எனக்கு வரும் கடிதங்களையும் கேள்விகளையும் பதிவேற்றம் செய்து விட்டு நான் எதுவும் எழுதாமல் ஜல்லியடித்து வருவதாய் சில நெருங்கிய நண்பர்கள் வருத்தப் படுகிறார்கள்.
இது குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு தினமும் சுமார் 50 மின்னஞ்சல்கள் வருகின்றன. இவற்றில் ஐந்து ங்கோத்தா ந்கொம்மா ரகம். பார்த்ததுமே தெரிந்து விடும். அப்படியே ரத்து செய்து விடுவேன். துளிக்கூட கோபம் அடைய மாட்டேன். சமயங்களில் ஜாலிக்காக படிப்பதும் உண்டு. ஆனால் படித்ததும் அந்த நபர்கள் மீது வருத்தமே ஏற்படும். பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப் பட்டு அவர்களை அடைத்து வைத்திருக்கும் இரும்புக் கிராதிகளின் மீது தலையால் மோதி ரத்தம் சிந்தச் சிந்த வெறித்தனமாகக் கத்திக் கொண்டிருக்கும் மன நோயாளிகளைப் பார்க்கும் போது ஏற்படும் உணர்வே அந்த மின்னஞ்சல்களைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும்.
ஒரு விஷயத்தை நான் அவதானித்திருக்கிறேன். அப்படி என்னை ஆபாசமாகத் திட்டுபவர்கள் அத்தனை பேருமே தொடர்ந்து என்னுடைய எழுத்துக்களைப் படிக்கிறார்கள். அதுதான் அவர்களின் பிரச்சினை. ஒரே விஷயம் வேறு பலருக்கு அமிர்தமாகவும், சிலருக்கு விஷமாகவும் இருப்பதன் காரணம் என்ன?
புகழ் பெற்ற உதாரணமான நெருப்புதான் நினைவுக்கு வருகிறது. அதை ஒருவர் விளக்காகவும் பயன்படுத்தலாம்; அல்லது, வீட்டையும் கொளுத்தலாம்.
ஆனால் வெறும் துவேஷத்தினால் எழுதப் படும் அந்தக் கடிதங்கள் என்னை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. ஒன்று மட்டும் தோன்றும். இவ்வளவு வெறுப்பைத் தங்களிடம் ஏற்படுத்தும் என்னுடைய எழுத்தை ஏன் இவர்கள் தொடர்ந்து படித்துத் தங்களைத் துன்புறுத்திக் கொள்கிறார்கள் என்று. எனக்கு எது ஒவ்வாதோ அதை விலக்கி வைப்பதுதானே என்னுடைய நலத்துக்கு உகந்தது? அது ஏன் இந்த மனிதர்களுக்குத் தெரிய மாட்டேன் என்கிறது?
ஆனால் உயிர்மை பற்றி எனக்கு அறிமுக அஞ்சல் அனுப்பிய நபரை அப்படி என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. உயிர்மையின் முதல் இதழிலிருந்து இன்று வரை ஒரு இதழ் கூட விடாமல் அதில் எழுதி வரும் இரண்டு பேரில் நானும் ஒருவன். (மற்றொருவர் அந்த இதழில் தலையங்கம் எழுதும் அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன்). நிலைமை இப்படி இருக்கையில் எனக்கே உயிர்மையை அறிமுகப் படுத்திய அந்த நபருக்கு எவ்வளவு கொழுப்பும் திமிரும் இருக்க வேண்டும் என்று நினைத்தே அவருக்கு பதில் எழுதினேன். ஆனால் அதற்கும் ஒரு மட்டமான பதில் எழுதி தன்னை ஒரு கிரிமினல் என்று அவர் நிரூபித்துக் கொண்டு விட்டார்.
விஷயம் என்னவென்றால், என்னைச் சீண்டினால் நான் திரும்பிப் பார்ப்பேன், உடனே அதன் மூலம் தனக்கும், தன்னுடைய வலைப் பக்கத்துக்கும் இலவச விளம்பரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர் என்னை அடிக்கடித் திட்டி எழுதுவதாகவும், அதற்கெல்லாம் நான் எதிர்வினை செய்து அவரது நோக்கத்தை நிறைவேற்றி வைக்க வேண்டாம் என்றும் என் நண்பர்கள் எனக்கு அவ்வப்போது அறிவுறுத்தி வந்தனர்.

இந்த மாதிரி சில்லறைகளை கவனிப்பதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று இதுவரை பதில் சொல்லி வந்தேன். இந்நிலையில் இப்போது ஏன் இந்த சில்லறைக்கு இவ்வளவு பெரிய இலவச விளம்பரம் என்று கேட்டார்கள் நண்பர்கள்.
என்னதான் இப்படியெல்லாம் இவர்களுக்கு என் மூலம் விளம்பரம் கிடைத்தாலும் அந்த வலைப்பக்கங்களுக்குள் செல்பவர்கள் இந்திய பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் பப்ளிக் டாய்லெட்டுக்குள் நுழைந்தது போல் மூக்கைப் பொத்திக் கொண்டு ஓடி வந்து விடுகிறார்கள்.
உதாரணமாக, இன்று என் நண்பர்கள் மூன்று பேர் உத்தமத் தமிழ் எழுத்தாளனின் சமீபத்திய சிறுகதை ஒன்றைப் படித்து விட்டு சொன்னது என்ன தெரியுமா? ஒருத்தர் சொன்னார்: என் முகத்தில் வாந்தி எடுத்து மூத்திரமும் பெய்தது போல் இருந்தது அந்தக் கதை. இரண்டாமவர்: மொழியையே வன்கலவி செய்து விட்டார். மூன்றாமவர்: அலெக்ஸ். அவன் என்ன சொன்னான் என்பதை வெளியே சொன்னால் அவனுக்கு நல்லதல்ல.
