மலையாளப் பத்திரிகையான மாத்ரு பூமியில் ஒருமுறை தமிழ் சினிமா பாடல்களைப் பற்றி ஒரு தொடர் கட்டுரை எழுத முடியுமா என்று கேட்டார்கள். ஏற்கனவே எக்கச்சக்கமான வேலைப்பளுவினால் தலை எது கால் எது என்று புரியாத நிலையில் குழம்பிக் கொண்டிருந்ததால் ‘பிறகு பார்க்கலாம் ’ என்று சொல்லி விட்டேன். வாஸ்தவத்தில் தமிழ் சினிமா பாடல்கள் பற்றி மூன்று தொகுதிகள் வரும் அளவுக்கு எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
தமிழ் சினிமா பாடல் என்றால் நான் பி.யு. சின்னப்பா, பாகவதர் என்று போய் விடுவேன். அங்கிருந்து துவங்கி கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி வரை வந்து அங்கேயே வண்டி நின்று விடும். அதற்குப் பிறகு ஒவ்வொரு இசையமைப்பாளரிடமிருந்து ஓரிரு பாடல்கள் மட்டுமே.
சமீபத்தில் என்னுடைய விருப்பத்திற்குரிய தமிழ் சினிமா பாடல் திரட்டைக் கண்ணுற்ற நண்பர் ஒருவர் அதிர்ந்து போனார். காரணம், சமகால இசையமைப்பாளர்களில் இடம் பெற்றிருந்தவர்கள், நான் தொடர்ந்து விமர்சித்து வரும் இளையராஜா (ஹே ராம் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி, குணா : கண்மணி அன்போடு), ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா என்றுதான் இருந்ததே தவிர அதில் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் இல்லை. ஏனென்றால், எனக்கு ரஹ்மானின் இந்திப் பாடல்கள்தான் பிடிக்கும் (உ-ம்: தில்லி 6). ஆனால் தங்கள் முதல் படத்திலேயே ரஹ்மானையும் தாண்டி விட்ட இசையமைப்பாளர்கள் என நான் கொண்டாடுவது தேவ்.டியின் அமித் திர்வேதியும், குலாலின் பியுஷ் மிஷ்ராவும். காரணம், இவர்களின் இசையில் உள்ள பின்நவீனத்துவத் தன்மை.
சமீபத்தில் கமீனே என்ற இந்திப் படம் பார்த்தேன். இயக்குனர் விஷால் பார்த்வாஜ். இப்படத்தின் இசையமைப்பாளரும் அவரே. இதில் மொஹித் சௌஹான் பாடிய ’ பெஹ்லி பார் மொஹ்பத் கீ ஹை; ஆக்ரி பார் மொஹ்பத் கீ ஹை ’ (இதுதான் என் முதல் காதல்; இதுதான் என் கடைசிக் காதல்) என்ற ஒரு பாடல் வருகிறது. குல்ஸார் எழுதிய இந்தப் பாடலை தினமும் ஒரு 20 தடவையாவது கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு பிரமாதமான பாடல். இதைப் பாடிய மொஹித் சௌஹான்தான் தில்லி-6இல் மஸாக்களி பாடலைப் பாடியது.. இந்தி சினிமா இசை இப்படி எந்தெந்த திசையிலோ பயணம் செய்து கொண்டிருக்கிறது.
ஆனால் தமிழ் சினிமா இசையோ மிகவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்கு இன்றைய இளைஞர்களின் வாழ்வு பற்றியோ, அவர்களின் ரசனை பற்றியோ எதுவும் தெரியவில்லை. உலக இசை இன்று எந்தெந்த இடங்களைத் தொட்டுள்ளது என்று தெரியவில்லை. இசை ரசனையைப் பொறுத்தவரை நான் ஒரு வெளி ஆள். இசை என்னுடைய தொழில் அல்ல. இசைக்கு நான் ஒரு ரசிகன். அவ்வளவுதான். ஆனால் நான் சந்திக்கும் இசையமைப்பாளர்களிடம் நான் கேட்டுக் கொண்டிருக்கும் இசைக் கலைஞர்களின் பெயர்களைச் சொன்னால் அந்தப் பெயர்கள் அனைத்தும் அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. ஆனால் அவர்களெல்லாம் உலக அளவில் மிகவும் பிரபலமானவர்கள். உதாரணமாக, ஷாப் ஹாஸ்னி, ஷாப் மாமி, நான்ஸி அஜ்ரம்...
