கனிமொழிக்கு ஒரு கடிதம்

 

 

( Charu Nivedita with Kanimozhi )

அன்புள்ள கனிமொழி,

வணக்கம்.

சமீபத்தில் 2.8.2008 தேதியிட்ட தினமலர் நாளிதழில் தங்களுடைய புகைப்படத்தைப் பார்த்தேன். அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இப்போதெல்லாம் தங்கள் புகைப்படங்களை அடிக்கடி பார்க்க முடிகிறது. ஆனால் இந்தப் புகைப்படத்தின் விசேஷம் என்னவென்றால், இதில் நீங்கள் சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் ஆதரவற்ற பள்ளிக் குழந்தைகளுக்காகத் திரையிடப்பட்ட குசேலன் திரைப்படத்தை அந்தக் குழந்தைகளோடு பார்த்து அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறீர்கள்.

இதுதான் என்னுடைய அதிர்ச்சிக்குக் காரணம். இதையே நடிகை த்ரிஷா போன்றவர்கள் செய்திருந்தால் நான் அதிர்ச்சி அடைந்திருக்க மாட்டேன். கண் பார்வையற்ற குழந்தைகள் பள்ளி, அனாதைக் குழந்தைகள் பள்ளி போன்ற இடங்களில் தங்கள் பிறந்த நாள் அன்று சென்று கேக்கும் மிட்டாயும் கொடுப்பது அந்த நடிகைகளின் பொழுதுபோக்குகளில் ஒன்று. அது பற்றியும் எனக்கு எந்தப் புகாரும் இல்லை. ஏனென்றால், லெதர் பாருக்குப் போவது போல் த்ரிஷாவுக்கு மேற்படி இடங்களுக்குச் செல்வதும் ஒரு பொழுதுபோக்குதான் என்றாலும், அந்தக் கண் பார்வையற்ற குழந்தைகளுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் அப்படி ஒரு நடிகை தங்களைப் பார்க்க வருவது அவர்களின் இருள் சூழ்ந்த உலகில் ஒரு மின்னல் தெறிப்பைப் போன்ற தருணமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

ஆனால், நீங்களோ அந்த அனாதைக் குழந்தைகளோடு சேர்ந்து ‘ குசேலன் ’ படம் பார்த்திருக்கிறீர்கள். குசேலன் படம் ஒரு குப்பை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஏனென்றால் உங்களுக்கு உலக இசை, உலக சினிமா, உலக இலக்கியம் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவும் ரசனையும் உண்டு என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபகப் படுத்துகிறேன். நீங்கள் ‘இந்து ’ பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். இப்போது 15 ஆண்டுகள் இருக்கலாம். ஃபில்ம் சேம்பர் தியேட்டரில் தினந்தோறும் ஏதாவது ஒரு ‘ க்ளாஸிக் ’ ஓடிக் கொண்டிருக்கும். எல்லாமே மிக முக்கியமான உலக சினிமாக்கள்.

அங்கே உங்களை அநேகமாக தினமுமே பார்த்திருக்கிறேன். அப்போது நான் என் மகள் ரேஷ்மாவுடன் தனியாக வாழ்ந்து கொண்டிருந்த காலம். அவள் வயது ஆறு. அவளோடுதான் படத்துக்கு வருவேன். ஆனால், அரங்கத்தின் முன் பகுதியில் எனக்காகவும் ரேஷ்மாவுக்காகவும் இரண்டு இருக்கைகள் எப்போதுமே ஒதுக்கப் பட்டிருக்கும். அவை தணிக்கை செய்யாத படங்கள் என்பதால் ஒரு வேளை சிறுவர்கள் பார்க்கக் கூடாத காட்சிகளும் இடம் பெற்றிருந்தால் அம்மாதிரி காட்சிகள் வரும் முன்பே ரேஷ்மாவுடன் வெளியே வந்து விடுவதற்கு ஏதுவாகவே அப்படி முன் இருக்கையில் வாசலுக்கு மிக அருகே இரண்டு இருக்கைகள் எனக்கும் என் மகளுக்கும் காலியாக இருக்கும்.

சரி, குசேலனுக்கு வருகிறேன். அது ஒரு குப்பைப் படம் என்பது பற்றி ஒன்றும் பிரச்சினை இல்லை. தமிழில் எத்தனையோ நல்ல படங்களும் குப்பைப் படங்களும் சேர்ந்தே வருகின்றன. ஆனால் நீங்கள் அனாதைக் குழந்தைகளோடு இந்தப் படத்தைப் பார்த்ததுதான் எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. கலாச்சார அதிர்ச்சி.

