அழைக்கிறேன், வாருங்கள்...

டிசம்பர் 12-ஆம் தேதி மாலை ஆறு மணி அளவில் ஃபில்ம் சேம்பரில் நான் எழுதிய ஒன்பது புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். என்னிடம் கேள்வி கேட்டவர்கள் (இப்போது ஏன் கேள்விகளே வருவதில்லை?), எனக்குக் கடிதம் எழுதியவர்கள், என்னோடு தொடர்பு வைத்திருப்பவர்கள், வாசகர்களாக இருந்து பிறகு நண்பர்களானவர்கள் என்று எல்லோரையும் தனிப்பட்ட முறையில் அழைக்கிறேன்.

( ஃபில்ம் சேம்பர் ஜெமினி மேம்பாலத்தின் கீழே உள்ளது; ஜெமினி மேம்பாலம் மவுண்ட் ரோடில் உள்ளது).

சென்ற ஆண்டு டிசம்பரில் என்னுடைய பத்து புத்தகங்கள் வெளியாயின என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அந்த விழாவுக்கு வந்திருந்த மதன் (விகடன்), கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து விட்டு “என்ன இது, ரஜினி படம் ரிலீஸுக்கு வந்த மாதிரி இருக்கிறது! ” என்று ஆச்சரியப்பட்டு சொன்னார். ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு இவ்வளவு கூட்டம் வந்து பார்த்ததில்லை என்று மேடையிலும் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு அது போல் நான்கு மடங்கு கூட்டத்தை எதிர்பார்க்கிறேன். ஃபில்ம் சேம்பர் தாங்கும். 2000 பேர் வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

ஏன் இப்படி? நானும் அரசியல்வாதிகள் மாதிரி கூட்டம் சேர்த்து மகிழ்ச்சி அடையும் அளவுக்குக் கெட்டுப் போய் விட்டேனா என்று நீங்கள் சந்தேகம் அடையலாம். இல்லை. இது சாரு நிவேதிதா என்ற ஒரு தனிப்பட்ட எழுத்தாளனின் சந்தோஷமோ கொண்டாட்டமோ இல்லை. இது ஒரு கலாச்சாரப் பிரச்சினை.

எப்படி என்று விளக்குகிறேன். கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு டிசம்பர் மாதமும் என் புத்தகங்களின் வெளியீட்டு விழா நடக்கும் போது அந்த விழாவுக்கு யாரை அழைப்பது என்று எனக்கும் ஹமீதுக்கும் பெரிய பிரச்சினை ஆகி விடுகிறது. ஆட்களே இல்லை. ஆளுமைகளே இல்லை. நீதித்துறையிலிருந்து யாரையாவது அழைக்கலாம் என்றால் ஊரறிந்த இலக்கிய ரசிகர் அந்தத் துறையில் யாரும் இல்லை. போலீஸ் துறையில் ஒரே ஒருவர்தான் இருக்கிறார். அவரால் எத்தனை அழைப்புகளை சமாளிக்க முடியும்? அரசியலிலிருந்து யாரை அழைக்கலாம்? அது கண்ணைக் கட்டிக் கொண்டு கடலில் இறங்கும் சமாச்சாரம். மீந்தது சினிமாத் துறைதான். மாற்றி மாற்றி ஒவ்வொரு ஆண்டும் அமீர், சசிகுமார், வசந்த பாலன், பாலாஜி சக்திவேல் என்று அழைத்தாயிற்று.

இதற்கிடையில் இன்னொரு முட்டுக்கட்டையைப் போட்டார் ஹமீது. போன வருடம் அழைத்தவர்களை இந்த வருடம் அழைக்கக் கூடாது! இப்படி ஒரு தடை இல்லையென்றால் வருடா வருடம் பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன், தமிழச்சி என்று நமக்கு வேண்டியவர்களையே அழைத்து விடலாம்.

அதனால் நான் ஒரு யோசனை சொன்னேன். ” போன வருடத்திற்கு முந்தின வருடம் அழைத்தவர்களை இந்த வருடமும், சென்ற ஆண்டு வந்தவர்களை அடுத்த ஆண்டும் அழைத்தால் என்ன? ”

” என்ன நக்கலா? நாம் என்ன ரோலிங் ஷீல்டா கொடுக்கிறோம்? ” என்றார் ஹமீது.