ஒரு இசையமைப்பாளருக்கு இசைதானே தொழில்? அப்படி இருக்கும் போது ஒரு எழுத்தாளனான எனக்குத் தெரிந்த பெயர்கள் கூட அவர்களுக்கு எப்படித் தெரியாமல் இருக்க முடியும்? சமகாலத்து உலக இசையின் பரிணாமங்களைத் தெரிந்து கொள்ளாமல், இன்றைய ரசனைக்கு ஏற்றபடி எப்படி இசை அமைக்க முடியும்?
அதனால்தான் பல நல்ல திரைப்படங்களின் பாடல்கள் சகிக்க முடியமால் இருக்கின்றன. உதாரணம்: சீனி கம். காரணம், இதன் இசையமைப்பாளர் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர். சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அதன் இயக்குனர் மாற்று சினிமாவை உருவாக்க முயற்சிப்பவர்களுள் முக்கியமானவர். ஆனால் இசையும் பாடல் வரிகளும் மிகச் சாதாரணமாக இருந்ததை வருத்தத்துடன் கவனித்தேன். இசையும் பாடல்களும் அந்த இயக்குனரின் ஆழ்ந்த ஈடுபாட்டுக்குக் கொஞ்சமும் நியாயம் செய்வதாக இல்லை.
இசையமைப்பாளர்களை விட தமிழ்ப் பாடலாசிரியர்களின் தரம் இன்னும் படு பாதாளத்தில் கிடக்கிறது. வெறுமனே காலியிடங்களை வார்த்தைகளால் இட்டு நிரப்புகிறார்கள். சீரும் சிறப்பும் மிக்க பாரம்பரியம் கொண்ட தமிழ் சினிமா பாடல்களின் தற்போதைய நிலை மிகவும் அவலமானதாய் இருக்கிறது. கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற கவிஞர்களால் செழுமைப் படுத்தப்பட்ட தமிழ் இன்றைய பாடலாசிரியர்களால் குரூரமாக வன்கலவி செய்யப் படுகிறது என்றே சொல்லலாம். சமீபத்திய உதாரணம், கந்தசாமி. அதில் இடம்பெறும் சில பாடல்களின் வரிகள் இவை:
1. என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்யாகுமாரி
போலாமா குதிரை சவாரி
2. எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
ஒரு காஃபி குடிப்போம்
கம் வித் மீ
ஹாட்டா கோல்டா நீயே தொட்டுப் பாரு.
3. இந்தியப் பொண்ணு தாங்கோ
இத்தாலி கண்ணு தாங்கோ
நானொரு மின்னல் தாங்கோ
என் மேனியே மேக்னட் தாங்கோ
தில் இருந்தா என்னைப் போடுங்கோ
’ போடுங்கோ ’ என்றுதான் என் காதில் விழுந்தது. வேறு வார்த்தையாகவும் இருக்கலாம்.
இதைத்தான் காலியிடங்களை நிரப்புதல் என்று சொன்னேன். ஆனால் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாப் பாடல் எப்படி இருந்தது என்று இந்தக் காலி டப்பா பாடலாசிரியர்களுக்குக் கொஞ்சமாவது தெரியுமா? 1960-இல் வந்த ஆளுக்கொரு வீடு என்ற படத்தில் பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடிய “அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா? அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா? ” என்ற பாடலை நீங்கள் கேட்டிருக்கலாம். இதை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயதிலேயே இறந்து விட்டார். அப்படி இல்லாதிருந்தால் கண்ணதாசன் என்ற அற்புதமான கவிஞன் அளவுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பெயரும் பிரபலமாகி இருக்கும்.
அதே போல் என்.ஸி. வசந்த கோகிலமும் 32 வயதிலேயே இறந்து போகாதிருந்தால் எம்.எஸ். சுப்புலட்சுமி இவ்வளவு தூரம் பிரபலமாகி இருப்பாரா என்பதும் சந்தேகம்தான். வசந்த கோகிலம் இறந்த ஆண்டு 1951. சுத்தானந்த பாரதியின் பல பாடல்களைப் பாடியிருக்கிறார் இவர். ஹரிதாஸில் தியாகராஜ பாகவதருக்கு மனைவியாக நடித்து பாடியிருக்கிறார். இவர் பாடிய மற்றொரு அருமையான சுத்தானந்த பாரதி பாடல் இது:
நித்திரையில் வந்து நெஞ்சினில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி...