அதனால் பப்ளிக் டாய்லெட்டுகளுக்குக் கிடைக்கும் இலவச விளம்பரங்கள் பற்றி நான் கவலைப் படவில்லை. ஆனாலும் பொருட்படுத்தவே கூடாத ஒரு நபரின் கடிதத்தை வெளியிடக் காரணம் என்ன?
என்னை நான் பொருட்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா? அதாவது, இம்மாதிரி ஒரு அபத்தத்தை பகிரங்கப் படுத்தாவிட்டால் என்னுடைய மன உளைச்சலிலிருந்து நான் வெளியே வர முடியாது என்று நினைத்தேன். இதன் பொருள், நான் விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ளும் மன வலிமை இல்லாதவன் என்று பொருள் அல்ல. என் இணைய தளம் ஒரு குப்பைத்தொட்டி என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் உயிர்மை என்ற பெயரைச் சொல்லி என்னைத் திரும்பிப் பார்க்க வைத்து அதன் பின்னர் குப்பைத்தொட்டி என்று சொன்னது மிகக் கீழ்த்தரமான உத்தி என்று தோன்றியது.
அப்படியானால் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்ததன் மூலம் அந்த நபர் தனது நோக்கத்தில் வெற்றி அடைந்து விட்டதாகத்தானே அர்த்தம்?
ஆமாம். இந்தத் தோல்வியை நான் விரும்பியே ஏற்றுக் கொண்டேன். காரணம், இது எனக்கு ஒரு ஆன்மீகப் பயிற்சி. இந்தத் தோல்வியை மனதில் கொண்டால்தான் தொடர்ந்து இது போன்ற சில்லறைகள் என் மீது புழுதி வாரித் தூற்றும் போது அதை எள்ளளவும் பொருட்படுத்தாத மனோநிலையை அடைய முடியும்.
மேலும், வெறும் கடிதங்களையும் கேள்விகளையும் போட்டு பக்கத்தை நிரப்புகிறேன்; ஃபீல்ட் ஒர்க் என்று சொல்லிவிட்டு பெண்களோடு ஜாலி பண்ணிக் கொண்டு திரிகிறேன் என்று என் நண்பர்களே குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.
கடிதங்கள் இலக்கியம் இல்லை என்று யார் சொன்னது? எனக்கு வரும் 45 கடிதங்களிலிருந்து ஒரே ஒரு கடிதத்தை மட்டுமே தேர்வு செய்து வெளியிடுகிறேன். நேற்று (22.8.2008) நடு இரவு ஒரு மணிக்கு எழுந்து காலை ஆறு வரை அந்தக் கடிதங்களையும், கேள்வி பதில்களையும் டைப் செய்து கொண்டிருந்தேன். அதில் உள்ள நேரக் குறிப்பைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். எனக்கு வரும் கடிதங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதப் படுபவை. நான்தான் அவற்றைத் தமிழில் மொழி பெயர்க்கிறேன்.
மேலும், ர்வாண்டாவிலிருந்து எனக்கு எழுதப் படும் கடிதம் மற்றவர்களுக்கு வேண்டுமானால் வெறும் கடிதமாக இருக்கலாம்; எனக்கு அப்படி இல்லை. ஏனென்றால், இது ஒரு மொழி சார்ந்த கலாச்சாரத்தின் பாற்பட்டது. சுஜாதாவுக்கு அடுத்தபடியாக இலக்கியத்தை வெகுஜனத் தளத்துக்கு எடுத்துச் செல்வதில் குறிப்பிடத்தகுந்த அளவுக்குச் செயலாற்றிக் கொண்டிருப்பவர்கள் இருவர்; ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் அடியேன். எனவே, இந்தக் கடிதங்களெல்லாம், இலக்கியம் என்பது தமிழ்ச் சமூகத்தில் எந்தெந்த மூலை முடுக்குக்கெல்லாம் பரவிச் செல்கிறது என்பதற்கான வரலாற்று சாட்சியங்களாக விளங்கிக் கொண்டிருப்பவை. அதனால்தான் இவ்வளவு சிரமம் எடுத்து அவற்றைப் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறேன்..
ர்வாண்டாவின் கிகாலியில் உள்ள நூறு தமிழர்கள் என்னுடைய எழுத்தைப் படித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது சாதாரண விஷயமா என்ன? இது வெறும் படிப்பு, பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டது அல்ல; இது ஒரு கலாச்சார செயல்பாடு.
மேலும், ஃபீல்ட் வொர்க் என்பது வெறும் ஜாலி பண்ணுகிற மேட்டர் அல்ல. எனக்கு வாழ்க்கையே ஒரு ஃபீல்ட் வொர்க் தான். நான் ஸீரோ டிகிரியை எழுதிக் கொண்டிருந்த போது இரண்டு ஆண்டுகள் எந்தப் பத்திரிகையிலும் எதுவுமே எழுதியது கிடையாது. அப்போது நான் எழுத்திலிருந்து ஓய்வு பெற்று விட்டேன் என்றார்கள். இப்போது இந்தக் குட்டிக் கதைகளுக்காக இரண்டு மாதம். இந்த இரண்டு மாதத்தில் இன்னும் 45 குட்டிக் கதைகள் தயார்.
இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?
23.8.2008.
9.50 p.m.