இப்படியாக, நான் சொல்லும் உருப்படியான யோசனைகளுக்கும் தடை போட்டுக் கொண்டிருந்தார்.

“நீங்கள் பாட்டுக்கு வருடா வருடம் பத்து புத்தகங்கள் எழுதுவீர்கள். வருடா வருடம் பத்து பர்ஸனாலிட்டீஸுக்கு இந்தத் தமிழ்நாட்டில் நான் எங்கே போவது? ” என்றும் அலுத்துக் கொண்டார்.

வருடா வருடம் நடக்கும் இந்த உரையாடல் நேற்று மாலையும் நடந்தது. அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. இரண்டு வயதே நிரம்பிய அவர் மகள் ரம்யா என்னிடம் வந்து தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிஸ்கட்டில் ஒரு மில்லி மீட்டர் அளவுக்குப் பிய்த்து எடுத்து, என்னை “அண்ணே ” என்று அழைத்துக் கொடுத்தாள்.

என் வாழ்நாளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் அது. இதுவரை உடல் பராமரிப்புக்கும், ஆடை அலங்காரத்துக்கும் ஒரு மதவாதியைப் போல் நான் எடுத்துக் கொண்ட கடும் முயற்சிகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் அது. ஒரு இரண்டு வயதுக் குழந்தை என்னை ’ அண்ணே ’ என்று அழைத்ததற்காகவே இன்னும் பத்து புத்தகங்கள் எழுதலாம் என்று தோன்றியது. ஆனால் ஒருவரின் சந்தோஷம், மற்றவரின் துக்கம் ஆயிற்றே? அதுவரை சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்த ஹமீதின் முகத்தில் அந்த வார்த்தையைக் கேட்டதும் ஈயாடவில்லை. இருக்காதா என்ன? 35 வயது ஆசாமி அப்பா; 56 வயது ஆசாமி அண்ணனா? ஒரே கணத்தில் ஆள் உடைந்து போய் விட்டார். நாளை மீண்டும் சந்தித்துப் பேசுவோம் என்று சொல்லி பேச்சை முடித்து விட்டார். அநேகமாக இரவு தூங்கியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். சரி, சைத்தான்களைப் பற்றி நமக்கென்ன கவலை? விஷயத்துக்கு வருவோம்.

ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதற்குக் கூட இந்தத் தமிழ்நாட்டில் ஆளுமைகள் இல்லை என்பது பரிதாபகரமாக இருக்கிறது. இதுவே கேரளமாக இருந்தால் இலக்கியம் தெரிந்த பாதிரிமார்கள் ஐம்பது பேர் இருப்பார்கள். எல்லாக் கட்சிகளிலும் இலக்கியம் தெரிந்த ஒரு நூறு பேராவது இருப்பார்கள். கல்வியாளர்களும் அநேகம் பேர் உண்டு. யோசித்துப் பாருங்கள். இலக்கியம் பற்றிப் பேசி மக்களுக்கெல்லாம் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டியது யார்? எழுத்தாளனா? கல்வியாளர்கள்தானே அந்த வேலையைச் செய்ய வேண்டும்? இங்கே அப்படிச் சொல்லிக் கொள்ளும்படி ஒரு கல்வியாளர் உண்டா?

அடிக்கடி கேரளம் பற்றி எழுதுவதால் தமிழ் தேசப் பற்றாளர்கள் கோபிக்காதீர்கள். ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். கேரளத்தில் மாதம் ஒருமுறையாவது ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் என்னைப் பேச அழைக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் அங்கே நான் பல்வேறு கல்விக் கூடங்களில் உரையாற்றி இருக்கிறேன். மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் ஐந்து நாட்கள் சர்வதேசத் திரைப்பட விழா நடந்தது. எல்லாமே தணிக்கை செய்யப்படாத உலகத் திரைப்படங்கள். அப்படங்களில் உடலுறவுக் காட்சிகளெல்லாம் சர்வ சாதாரணமாக இடம் பெறும். யாருக்கும் அங்கே அது பிரச்சினையாக இருக்கவில்லை. இதுவே சென்னையாக இருந்தால் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு சீட்டு கிழிந்திருக்கும். தமிழ்க் கற்பு, தமிழ்க் கலாச்சாரம் என்று சொல்லி அரசியல் ரௌடிகள் பல்கலைக்கழகத்தையும் ஒரு கை பார்த்திருப்பார்கள். அங்கே அதெல்லாம் நடக்கவில்லை. கலைத்துறையில் அங்கே வெளியிலிருந்து ஒரு பயல் உள்ளே நுழைய முடியாது.

