அன்புமிக்க சாரு,
இந்த இதழ் உயிர்மையில் மனுஷ்யபுத்திரனின் கவிதை " சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்" படித்திருப்பீர்கள். அது குறித்து அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். (இத்தோடு இணைத்திருக்கிறேன்). அவரிடமிருந்து எந்த பதிலுமில்லை. இனியும் இது போன்ற (வேதனை கலந்த சுய எள்ளல்) கவிதைகளை அவர் எழுதாதிருக்க உங்களால் ஏதும் செய்ய முடிந்தால் (முடிய வேண்டும்) நல்லது.
வணக்கங்களுடன்,
செல்வராஜ் ஜெகதீசன்
அபுதாபி.
12.11.09.
( குறிப்பு: இதை உங்கள் வலைதளத்தில் வெளியிட வேண்டாம்)
***
அன்புள்ள மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு,
இந்த இதழ் உயிர்மையில் உங்களின் "சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்" கவிதை படித்தேன். கவிதை நன்றாக இருந்த போதிலும் எனக்கு சொல்லத் தோன்றியதை சொல்லி விடுகிறேன்.
உங்கள் கவிதையை வைத்தே சொல்லவேண்டுமென்றால்:
" எப்படி உங்களுக்கு சொல்ல
இனியும் கூடி இதுபோல்
ஒரு வேதனை கலந்த
சுய எள்ளல் கவிதைகளை
நீங்கள் எழுத வேண்டாமென்று."
படித்தவுடன் தோன்றியதை உடனே உங்களுக்கு அனுப்பியுள்ளேன். எந்த விதத்திலாவது பிழையிருப்பின் பொறுத்தருள்க.
வணக்கங்களுடன்,
செல்வராஜ் ஜெகதீசன்
அபுதாபி
11.11.09.
***

அன்புள்ள ஜெகதீசன்,
மிகுந்த அன்புடனும், பரிவுடனும், மரியாதையுடனும் எழுதப்பட்ட உங்களுடைய மேற்கண்ட கடிதங்களுக்கு கொஞ்சம் கூட அன்போ, பரிவோ, மரியாதையோ இல்லாமல் எழுதப்படும் இந்தக் கடிதத்திற்காக உண்மையிலேயே மிகவும் வருந்துகிறேன்.
என் ஞாபக மறதியின் காரணமாக உங்கள் பெயர் சார்ந்த மற்ற விபரங்கள் என் மனப்பதிவில் இல்லை. நீங்கள் என்னுடைய தீவிரமான வாசகராக இருக்கலாம்; இருந்தாலும் அது இங்கே ஒரு பொருட்டல்ல.
என் எழுத்தை ஓரளவாவது கவனமாகப் படித்திருந்தால் இது போன்ற கடிதங்களை நீங்கள் எழுதியிருக்க மாட்டீர்கள்; குறைந்த பட்சம் எனக்காவது.
மனுஷ்ய புத்திரனிடம் சொல்வதற்கு உங்களிடம் ஒரு செய்தி இருக்கிறது. நல்லது. அதைச் சொல்லுங்கள். அதற்கு பதில் செய்தியை அவர் சொல்லவில்லையென்றால் அது உங்களுடைய பிரச்சினை. அதை ஏன் என் தலையில் ஏற்றுகிறீர்கள்? நான் என்ன மனுஷ்ய புத்திரனின் பி.ஆர்.ஓ.வா? அவருடைய இலக்கிய ஏஜெண்டா? கவிதை ஆலோசகரா? நான் அவரிடம் சென்று “இது போன்ற கவிதைகளெல்லாம் எழுதி அபுதாபி ஜெகதீசனை வேதனை வெள்ளத்தில் மூழ்கடிக்காதீர்கள் ” என்று அறிவுரை கூறினால் அவர் பதிலுக்கு “நீங்களும் காமரூப கதைகள் போன்ற ஆபாச நாவல்கள் எழுதாமல் யுவன் சந்திரசேகரைப் போல் ஆசாரமான நாவல்களை எழுதுங்கள் ” என்று அறிவுரை சொன்னால் என் கதி என்ன ஆவது? அதுவும் தவிர, இப்போது நான் தமிழிலேயே இதுவரை இப்படி ஒரு ஆபாச நாவல் வந்ததில்லை என்று சொல்லப்படும் அளவுக்கு ஒரு ஆபாச நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். டிசம்பரில் அது வெளிவந்தவுடன் நோர்வேவுக்குத் தப்பி ஓடி விடலாம் என்ற திட்டத்தோடுதான் அதை ராப்பகலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் மனுஷ்ய புத்திரனிடம் சென்று அறிவுரை சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறது?