இது போன்று நூற்றுக் கணக்கான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிச் சொல்வதில் என்னையும் வண்ணதாசனோடு முடிச்சுப் போடும் ஆபத்து இருக்கிறது. அது போன்ற நாஸ்டால்ஜியாவை நான் சொல்லவில்லை. இன்றைய வாழ்க்கை, இன்றைய காதல் எல்லாமே மாறிப் போய் விட்டது. கமீனே படத்திலிருந்து ஒரு உதாரணம். காதலனும் காதலியும் கல்லூரி மாணவர்கள். காதலி கர்ப்பமாகி விடுகிறாள். காதலன் அதிர்ச்சி அடைகிறான். “உன்னிடம் எத்தனை முறை சொன்னேன்; காண்டம் பயன்படுத்துகிறேன் என்று. நீதானே
நான் ’ ஹோம் சயின்ஸில் ’ கில்லாடி என்று சொல்லி என்னை ஏமாற்றினாய்? ” என்று கத்துகிறான். ஏனென்றால், அவனுக்கு எதிர்காலம் பற்றிய ஏராளமான கனவுகள் இருக்கின்றன. இவள்தான் ‘இது சேஃப் பீரியட்; நாம் செக்ஸ் வைத்துக் கொண்டால் ஒன்றும் ஆகாது ’ என்று சொல்லி இந்த நிலைக்குக் கொண்டு வந்தவள்.
” சரி, இப்போது அபார்ஷன் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை ” என்கிறான் அவன்.
“அப்படியானால் இது மூன்றாவது அபார்ஷனாக இருக்குமே; பண்ணலாமா? அது சாத்தியப்படுமா? ” இது காதலி.
“அய்யய்யோ... மூன்றாவது அபார்ஷனா? அப்படியானால் மற்ற இரண்டு? ”
“அதையெல்லாம் கிளறாதே. அதெல்லாம் பழைய கதை... ”
இதுதான் இன்றைய காதல். என்றாலும் மனித உணர்வுகள் ஆயிரம் ஆண்டுகளானாலும் மாறுவதில்லை; ஒரே விதமாகத்தான் இருக்கும் என்பதற்கு அவர்கள் பாடும் ’ பெஹ்லி பார் மொஹ்பத் கீ ஹை; ஆக்ரி பார் மொஹ்பத் கீ ஹை ’ (இதுதான் என் முதல் காதல்; இதுதான் என் கடைசிக் காதல்) என்ற பாடல் உதாரணம்.
உலகின் காதல் காவியங்களில் ஒன்றாகக் கருதப் படும் ரோமியோ ஜூலியட்டை எடுத்துக் கொள்வோம். ரோமியோ ஜூலியட்டை சந்திக்கும் முன் வேறொரு பெண்ணைத்தான் காதலித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் ஜூலியட்டைப் பார்த்ததும் இவள்தான் நம்முடைய பெண் என்று அவனுக்குத் தோன்றி விடுகிறது. இதுதான் கமீனேவின் மொஹ்பத்தும்.
ஆக, என்னதான் கால மாற்றங்கள் நடந்தாலும் மனித உணர்வுகள் மாறுவதில்லை என்ற அர்த்தத்தில்தான் ’ நான் வெறும் நாஸ்டால்ஜியாவைப் பேசவில்லை ’ என்று குறிப்பிட்டேன்.
இவ்வளவும் இன்னும் பல விஷயங்களும் கமல்ஹாசனின் ’ உன்னைப் போல் ஒருவன் ’ படத்தின் பாடல்களைக் கேட்டபோது ஞாபகம் வந்தது.