காலையில் இரண்டு படம்; மாலையில் மூன்று படம் திரையிட்டார்கள். ஒவ்வொரு செஷன் முடிந்ததும் அந்தப் படங்களைப் பற்றி நான் மாணவ மாணவிகளுடன் உரையாட வேண்டும்.

இதேபோல் திருவனந்தபுரத்தில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஒருநாள் முழுவதும் உலகத் திரைப்படம் பற்றி உரையாற்றினேன். அதாவது, பாடம் எடுத்தேன். மறுநாள் பாடம் எடுத்தவர்கள் ஷ்யாம் பெனகல், கேதான் மேத்தா போன்றவர்கள்.

இப்படி கேரளத்தின் பல்வேறு கல்விக் கூடங்களில் உரையாற்றிய போதெல்லாம் கிடைத்திராத அனுபவம் சென்ற வாரம் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முத்தமிழ் மன்றத்தில் உரையாற்றிய போது கிடைத்தது.

தமிழ்நாட்டில் என்னை அவ்வளவாகத் தெரியாது என்றபடியால் கல்விக்கூடங்களில் உரையாற்றுவது இதுதான் இரண்டாவது முறை. நிகழ்ச்சி முடிந்த பிறகு மாணவர்கள் என்னுடன் ஒரு கலந்துரையாடல் வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டதால் ஒத்துக் கொண்டு அமர்ந்தேன். என்னோடு இரண்டு பேராசிரியர்களும் அமர்ந்தனர். இருவருமே அந்த மருத்துவக் கல்லூரியின் துறைத் தலைவர்கள்.

கலந்துரையாடல் தொடங்கியது. ஒரு மாணவர் கேட்டார்; ஆணும் பெண்ணும் நட்பாகப் பழகலாமா? விஜய் டீவி கோபிநாத்திடம் கேட்க வேண்டிய கேள்வி. பரவாயில்லை. கேட்டு விட்டார். கலந்துரையாடலுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஒரு மணி நேரம் என்பதால் எல்லோருக்கும் வாய்ப்புத் தர வேண்டும் என்று எண்ணி ஓரிரு நிமிடங்களில் சுருக்கமாக பதில் சொன்னேன். உடனே என் பக்கத்தில் அமர்ந்திருந்த பேராசிரியப் பெண்மணி – மருத்துவத் துறையில் நிரம்ப அனுபவம் உள்ளவர், ஆயிரக் கணக்கான டாக்டர்களை உருவாக்கியவர் - என்னிடமிருந்து மைக்கை வாங்கி அந்த மாணவருக்கு 20 நிமிடம் பதில் சொன்னார். தயவுசெய்து நம்புங்கள். 20 நிமிடம் பேசினார். அதுவும் எப்படி? தன் குடும்பக் கதை; மாமியார் கதை; தன்னுடைய மாணவப் பருவம், இத்யாதி, இத்யாதி. எனக்கு ஒரு மெகா சீரியலை பார்ப்பது போல் இருந்தது. கொஞ்ச நேரத்திலேயே மாணவர்கள் கைதட்டி, விசில் அடித்து ரகளை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ம்ஹும். அந்த பேராசிரியை அம்மா கடைசி வரை அசரவே இல்லை. 20 நிமிடம் பேசி முடித்து விட்டுத்தான் ஓய்ந்தார்.

அதற்கப்புறம் நடந்த கூத்து அதை விட கொடுமை. அந்த அம்மாவிடமிருந்து மைக்கை வாங்கிய மற்றொரு பேராசிரியர் – இவரும் ஆயிரக் கணக்கான டாக்டர்களை உருவாக்கிய ஒரு சீனியர் பேராசிரியர் – ஒரு பத்து நிமிடம் தன்னுடைய கதையை அளந்தார். மாணவர்களின் விசில் சத்தம் ரகளை சத்தம் பற்றி அந்தப் பேராசிரியர் இருவரும் துளிக்கூட கவலைப் படவில்லை. அப்படி ஒரு ரகளை நடந்து கொண்டிருக்கிறது என்பது கூட அவர்கள் கவனத்தில் இல்லை.