கடிதத்தை வெளியிட வேண்டாம் என்று சொல்லியும் வெளியிடக் காரணம், உங்கள் கடிதத்தில் தெரியும் மனிதாபிமானம் இன்றைய தமிழர்களின் பொதுப் பிரச்சினை என்பதால்தான். வெளிப்பார்வைக்கு மனிதாபிமானமாகத் தெரியும் உங்கள் வாதம் உண்மையில் ஃபாஸிச மனோபாவத்திலிருந்துதான் எழுகிறது. அதனால்தான் இப்படிப்பட்ட போலி மனிதாபிமானத்தை 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து எதிர்த்து எழுதி வருகிறேன். அதனால்தான் நான் மனிதாபிமானத்துக்கு எதிரி போலவும், மனிதாபிமானம் பேசுபவர்கள் மனிதாபிமானிகள் போலவும் ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. மனிதாபிமானத்துக்கு எதிராகப் பேச வேண்டும் என்று எனக்கு ஆசையா என்ன? உங்கள் மனிதாபிமானத்தில் ஒளிந்திருக்கும் ஃபாஸிசம்தான் எங்களை பயமுறுத்துகிறது.
மற்றவர்களின் மீது இரக்கம் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம். இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்னை நேரில் சந்திக்கும் போது என்னை ஒரு அறையாவது அறைந்து கொள்ளுங்கள். பேசாமல் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் இப்போது நான் உண்மையைப் பேசியாக வேண்டும். இப்படி மற்றவர்கள் மீது இரக்கும் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம்தான். சந்தேகமே இல்லை. இப்படி இரக்கம் கொள்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களை விட ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள். அந்த ‘உயர்ந்த இடத்தில் ’ இருந்துதான் இது போன்ற மனிதாபிமான வார்த்தைகள் சொல்லப்படுகின்றன.
கால்கள் இல்லாத ஒரு மனிதனை விட கால்கள் உள்ள நீங்கள் உயர்ந்தவர் என்று யார் சொன்னது? உலகின் எல்லாப் பகுதிகளிலும் இப்படிப்பட்ட இல்லாமைகளும், போதாமைகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. தலித்துகள், அரவானிகள், பெண்கள், சோற்றுக்கில்லாத ஏழைகள், பிச்சைக்காரர்கள், புலம் பெயர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப் பட்டவர்கள், இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத தமிழ்ச் சூழலில் எழுத நேர்ந்திருக்கும் என்னைப் போன்ற துர்ப்பாக்கியசாலியான தமிழ் எழுத்தாளர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், அனாதைக் குழந்தைகள் என்று உலகம் பூராவும் விளிம்பு நிலை மனிதர்கள் இருக்கிறார்கள். அதனால் உடலில் ஒரு பகுதி வேலை செய்யாத மனிதர்களைப் பார்த்து இரக்கப்படுவது அயோக்கியத்தனம். காரணம், எல்லோரையும் சமமாகக் கருதும் மனோபாவம் இந்த இரக்க குணத்தில் அடிபட்டுப் போகிறது. ஹெட்ரோசெக்ஸ் பழக்கம் உள்ளவருக்கு ஹோமோசெக்ஸ் பழக்கம் உள்ளவர் விபரீதமாகத் தெரிகிறார். வெள்ளை நிறத்தவருக்கு கறுப்பர் விரோதமாகத் தெரிகிறார். சைவம் உண்பவருக்கு மாமிசம் உண்பவர் பாதகமாகத் தெரிகிறார். இந்துவுக்கு முஸ்லீம், சிங்களருக்குத் தமிழர், உயர்சாதிக்குக் கீழ்சாதி என்று இந்த எதிர்மறையை நீட்டித்துக் கொண்டே போகலாம். இதைத்தான் ஃபாஸிசம் என்று சொல்கிறேன்.
நீங்கள் என் எழுத்தை ஓரளவு கூட கவனம் எடுத்துப் படிக்கவில்லை என்று சொன்னேன். உதாரணமாக, சென்ற ஆண்டு புத்தக விழாவின் போது நானும் மனுஷ்ய புத்திரனும் உயிர்மை அரங்கின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். மனுஷ்ய புத்திரன் வழக்கம் போல் அவரது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது எங்களை நோக்கி வந்த அறுபது வயதுக்கு மேல் மதிக்கத்தக்க ஒருவர் வந்து மனுஷ்ய புத்திரனிடம் “உங்களுக்கு இது பிறவியிலேயே உள்ளதா? இடையில் வந்ததா? ” என்று கேட்டார். மனுஷ்ய புத்திரன் என்ன பதில் சொன்னார் என்று ஞாபகமில்லை. ஆனால் அந்த ஆளை உதைக்க வேண்டும் என்று தோன்றியது. ’ குறைந்த பட்சம் அசிங்கமாகத் திட்டியாவது இருக்க வேண்டும்; தவறு செய்து விட்டோம் ’ என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. இதையும் நான் சென்ற வருடமே எழுதியிருந்தேன். இப்போது மீண்டும் அதையே எழுத வேண்டியிருக்கிறது.
அந்தக் கிழவர் தண்டிக்கப்பட வேண்டியவர். அவர் கேட்ட கேள்விக்கும் இப்போது உங்களுடைய மனிதாபிமானப் புளிப்புக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. இதே மனிதாபிமானத்தினால்தான் கம்யூனிசம் தோற்றது. மற்றவர்களுக்காக இரக்கம் கொண்டு அவர்களின் நன்மைக்காக ஒருவர் கிளம்பும் போதே ஃபாசிசமும் அவரோடு கை கோர்த்துக் கொண்டு கிளம்பி விடுகிறது.