கண்ணதாசனும், பட்டுக்கோட்டையும் நடை போட்ட ராஜ பாட்டையில் வைரமுத்துவும் அவர்களுக்கு ஈடாகவே நடந்து கொண்டிருந்தார். சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய ஞானக்கூத்தன், ஆத்மாநாம் வரை அவருடைய குருதிக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அதனால்தான் ஆய்த எழுத்துவில் அவரால் சொல்லையே மந்திரமாக மாற்ற முடிந்தது. ஆனால் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனைக் கேட்கும் போது அவருக்கும் ஒரு தேக்கநிலை வந்து விட்டது போல் தோன்றுகிறது. பாடலாசிரியர் தாமரை காதல் பாடல்களில் மட்டுமே சோபிக்கிறார். மற்றவர்களெல்லாம் ராஜ பாட்டையில் குறுக்கும் நெடுக்குமாக எலிக்குஞ்சுகளைப் போல் மிரட்சியுடன் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த ராஜ பாட்டையில் மனுஷ்ய புத்திரனின் பயணம் துவங்கியிருக்கிறது.
திரைப்படப் பாடலை செழுமைப்படுத்த வேண்டுமெனில் அதில் ஈடுபடுபவருக்கு தத்துவம், சமூகம், கலாச்சாரம் போன்ற துறைகளில் கூர்த்த மதியும், தெளிந்த சிந்தனையும் தேவை. இவை இல்லாவிட்டால் குறைந்த பட்சம் அவருடைய மொழி சார்ந்த இலக்கியம் அவருடைய உயிரோடும் மூச்சோடும் இரண்டறக் கலந்திருக்க வேண்டும். கண்ணதாசனிடம் மேற்கண்ட இரண்டுமே இருந்தன. வைரமுத்துவிடம் இருந்தது இரண்டாவது. இப்போது சங்க காலம் முதல் பாரதி வரையிலான பாரம்பரியத்திலிருந்து இலக்கியத்தையும், மேற்கு உலகின் சிந்தனாவாதிகளிடமிருந்து தனது தத்துவப் பார்வையையும் ஸ்வீகரித்தபடி ஒரே பாடலில் தனது விசேஷமான முத்திரையைப் பதித்தபடி இறங்கியிருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.
அதே போல் கமல் டாடி, மனுஷ்ய புத்திரன் அங்கிள் போன்ற மூத்த தலைமுறையினருடன் இணைந்து பணி புரிந்தாலும் ஷ்ருதி ஹாசன் தனது முதல் படத்திலேயே தமிழ்ச் சூழலுக்கு மிகப் புதியதான, இளைய தலைமுறையினருக்கான இசையை வழங்கியிருக்கிறார். அவருடைய குரலைக் கேட்கும் போது என்.ஸி. வசந்த கோகிலத்தின் பின்நவீனத்துவ வாரிசோ, அவர் ஆரம்பித்துத் தொடராமல் விட்டதைப் பூர்த்தி செய்ய வந்த பெண்ணோ என்றெல்லாம் தோன்றுகிறது.
உன்னைப் போல் ஒருவனில் ஷ்ருதி ஹாசன் சிருஷ்டித்திருக்கும் பாடல்களைக் கேட்டபோது எனக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.ஆர். ரஹ்மான் தமிழ் சினிமா இசையில் ஏற்படுத்திய புரட்சிகரமான மாற்றம் ஞாபகம் வருகிறது. ரஹ்மானுக்கு முன்னால் – 80களில் – தமிழ் சினிமா இசை ஒரு குறிப்பிட்ட pattern- க்குள் மாட்டிக் கொண்டிருந்தது. அதே போல் என்னதான் ஹாரிஸ் ஜெயராஜும், யுவன் ஷங்கர் ராஜாவும் பல அருமையான பாடல்களைக் கொடுத்தாலும் அவர்களின் பாணியும் தமிழ் சினிமா இசைக்குரிய ஒரு pattern- க்குள்ளேயே இயங்குவதைத்தான் நாம் பார்க்கிறோம். இங்கே நான் சொல்வதை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டுமானால் தேவ்.டியிலும், குலால்-இலும் இடம் பெறும் பாடல்களுக்கும் மற்ற இந்தி சினிமாப் பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்துப் பாருங்கள்.