இவ்வளவுக்கும் அன்றைய நிகழ்ச்சியின் பிரதம விருந்தாளியாக அழைக்கப் பட்டிருந்தவன் அடியேன். பிறகு ஒருவழியாக மைக் என்னிடம் தரப்பட்டது. நான் “இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏதோ கௌன்ஸலிங் நிகழ்ச்சியைப் போல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே எல்லோரும் சுருக்கமாகப் பேசுங்கள் ” என்றேன்.

பிறகு ஒரு மாணவி “நான் பள்ளிப்படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றவள். எனக்கு அஸ்ட்ரோ ஃபிஸிக்ஸ் படிப்பதில் ஆர்வம் இருந்தது. ஆனால் என் பெற்றோர் என்னை வலுக்கட்டாயமாக மருத்துவத்தில் சேர்த்து விட்டார்கள். நான் இப்போது மூன்றாம் ஆண்டு வரை வந்தும் எனக்கு இதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறது; எனக்கு உங்கள் அறிவுரை என்ன? ” என்று கேட்டார்.

அந்தக் கேள்வியின் நேரடித்தன்மை என்னை அசரச் செய்தது. அத்தனை மாணவர்கள், பேராசிரியர்கள் முன்னிலையில் அவர் அப்படிக் கேட்டது மிகப் பெரிய விஷயம். இதற்கும் நான் சுருக்கமாக, ஆனால் அழுத்தமாக இரண்டு நிமிடம் பதில் சொன்னேன்.

படிப்பு என்பது இந்த ஐந்து ஆண்டுகளோடு முடிந்து விட்டதாக ஏன் நினைக்கிறீர்கள்? ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்த என்னை என் வீட்டு முதியவர்கள் பௌதிகத்தில் சேர்த்தார்கள். ஆனால் நான் இன்று ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், அரபி இலக்கியங்கள் மற்றும் சமூகவியல், தத்துவம் ஆகிய துறைகளில் ஒரு பேராசிரியராக அமரும் அளவுக்குப் படித்து விட்டேன்; படித்துக் கொண்டிருக்கிறேன்.. மருத்துவத்தை முடித்து விட்டு அஸ்ட்ரோ ஃபிஸிக்ஸ் படியுங்கள். எத்தனையோ பேர் மருத்துவம் படித்து விட்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி கலெக்டராக இருக்கிறார்கள். படிப்புக்கு வயது வரம்போ எல்லையோ கிடையாது. உங்களுடைய ஆயுட்காலமும் தொடர வேண்டியது படிப்பு. அதில் இந்த மருத்துவப் படிப்பை ஒரு கூடுதல் தகுதியாகக் கொள்ளுங்கள்.

நான் இரண்டு நிமிடம் பேசி முடித்ததும் என் கையிலிருந்து மைக்கை வாங்கினார் அந்த முதிய பேராசிரியை. அந்த மாணவியின் மீது கொலைவெறியோடு பாய்ந்தார். (அதாவது, எனக்கு அப்படித் தோன்றியது). சுத்தமாக இருபது நிமிடம். ஆடு மாடுகளை அறுப்பது போல் அந்த மாணவியை துவம்சம் செய்தார் பேராசிரியை. ஒரு பெரிய ஸ்லாட்டர் ஹௌவுஸை நேரடியாகப் பார்ப்பது போல் இருந்தது. பாவம், அந்த மாணவி அழுது விடும் நிலைக்கு வந்து விட்டார். பேராசிரியைக்கு அந்த மாணவி தன்னையும், தன் கல்லூரியையும் நேரடியாக அவமதித்து விட்டது போல் தோன்றி விட்டது என்று நினைக்கிறேன். அடி வெளுத்து வாங்கினார். மாணவர்களும் சளைக்கவில்லை. விசில், கைதட்டல் என்று பலவிதமாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். எனக்கு ஏதோ ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஒண்டி ஆளாக மாட்டிக் கொண்டு விட்டது போல் தோன்றியது. சில மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளை ஏதோ விரோதிகள் மாதிரி நினைத்து நடந்து கொள்வதன் மர்மம் எனக்கு அன்றுதான் விளங்கியது.