குசேலனில் வரும் ட்ரிபிள் எக்ஸ் படங்களை ஒத்த காட்சிகளை சுரணையுணர்வு உள்ள ஒருவர் குழந்தைகளோடு உட்கார்ந்து எப்படிப் பார்க்க முடியும்? மேற்கத்திய நாடுகளில் ட்ரிபிள் எக்ஸ் படங்கள் பார்ப்பதற்கென்றே தனித்தனி திரையரங்குகள் உள்ளன என்பதும், அங்கே நாம் குழந்தைகளைப் பார்க்க முடியாது என்பதும் உங்களுக்கே நன்கு தெரியும். நீங்கள் மற்ற அரசியல்வாதிகளைப் போன்றவர் அல்ல; நன்கு உலக ஞானம் உள்ளவர்.

குசேலனில் நயன் தாரா வரும் காட்சிகள் மற்றும் வடிவேலு காமெடி ஆகியவற்றை ஒருவர் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்து பார்க்க முடியும் என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?

செக்ஸ் என்பதில் எந்தவித ஆபாசமும் இல்லை என்று நம்புகிறவன் நான். ஆனால் குசேலனில் வரும் மேலே குறிப்பிட்ட காட்சிகள் அந்தவிதமாகவா இருக்கின்றன? அருவருப்பு, ஆபாசம் என்பதன் உச்சக்கட்டமாக அல்லவா அந்தக் காட்சிகள் அமைந்திருக்கின்றன?

தமிழ்ச் சமூகத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவதே இந்த மாதிரிப் படங்கள்தான் என்று நான் நினைக்கிறேன். குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயதிலேயே செக்ஸ் பற்றிய தவறான புரிதல்களை ஏற்படுத்தி சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரிக்க வைப்பதில் இம்மாதிரி படங்களே முதன்மைக் காரணிகளாக இருக்கின்றன.

இன்னொரு விஷயம். அந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும். அதிலும் தினந்தோறும் இப்படிப் பட்ட குப்பைப்படங்களிலிருந்து பல்வேறு ஆபாசங்கள் அரங்கேறும். அதையெல்லாம் அந்த ஆதரவற்ற குழந்தைகள் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அவர்களோடு நீங்களும் சேர்ந்து ஒரு திரையரங்கில் பார்ப்பதென்பது இந்த ஆபாசத்தையும், அருவருப்பையும் நீங்களும் சேர்ந்தே ஆதரிக்கிறீர்கள் என்றல்லவா அர்த்தமாகிறது?

த்ரிஷா தனது பிறந்த நாள் அன்று அந்த அனாதைக் குழந்தைகளைச் சந்தித்து மிட்டாய் கொடுப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், கனிமொழி அதைச் செய்யலாமா? நீங்கள் சட்டம் இயற்றுபவர்களின் வெகு அருகாமையில் உள்ளவர். அப்படிப்பட்ட நீங்கள் இந்த அனாதைக் குழந்தைகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேறு எத்தனையோ ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்யலாமே? அதை விட்டு விட்டு இப்படி அவர்களோடு குசேலன் படம் பார்ப்பது வெறும் ‘ஷோ ’ என்பதோடு நின்று விடுகிறதே?

மேலும் ஒன்று. அது என்ன அனாதைக் குழந்தைகளோடு குசேலன் சினிமா? ஏன் டி.ஏ.வி. மற்றும் பத்மா சேஷாத்ரி, அல்லது நீங்கள் படித்த சர்ச் பார்க் கான்வெண்ட் குழந்தைகளோடு குசேலன் சென்று பாருங்களேன். அது உங்களால் முடியாது. சாத்தியமே இல்லை. ஏனென்றால் அந்தப் பள்ளிக் குழந்தைகளெல்லாம் வூடி ஆலன் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும். நீங்களும் வூடி ஆலன் பார்த்து வளர்ந்தவர்தானே? அப்படியானால், உங்களுக்கு வூடி ஆலன்; அனாதைக் குழந்தைகளுக்கு குசேலனா? என்ன நியாயம் இது கனிமொழி?

டி.ஏ.வி., பத்மா சேஷாத்ரி மற்றும் சர்ச் பார்க் கான்வெண்ட் குழந்தைகள் இன்று வூடி ஆலன் பார்த்து, நாளை ஐ.ஐ.டி.யில் பயின்று அடுத்த நாள் அமெரிக்கா சென்று கொண்டிருக்க, உங்களோடு குசேலன் பார்த்த குழந்தைகள் மட்டும் இங்கே கடற்கரையில் சுண்டல் விற்பவர்களாகவும், ஜேப்படித் திருடர்களாகவும், கூலி வேலை செய்பவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும், இல்லையா? மற்றபடி இந்த அனாதைக் குழந்தைகளுக்கு நாம் என்னவிதமான வாழ்க்கையை வழங்கியிருக்கிறோம் சொல்லுங்கள்?

அன்புடன்,

சாரு நிவேதிதா.

12.8.2008.

பின் குறிப்பு:

இக்கடிதத்தைத் தங்கள் மீதான விமர்சனமாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் இதற்கு முன்பு பல முறை பல்வேறு விஷயங்களில் நாம் கருத்து முரண்பாடு கொண்டு காரசாரமாக விவாதித்து இருக்கிறோம். அதன்படியே இதையும் ஒரு விவாதமாகவே கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.