலைகள் என்று அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படையாக உள்ள இடங்கள் அனைத்திலும் குண்டு வீசியிருக்கிறது. தெற்கு லெபனானிலுள்ள பல கிராமங்கள் அழிக்கப்பட்டு விட்டன.
***
இஸ்ரேலின் பிரச்சினை என்னவென்றால் அது பாலஸ்தீனியர்களையும் அவர்களுக்கு ஆதரவு அளித்து வரும் லெபனானியர்களையும் அவர்களுடைய பூமியை விட்டு விரட்ட நினைக்கிறது எதிர்ப்பவர்களை ‘ பயங்காரவாதிகள் ’ என்று முத்திரை குத்துகிறது.
***
இஸ்ரேலின் சமீபத்திய ஜூலை ஆக்ரமிப்பினால் இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். ஆனால் இந்தச் செய்தி மேற்கத்திய ஊடகங்களில் ( உதாரணமாக பிபிசி, சிஎன்என்) வெளி வரவில்லை அதிக அளவு தணிக்கை செய்யப்பட்ட பிறகே செய்திகள் வெளிவந்தன.
***
ஜூலை 30 (2006) அன்று இஸ்ரேல் கானாவில் ( Qana ) நடத்திய படுகொலையை ‘ அரசு பயங்கரவாதம் ’ என்றே அராபிய அரசியல் விமர்சகர்கள் வர்ணிக்கின்றனர்.
இதேபோல் 1996 ஆம் ஆண்டிலும் இதே கானா நகரில் ஐநாவின் பாதுகாப்பு முகாமிலிருந்து பொதுமக்கள் மீது குண்டு வீச்சு நடத்தியது இஸ்ரேல். அந்த குண்டு வீச்சுக்கு உத்தரவிட்டு அதை மேற்பார்வையும் செய்தார் அப்போதைய இஸ்ரேலியப் பிரதமர் ஷிமோன் பெரஸ்.
முகாமிலிருந்து 100 அப்பாவிப் பொதுமக்கள் அந்த குண்டு வீச்சில் இறந்தனர். செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோது “ ஏன் அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள் ? என்ற கேள்வி அமெரிக்க மக்களால் திரும்பத் திரும்ப கேட்கப்பட்டது. அந்த அமெரிக்க மக்களுக்கு கானா நகரில் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிதைந்து கிடந்த குழந்தைகளின் பிணங்களைப் பற்றி எதுவும் தெரியாது என்பதுதான் துரதிர்ஷ்டம்.
***
கானா நகரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள ஒரு கட்டிடத்தின் மீது ஜூலை 30 அன்று இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசியதில் 60 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் ஈரானும் சிரியாவும் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு உதவக் கூடாது என்று பெரும் சப்தமிடும் அமெரிக்கா இஸ்ரேலின் பயங்கரவாதத்துக்கு மில்லியன் கணக்கான டாலர்களை வழங்கி வருகிறது.
***
Mosque in Karbala (1932)
லெபனானில் இஸ்ரேலின் ஆக்ரமிப்பை எதிர்த்த ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடைசிவரை இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கவில்லை.ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான சையத் நஸ்ரல்லா இதுவரை ஒரு பயங்கரவாதியாகவே உலகம் முழுவதும் சித்தரிக்கப்பட்டு வந்தார். ஆனால் இப்போது அவரைப் பற்றிய சித்திரம் மாறிவிட்டது.
“ இஸ்ரேல் பெய்ரூட்டின் மையத்தைத் தாக்கினால் தவிர நாங்கள் டெல் அவிவ் நகரைத் தாக்க மாட்டோம் ” என்று கூறினார் நஸ்ரல்லா. ஜூலை மாதம் நடந்த இஸ்ரேலியத் தாக்குதலின் காரணமாக அராபிய நாடுகளுக்குள் ஏற்பட வேண்டிய ஒற்றுமை பற்றி வயுறுத்தப்படுகிறது. அந்த ஒற்றுமை நஸ்ரல்லா மற்றும் ஈரானிய அதிபர் அஹ்மதி நிஜாத் மூலமாக ஏற்படும் என்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.
