பெங்களூர் வாசகர் சந்திப்பினால் சில நல்ல விஷயங்கள் நடந்தன. குருவை முதல் முதலாகப் பார்த்தேன். சீனிவாசன், நீதிமணி போன்ற சுவாரசியமான நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. இருவரும் என்னுடைய கதைகளில் வரும் பாத்திரங்களைப் போலவே இருந்தனர். அதிலும் நீதிமணி சொன்ன கதைகளையெல்லாம் தொகுத்தால் அதற்கு நீதிக் கதைகள் என்று தலைப்பிட்டு தனிப் புத்தகமாகவே கொண்டு வரலாம். நம்பவே முடியாத ஆச்சரியமான கதைகள், மனிதர்கள்.
” பாடை ரெடி; கிளம்பலாமா? ” என்பார்கள். பார்த்தால் கிளம்புவதற்குத் தயாராக இருக்கும் கார். அடப் பாவிகளா! நானே செம பயந்தாங்கொள்ளி...எனக்கா இப்படிப்பட்ட பயங்கரவாதிகள் நண்பர்களாக வர வேண்டும்? இதற்கிடையில் நீதி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்.. பியரைக் கூடத் தொட மாட்டார். ஆனால் வேறொரு விஷயத்தில் ஆள் மன்னன். அதை குட்டிக் கதைகளில் பார்ப்போம்.
” ஏன் குடிப்பதில்லை ” என்று கேட்டேன். அப்பாதான் காரணம். இதைப் பல நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அந்த அளவுக்கு அந்த அப்பாக்கள் தங்கள் குடிப் பழக்கத்தால் குடும்பத்தை பயமுறுத்தியிருக்கிறார்கள்.
இவர்களுக்கு கோபால கிருஷ்ணன் என்று ஒரு நண்பர். பாவம், அமைதி விரும்பி.
சீனிவாசன் என்னை ஏற்கனவே தொடர்பு கொண்டு ‘சென்னையிலிருந்து பெங்களூருக்கு நம்முடைய காரிலேயே போய் விடலாமா? ’ என்று கேட்டிருந்தார். நான் தான் பயந்து கொண்டு ரயிலிலேயே வந்து விடுகிறேன் என்று சொல்லி மறுத்து விட்டேன். எனக்கு முன்பின் பழக்கம் இல்லாதவர்களின் சவாரியில் செல்ல ரொம்ப அச்சம்.
ஆனால் பெங்களூர் சென்ற பிறகு தான் தெரிந்தது, நீதி மிக நன்றாக கார் ஓட்டுகிறார். குடிக்க மாட்டார் என்பது மற்றொரு தகுதி.
சூர்யா இந்த வாசகர் சந்திப்புக்காகவே மும்பையிலிருந்து பெங்களூர் வந்திருந்தார். அவரை நான் சென்ற ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியிலேயே சந்தித்திருக்கிறேன். மனிதர் பியர்தான் குடிப்பார். அன்றைய தினம் என்னைப் பார்த்த சந்தோஷத்தில் என்னோடு சேர்ந்து வோட்காவைக் குடித்து விட்டு மல்லாந்து விட்டார். என்ன எழுப்பியும் அவரால் எழுந்து கொள்ள முடியவில்லை. எனவே அவரை விட்டு விட்டே வாசகர் சந்திப்பு நடந்த ராயல் ஆர்ச்சிட் ஓட்டலுக்குக் கிளம்பினோம்.
தங்கவேல், குரு, பாஸ்கர் மற்றும் நான். ஆறாவது மாடிக்கு லிஃப்டில் ஏறினோம். லிஃப்டில் பாஸ்கர் இல்லை. ‘ சரி, அடுத்த லிஃப்டில் வருவார் ’ என்று விட்டு விட்டேன். அப்போது மணி ஏழரை.

வாசகர்கள் மொத்தம் 22 பேர். இன்னும் எட்டு பேர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். குறைந்த பட்சம் 30 பேர் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் 30,000 ரூ. கட்டியிருந்தார் குரு. ஒருவருக்குக் கட்டணம் ரூ.1000/- மதுபானச் செலவுக்குத் தனி. ஆனால் வந்தவர்களில் பெரும்பாலும் மது அருந்தவில்லை என்பதால் அதற்கு அதிகம் செலவாகவில்லை. ஆனால் எட்டு பேருக்கான கட்டணம் வீணாயிற்று.
கேள்வி பதில், விவாதம் ஓகே. ஆனால், இந்தச் சந்திப்புக்கு அப்பால் நடந்த சந்திப்பில்தான் விவாதங்கள் இன்னும் நன்றாக இருந்தன. உதாரணமாக, அன்றைய பகல் பொழுதில் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸயன்ஸில் சில மாணவர்களுடன் நடந்த நீண்ட உரையாடல்.
அந்த மாணவர்களில் ஒருவர் கணிதத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர். ” உங்கள் ஆராய்ச்சி எப்படி இருக்கும்? ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போன்ற கணித உண்மைகள் மட்டுமே தெரிந்த ஒரு பாமரனுக்கு விளக்குவது போல் பதில் சொல்லுங்கள் ” என்று அந்த மாணவரிடம் கேட்டேன்.
அருமையாக பதில் சொன்னார். “ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது ஒரு உண்மை என்பதற்கு என்ன ஆதாரம் என்பதிலிருந்துதான் எங்கள் ஆராய்ச்சி ஆரம்பிக்கும் ” என்றார்.