20 நிமிட ரகளை ஓய்ந்தபின் அமைதி திரும்பியது என்று நினைக்கிறீர்களா? ம்ஹும். உங்களுக்குத் தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று அர்த்தம். அந்த முதிய பேராசிரியை தன் 20 நிமிட கசாப்பு வேலையை முடித்ததும் அந்த மற்றொரு பேராசிரியர் அவரிடமிருந்து மைக்கை வாங்கி தன் பங்குக்கு 10 நிமிடம் கத்தி போட்டார்.

அதற்குள் ஒரு மணி நேரம் முடிந்து விட்டது. கிளம்பி வந்து விட்டேன்.

நண்பர்களே... இப்படி ஒரு சமூகத்தில் நீங்களெல்லாம் எப்படி மனநோயாளியாக மாறி விடாமல் உங்கள் மனோநிலையையும், லயத்தையும் தக்க வைத்துக் கொள்கிறீர்கள் என்ற ரகசியத்தை எனக்குக் கொஞ்சம் கற்றுத் தாருங்கள், ப்ளீஸ்.

என் கட்டுரைகளில் அடிக்கடி தமிழர்களைப் பற்றி philistines என்று குறிப்பிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். விவிலியத்தில் இந்த வார்த்தை ‘பிலிஸ்தீனியர்கள் ’ என்று வருவதாக தியடோர் பாஸ்கரன் குறிப்பிட்டார். இப்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்பவம் அதுதான். தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு சுரணையுணர்வு இல்லை. அதாவது, சபை நாகரீகம், அடுத்தவரோடு எப்படிப் பேசுவது, பொது இடத்தில் எப்படித் தும்முவது, அடுத்த மனிதரை எப்படி இம்சிக்காமல் இருப்பது, ஒரே வார்த்தையில் சொன்னால், இந்த உலகத்தில் வாழ நம்மைப் போலவே அடுத்த மனிதருக்கும் உரிமை இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அதற்குத் தக்க வாழ்தல் என்பதுதான் சுரணை உணர்வு. இந்த சுரணை உணர்வு இலக்கிய வாசிப்பினால் மட்டுமே வரக் கூடியது. மற்றபடி கடவுளாகவே இருந்தாலும் இது விஷயத்தில் உங்களுக்கு உதவி செய்ய முடியாது.

புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்க ஆட்களைத் தேட வேண்டியிருப்பதன் காரணமும் இதுதான். ஒரே வார்த்தையில் சொன்னால், தமிழ்நாட்டில் கலை இலக்கியச் செயல்பாடுகள் ஒட்டு மொத்தமாக நின்று போய் விட்டன என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. கல்விக்கூடங்களில் பெரிய பட்டம் வாங்கியவர்கள் பெரும்பாலும் ஒரு துறை சார்ந்த அளவில் அறிவை சேகரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் மற்ற எந்த விஷயத்திலும் ஒரு அடிப்படைப் புரிதல் கூட இல்லை. இதைத்தான் திரும்பத் திரும்ப என் கட்டுரைகளில் வலியுறுத்தி வருகிறேன்.

ஓரிரு தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ் சிலேயிலிருந்து பேசினார். லத்தீன் அமெரிக்காவின் மேல் சொல்லமுடியாத ஈர்ப்பு கொண்டவர். அதற்கு என் எழுத்துக்களும் ஒரு காரணம் என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். “இப்போது பாப்லோ நெரூதாவின் வீட்டில் நின்று கொண்டிருக்கிறேன்; உங்கள் ஞாபகம் வந்தது. அழைத்தேன் ” என்றார். ஓரிரு நாளில் பொலிவியாவுக்கும், பிறகு பெரூவுக்கும் செல்வதாகச் சொன்னார்.

இதுவே ஒரு சீலேக்காரர் தமிழ்நாடு வந்தால் அவர் போகக் கூடிய இடம் எதுவாக இருக்கும், சொல்லுங்கள். அண்ணா சமாதி, எம்ஜியார் சமாதி... இங்கே யாருக்காவது பாரதியின் சமாதி எங்கே இருக்கிறது என்று தெரியுமா? தமிழ்நாடே ஒரு கலாச்சார சமாதிதானே, இங்கே போய் எப்படி பாரதியின் சமாதியைத் தேடுவது?