1967 இல் எகிப்து, ஜோர்டான், சிரியா என்ற நாடுகளின் முத்தரப்பு ராணுவத்தையும் ஆறு தினங்களில் முறியடித்த இஸ்ரேல் ராணுவம் கடந்த ஜூலையில் ஒரு மாத குண்டு வீச்சுக்குப் பிறகும் லெபனானை வீழ்த்த முடியாமல் பல அப்பாவி மக்களின் வசிப்பிடங்களை அழித்து விட்டுப் பின் வாங்கி விட்டது. இதற்கிடையில் அமெரிக்கா அளித்த அதி நவீன போர் சாதனங்களை இஸ்ரேல் இந்த ஆக்கிரமிப்பின்போது பயன்படுத்தியது.
இஸ்ரேல் ராணுவம் 5 லட்சம் துருப்புகளைக் கொண்டது ஹிஸ்புல்லாவிடம் இருந்த போராளிகளோ வெறும் 5000 மட்டுமே. இருந்தும் இஸ்ரேல் ராணுவம் தோற்றுப் போய் பதுங்கி விட்டதற்குக் காரணம் இஸ்ரேலிய அரசு முஸ்லீம்களுக்கு மட்டுமல்லாமல் யூதர் மற்றும் கிறிஸ்துவர்களின் நலன்களுக்கும் கூட எதிராக இருந்ததுதான் மற்றொரு முக்கியமான காரணம்.
இதற்கு மாறாக ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவுக்கு லெபனான் மக்கள் உணர்ச்சிகரமான ஆதரவு அளித்தனர். அவர்கள் நஸ்ரல்லாவைத் தங்களின் தலைவராகவும், தங்களுக்காக எதையும் செய்யக் கூடியவராகவும் கருதினர்.
ஜூலை ஆக்ரமிப்புக்குப் பிறகு முஸ்லீம் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களும் அவரைத் தங்கள் தலைவராக கொண்டாடுகின்றனர்.
சையத் ஹாசன் நஸ்ரல்லா (வயது 47) மற்ற அரசியல் தலைவர்களைப் போன்றவர் அல்ல. அவரைப் பற்றிய எந்த விபரங்களும் யாருக்கும் தெரியாது. அவர் திருமணமானவரா என்ற கேள்விக்குக் கூட சற்று யோசித்துத்தான் பதில் கூறுகிறார்கள். அவருடைய மூத்த மகன் இஸ்ரேலை எதிர்த்து நடந்த எல்லைப்புற சண்டையில் இறந்து விட்டான். இப்போது அவருக்குத் தங்குவதற்கு வீடு கிடையாது வீடு இஸ்ரேலிய குண்டு வீச்சில் தரைமட்டமாகிவிட்டது.
இவ்வளவு இழப்புக்குப் பிறகும் சையத் நஸ்ரல்லா இன்று அராபியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறவராக விளங்குகிறார்.
சமீபத்தில் இரண்டு ஆவணப் படங்கள் பார்த்தேன் Shi’ism : Waiting for the Hidden Imam இயக்குனர்கள் : Said Bakhaoui & Mohammed Balout இரண்டாவது படம் : The Road to Kerbala. இயக்குனர் : Katia Jarjoura. இந்த இரண்டு படங்களுமே சென்ற ஆண்டு தயாரிக்கப்பட்டவை இரண்டுமே 53 நிமிட படங்கள்
ஷியா பிரிவு என்பது அலி மற்றும் அலியின் புதல்வரான உசேன் இருவரும் கொல்லப்பட்ட காலத்திலிருந்து துவங்குகிறது என்பது நமக்குத் தெரியும். இன்றைய உலகின் 100 கோடி முஸ்ஸிம் ஜனத்தொகையில் 10 சதவிகிதம் பேர் ஷியாக்கள்.