“ம்ஹும், புரியவில்லையே? ”
” உதாரணமாக, வட்டம் என்று சொல்லுகிறோம். ஆனால் அதை ஏன் வட்டம் என்று சொல்கிறோம். அதை ஏன் சதுரம் என்று சொல்லக் கூடாது? வட்டத்துக்குள் எண்ணற்ற சதுரங்கள் இருக்கும் சாத்தியம் உண்டல்லவா? இந்த பூமியைக் கூட உருண்டை என்கிறோம். ஆனால் பார்ப்பதற்கு இது ஏன் உருண்டையாக இல்லை என்று துவங்குவோம். ”
“இது கணிதம் மாதிரி தெரியவில்லையே, தத்துவம் மாதிரி அல்லவா இருக்கிறது? ”
” ஒரு எல்லையைத் தாண்டினால் கணிதத்துக்கும் தத்துவத்துக்குமான இடைவெளி குறைந்து விடும். ”
வாசகர் சந்திப்பு முடிவதற்கு பத்து நிமிடங்கள் இருக்கும் போது – கிட்டத்தட்ட பதினோரு மணி அளவில் எங்கிருந்தோ வந்து சேர்ந்தார் ஏழரை மணி அளவில் காணாமல் போன பாஸ்கர். அவ்வளவு நேரம் அவர் எங்கே இருந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. பியர் மட்டுமே குடித்துப் பழக்கமுள்ள அவர் என்னைச் சந்தித்த குஷியில் அன்று மதியம் என்னோடு சேர்ந்து வோட்காவைக் குடித்ததில் அவரும் காலி, சூர்யாவைப் போல்.
‘ நல்ல வேளை, நீங்கள் யாரும் ஜெயகாந்தனை சந்தித்ததில்லை ’ என்று நினைத்துக் கொண்டேன். பழக்கமில்லாதவர்களை கஞ்ஜா ஒரேயடியாகக் கவிழ்த்து விடும்.
மறுநாள் காலை இந்திய விஞ்ஞானக் கழகத்தில் நானும் சூர்யாவும் நடைப் பயிற்சி சென்றோம். ஒரு வனத்துக்குள் நடப்பதைப் போல் இருந்தது.
அன்றைய இரவு எங்காவது ஒரு ‘ பப் ’ புக்குச் செல்லலாம் என்று குருவிடம் சொல்லியிருந்தேன்.
நான் சிறிது நேரம் உறங்கி எழுந்ததும் செல்லலாம் என்று சொல்லிவிட்டு மதியம் இரண்டு மணிக்கு உறங்கச் சென்றவர் இரவு எட்டு மணிக்குத்தான் எழுந்தார்.
பிரிகேடியர் சாலையில் உள்ள ஒரு ‘ பப் ’ புக்குச் சென்றோம். அங்கே நான் பார்த்த ஒரு காட்சியைச் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா என்று தெரியவில்லை.
இரவு ஒன்பது மணி இருக்கும். ஒரு பதினான்கு வயதுப் பெண் நிறை போதையில் இரண்டு பையன்களின் தோள் மீது கை போட்டுக் கொண்டு தள்ளாடித் தள்ளாடிச் சென்று கொண்டிருந்தாள். அந்தப் பையன்களின் வயது பதினேழு இருக்கும். அவன்களும் நடக்க முடியாமல்தான் நடந்து கொண்டிருந்தான்கள்.
வாசகர் சந்திப்பின் மொத்த செலவு ரூ. 60,000/- அதில் எங்களுடைய அறை வாடகை, போக்குவரத்துச் செலவு என்று ரூ.10,000/- ஐ சூர்யா ஏற்றுக் கொண்டார். மீதி 50,000 குருவின் செலவு. குரு ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். பெங்களூரில் மூன்று நான்கு இளைஞர்களோடு வீட்டைப் பகிர்ந்து கொண்டு வாழும் ஒரு கல்யாணமாகாத இளைஞர். ஒரு பெரிய வர்த்தக நிறுவனம் செய்ய வேண்டிய காரியத்தை மாத சம்பளம் வாங்கும் ஒரு இளைஞர் செய்கிறார் என்றால் இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றின் மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வம் எத்தகையது என்று புரிந்து கொள்ளலாம்.
இம்மாதிரி இளைஞர்களின் மூலமே ஒரு கலாச்சாரம் செழுமை அடைய முடியும் என்று முழுசாக நம்புகிறேன்.
இப்படி ஒரு வாசகர் சந்திப்பினால் என்ன பயன் என்று ஒருவர் கேட்கலாம். என்னைப் பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கான பிராண வாயு எனக்குக் கிடைத்திருக்கிறது. உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை அனுபவித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நம்முடைய இணைய தளம் ஐந்து லட்சம் ஹிட்ஸை எட்டியதும் பிச்சாவரத்தில் வாசகர் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என்கிறார் நீதி. அவர் பிச்சாவரத்தில் செல்வாக்கு மிகுந்தவர். நிகோஸ் கஸான்ஸாகிஸின் ஸோர்பா தெ க்ரீக் நாவலில் வருவது போல் ஒரு ஆட்டை அப்படியே சுட்டு சாப்பிடலாம் என்றார். (சைவர்களுக்கு வடை, பொங்கல், தயிர் சாதமெல்லாம் உண்டு) அப்படியே ஒரு camp fire போட்டு சுற்றி வர அமர்ந்து சாப்பிட்டால் மஜாவாக இருக்கும்.
இந்த முறை யார் யார் வருகிறீர்கள், பெயர் கொடுங்கள் என்றெல்லாம் கேட்கப் போவதில்லை ஏனென்றால் பெயர் கொடுத்தவர்கள் வரவில்லை; வந்தவர்கள் பெயர் கொடுக்கவில்லை. எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாம். (எப்படிச் சொன்னாலும் 20 பேரைத் தாண்டாது என்றுதான் தோன்றுகிறது). நம்முடைய மக்களின் பங்கேற்பு என்னைப் புல்லரிக்க வைக்கிறது.
***
24.8.2008.
5.50 p.m.