போகட்டும். இப்போது புரிகிறதா, என் புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஏன் நீங்கள் ஆயிரக் கணக்கில் வர வேண்டும் என்று? இது ஒரு கலாச்சார நிகழ்வு. கலாச்சாரத்தையே சமாதி கட்டிப் புதைத்து விட்ட ஒரு நிலப்பகுதியில் ஒரு எழுத்தாளன் சென்ற ஆண்டு பத்து புத்தகம், இந்த ஆண்டு ஒன்பது புத்தகம் என்று வெளியிடுகிறான் என்றால் அதன் தீவிரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் 50 பக்கம், 100 பக்கம் இல்லை. 250 பக்கம் மற்றும் அதற்கு மேல். எல்லாமே என்னுடைய சொந்த சுக துக்கங்களை தியாகம் செய்து விட்டு உங்களுக்காக – உங்களுக்காக மட்டுமே – எழுதியவை.

உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். என் நைனா இறந்து விட்டார் என்று செய்தி வந்த போது கூட போகாமல் உயிர்மைக்கான கட்டுரையை எழுதி முடித்துக் கொடுத்து விட்டுத்தான் சென்றேன். அது உங்களுக்கு பாவச் செயலாக இருக்கலாம். ஆனால் எனக்கு எழுத்து ஒன்றுதான் உயிர் மூச்சு. அம்மா, அப்பா, மனைவி, மகன், மகள் சொந்தமெல்லாம் அடுத்ததுதான். யாரிடமாவது ஒரு வேலை கொடுத்தால் செய்கிறேன் என்று வாக்குக் கொடுத்து விட்டு பிறகு அதைச் செய்யாமலேயே மூக்கில் வலி, முதுகில் வலி என்று காரணம் சொல்கிறார்கள். இதை நான் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் இருதய அறுவை சிகிச்சை செய்து படுத்துக் கொண்டிருந்த போதும் உயிர்மை, கலா கௌமுதி, மாத்ரு பூமி, மாத்யமம் என்ற நான்கு பத்திரிகைகளுக்கும் எழுதுவதை நிறுத்தவில்லை. இதில் கடைசி மூன்றும் வாரப் பத்திரிகைகள். நான் சொல்வதை எழுதும் அளவுக்கு யாருக்கும் தமிழ் தெரியாததால் நானேதான் கையால் எழுதினேன். அப்போது மடிக்கணினி வசதியெல்லாம் என்னிடம் இல்லை. அப்போது எனக்கு ஏற்பட்ட கை வலியை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. தேள் கொட்டியது போல் நாள் பூராவும் கடுக்கும். ஆனாலும் “சாரு மருத்துவமனையில் இருப்பதால் அவர் எழுதும் தொடர் பிறகு வெளிவரும் ” என்ற அறிவிப்பைப் போடுவதற்கு நான் இடமளிக்க விரும்பவில்லை.

நம் இந்தியாவில் வாழ்ந்த, வாழுந்து கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான துறவிகளையும், சித்தர்களையும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களுக்கெல்லாம் வீடா வாசலா? அம்மாவா அப்பாவா? அவர்களுடைய ஒரே குறி இறையுணர்வுடன் சங்கமிப்பது, ஜீவன் முக்தி நிலையை அடைவது. என்னுடைய ஒரே குறி, இலக்கியம். எழுதி எழுதி சோர்வடையும் போது அவ்வப்போது டென்.டி சென்று குடிக்கிறேன்; விசிறி சாமியார் கஞ்சா குடித்தது போல.

சென்ற ஆண்டைப் போல் இல்லாமல் இந்த வெளியீட்டு விழாவில் எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்.

விழா முடிந்து மவுண்ட் ரோடு பக்கத்திலேயே எங்காவது நல்ல இடத்தில் மதுபான விருந்துக்கும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. சென்ற ஆண்டு நடந்த விருந்தில் இரண்டு பேர் குடித்து விட்டு கலாட்டா செய்து காட்டினார்கள். இந்த முறை அப்படி நடக்காமல் இருக்க இரண்டு பவுன்ஸர்களுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன். கலாட்டா செய்பவர்கள் பவுன்ஸர்களால் வெளியே அனுப்பி வைக்கப்படுவார்கள்.

நிகழ்ச்சிக்கு அவசியம் வந்து விடுங்கள்.

12.11.2009.

12.00 p.m.