‘ கர்பலாவை நோக்கிய சாலை ’ யின் இயக்குனர் கதியா ஜர்ஜூரா லெபனானில் பிறந்து தற்சமயம் கனடாவில் வசிக்கும் பெண்.
கிபி ஏழாம் நூற்றாண்டில் அலியின் புதல்வரும் முகம்மது நபிகள் பேரருமான உசேன் அப்போது வாழ்ந்த யாசித் என் காலிஃபின் (மதகுரு) அநீதிகளை எதிர்த்ததால் கர்பலாவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டவர். இரண்டு படங்களிலும் உசேனின் மரணமும் தியாகமும் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸன்னி மற்றும் ஷியா பிரிவினருக்கு இடையேயுள்ள ஒரு வித்தியாசம் : ஸன்னி பிரிவு இமாமின் முக்கியத்துவத்தை வயுறுத்தவதில்லை. ஆனால் ஷியா பிரிவு இமாம்களை புனித நூலுக்கு சரியான அர்த்தத்தைத் தருபவர்களாகக் கருதுகிறது.
ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் பனிரெண்டாவது இமாம் முகம்மது அல்-மஹதி. அவர் மற்றவர்களைப் போல் மரணமடையவில்லை திடீரென்று ‘ மறைந்து ’ விட்டார் ; இந்த உலகம் அழியப் போகும் தருணத்தில் மீண்டும் வருவார் என்று நம்புகின்றனர் ஷியா பிரிவினர்.
இமாம்களின் முக்கியத்துவம் குறித்து இன்னமும் இரு பிரிவினரிடையே விவாதம் நடந்து வருகிறது.
ஈரானின் அரசியல் சாசனப்படி அயோத்துல்லா (தலைமை குரு)தான் எல்லா அரசியல் மற்றும் மத சம்பந்தமான நிறுவனங்களின் தலைவர். இரண்டு படங்களிலுமே ஈராக்கின் அயோதுல்லா சிஸதானி பற்றிய தகவல்கள் தரப்படுகின்றன. 1979 இல் ஈரானில் ஏற்பட்ட புரட்சியே உலகின் முதல் ஷியா அரசை ஏற்படுத்தியது. இப்புரட்சி மத்திய கிழக்கு அரசியலில் ஏற்படுத்தி வரும் தாக்கங்களைப் பற்றியும் இப்படங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
முக்கியமான தாக்கம் லெபனானின் ஹிஸ்புல்லா ஹிஸ்புல்லா ஷியா பிரிவினரால் துவக்கப்பட்டதுதான். ‘ கர்பலாவை நோக்கிய சாலை ’ யில் அதன் இயக்குனர் கதியா ஜர்ஜுரா ஷியாக்களின் புனித மாதமான அஷுராவில் கர்பலாவை நோக்கி யாத்திரை மேற்கொள்வது படமாக்கப்பட்டுள்ளது (பாக்தாதிலிருந்து 100 கிமீ தூரத்தில் உள்ளது கர்பலா).
ஈராக்கினுள் அமெரிக்க ராணுவம் நுழைந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் பயணம் படமாக்கப்பட்டிருந்ததால் பயணப் பாதை நெடுகிலும் அமெரிக்கத் துருப்பினர் நின்று கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
கர்பலாவை நோக்கிச் செல்லும் ஊர்வலத்தினர் தங்களைத் தாங்களே கசையால் அடித்துக் கொண்டே செல்கின்றனர். இதைப் படமாக்கியிருக்கும் இயக்குனர் அதே சமயத்தில் இச்சடங்கு தேவையில்லாதது என்று கூறும் ஷியா அறிஞர்களின் பேட்டிகளையும் பதிவு செய்திருக்கிறார்.
ஜர்ஜுராவுடன் கர்பலாவுக்குப் பயணம் செய்திருப்பவர் ஈராக்கிய கவிஞரும் நாவலாசிரியருமான ஹமீத் அல்-முக்தார்.
***