தில்லி-6இன் பாடல்களை நீங்கள் ரசிக்கலாம். அது ஒரு அற்புதம்தான். ஆனால் தேவ்.டி, குலால் பாடல்கள் இந்தி சினிமா இதுவரை பார்த்திராத வேறு ஏதோ ஓர் திசையில் சென்றிருக்கின்றன. அதற்கு முன்னால் இருந்த இந்திப் பாடல்களுக்கும் இந்த இரண்டு படங்களின் பாடல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது வேறு; இது வேறு. அதே போல், இதுவரையிலான தமிழ் சினிமா பாடல்களுக்கும் ஷ்ருதி ஹாசன் உருவாக்கியிருக்கும் பாடல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது வேறோர் திசையில் நடந்த மிகப் பெரிய பாய்ச்சல் ( quantum leap). இது பற்றி நிறைய எழுதலாம். ஆனால் நீங்களே கேட்டுப் பார்ப்பதே நல்லது. உதாரணமாக, உன்னைப் போல் ஒருவன் என்ற பாடலில் வரும் கிதார், வானம் எல்லை இல்லை என்ற பாடலில் வரும் தவில், அல்லா ஜானேயில் வரும் நரம்புக் கருவிகள். உலக இசையை உள்வாங்கிய ஒருவரால்தான் வாத்தியக் கருவிகளை இந்த விதத்தில் பயன்படுத்த முடியும்.
அடுத்து, உன்னைப் போல் ஒருவனில் மனுஷ்ய புத்திரன் எழுதியுள்ள அல்லா ஜானே என்ற பாடலைப் பாடியிருக்கும் கமல்ஹாசன் பற்றி எழுதியே ஆக வேண்டும். பாடுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட பாடகர்களை விட நன்றாகப் பாடியிருக்கிறார் கமல். இது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. நான்கு பகுதிகளாக உள்ள அல்லா ஜானேவின் முதல் பகுதியைப் பாடும் போது அவர் குரல் தேனாய் இழைகிறது. அந்தக் காலத்து பி.பி. ஸ்ரீனிவாஸின் குரலில் காணும் இனிமை அது. இவ்வளவு இனிமையான குரலை வைத்துக் கொண்டு அவர் இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டிருந்தார்? தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பாடகரும், மிகச் சிறந்த சிரிப்பு நடிகருமான கமல் தன்னை ஒரு புத்திஜீவி என்று நினைத்துக் கொண்டு செய்யும் காரியங்கள் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஆனால் இந்தப் படத்தில் அவர் பாடியுள்ள பாடல்கள் அவரை ஒரு முதல்தரப் பாடகராக நிறுவுகின்றன.
அல்லா ஜானேவிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. முதல் பகுதியை தேனினும் இனிய nasal குரலில் பாடி விட்டு ‘வீடுகள் எங்கும் வேதனை நிழல்கள் ’ என்று தொடங்கும் இரண்டாம் பகுதியை கிட்டத்தட்ட சி.எஸ். ஜெயராமன் குரலில் பாட ஆரம்பித்து விடுகிறார். அதே குரல்தான் ’ பிள்ளைகள் நடுங்கும் பேய்களின் நடனம் ’ என்ற மூன்றாம் பகுதியிலும், ’ வெல்பவர் இல்லா போர்கள் இங்கே ’ என்ற நான்காம் பகுதியிலும் தொடர்கிறது. கமல் தன் குரலில் பலவித மாயவித்தைகளைக் காட்டினாலும் இந்தப் பாடலில் அது பொருந்தவில்லை. முதல் பகுதியில் அவர் காட்டும் இனிமையான குரலிலேயே பாடல் முழுதும் தொடர்ந்திருக்கலாம். கைலாஷ் கேர் தில்லி-6 இல் ’ மோலா ’ பாடலில் காட்டிய அற்புதத்தைக் காண்பிக்கக் கிடைத்த தருணத்தை கமல் தவற விட்டு விட்டார்.
இந்தப் படத்துக்காக கமலுக்கு சிறந்த பாடகருக்கான தேசிய விருதும், ஷ்ருதி ஹாசனுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், மனுஷ்ய புத்திரனுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதும் கிடைக்கும். கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இறுதியாக ஒன்று. விருதுகளை விட முக்கியமானது இந்தப் படத்தின் இசை தமிழ் சினிமா இசையில் ஏற்படுத்தப் போகும் புரட்சிகரமான மாற்றங்கள். அதற்காக, ஷ்ருதி ஹாசனுக்கு விசேஷமான பாராட்டுகளும், வாழ்த்துகளும்...
***
11.9.2009.
3.45 a.m.
|