வெளிப்படையாகச் சொல்கிறேன் ஜெகதீசன். ஒருவரைப் பார்த்து ‘நொண்டி ’ என்று திட்டுவதற்கும் உங்கள் கடிதத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதை நான் எந்த சபையில் வைத்தும் சொல்லத் தயார். அந்தக் கோபத்தினால்தான் இவ்வளவு நீண்ட பதிலை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு சக மனிதன் அவமதிக்கப்படுவது ஒரு காரணம்; ஒரு கவிஞன் அவனுடைய கவிதைக்காக அவமதிக்கப்படுவது மற்றொரு காரணம். இரட்டிப்புக் கோபத்தில் எழுதுகிறேன் இதை.
நீங்கள் குறிப்பிடும் கவிதையை ஏன் சுய இரக்கக் கவிதையாகப் பார்க்கிறீர்கள்? இதுதான் ’ காமன்மேன் ’ இலக்கியத்துக்குள் நுழையும் போது ஏற்படும் ஆபத்து. இப்படி தினந்தோறும் காமன்மேன்களையே எங்களைப் போன்ற எழுத்தாளர்கள் எதிர்கொண்டிருந்தால் எங்கள் நிலைமை என்ன ஆவது? சஸ்திர சிகிச்சை செய்யும் ஒரு மருத்துவர் சிகிச்சைக்கும் முன் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி விட்டுத்தான் சஸ்திர சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு நிலைமை இருந்தால் அந்த மருத்துவர் மற்றும் நோயாளிகளின் கதி என்ன ஆகும் என்று யோசியுங்கள். அதனால்தான் அவ்வப்போது மதுபானம் அருந்தி எங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சக்கர நாற்காலியின் பயன்பாடுகள் என்ற கவிதை உண்மையில் நீங்கள் நினைப்பது போல் சுய இரக்கக் கவிதை அல்ல. அது ஒரு தீவிரமான அரசியல் கவிதை. அதிகாரத்துக்கு எதிரான கவிதை. ஜனாதிபதியே வந்தாலும் எழுந்து நிற்க வேண்டியதில்லை; தேசிய கீதமே ஒலித்தாலும் எழுந்து நிற்க வேண்டியதில்லை என்பதெல்லாம் உங்களுக்கு சுய இரக்கமாகத் தெரிகிறதா? தேசிய கீதம் ஒலிக்கும் போது சக்கர நாற்காலியில் ஜாலியாக உட்கார்ந்திருக்கும் ஒருவரைப் பார்த்து அங்கே குழுமியுள்ள 200, 300 பேரும் பொறாமையில் வெந்து கொண்டிருப்பார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மனுஷ்ய புத்திரனைப் பார்த்து நான் பொறாமை கொண்ட தருணங்கள் பல. அதை அவ்வப்போது நான் பதிவு செய்திருக்கிறேன்.
மனுஷ்ய புத்திரனின் கவிதைகளிலுள்ள அரசியலும், அதிகாரத்துக்கு எதிரான குரலும் புரியாமல் பலரும் அவர் மீது தங்களின் இரக்கத்தின் கண்ணீர்த் துளிகளைப் பெய்து அவருக்கு ஜலதோஷம் உண்டாக்கி விடுகிறார்கள். உங்கள் கடிதம் பற்றி இன்று காலையில் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு கால்களின் ஆல்பம் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டு இப்படித்தான் எல்லோருடைய பச்சாதாபத்திற்கும் இரக்கத்திற்கும் ஆட்பட்டு அம்மாதிரி கவிதைகள் எழுதுவதையே நிறுத்தி விட்டேன் என்றார் அவர். தமிழ் இலக்கியத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு!
எழுத்தாளனின் எழுத்தை ஏன் ஒரு அனுபவமாகப் பார்க்க மறுக்கிறீர்கள்? கால் உள்ள ஒருவரின் அனுபவத்திற்கும் கால் இல்லாத ஒருவரின் அனுபவத்திற்கும், கண் உள்ள ஒருவரின் அனுபவத்திற்கும் கண் இல்லாத ஒருவரின் அனுபவத்திற்கும் வித்தியாசம் இருக்காதா? அதை ஒருவர் எழுத்தில் பதிவு செய்யக் கூடாதா? பதிவு செய்தால் உடனே அவரிடம் ஓடிச் சென்று த்சொ த்சொ என்று உங்கள் கண்ணீர்த் துளிகளை வடிப்பீர்களா? அவரா அல்லது வேறு யாரா என்று ஞாபகமில்லை; ஒருமுறை தற்கொலை பற்றி கவிதை எழுத, உடனே அவர் மீது பிரியம் கொண்ட நூறு பேர் அவரை உங்களைப் போல் மனிதாபிமானம் பொங்க விசாரித்து விசாரித்து அதனாலேயே தற்கொலை உணர்வு தோன்றியது என்றார். அதாவது, இப்படி ஒரு கொடுமையான சூழலில் எழுதிக் கொண்டிருக்கிறோமே என்ற ஆயாசத்தில்.
மேலும் ஜெகதீசன்... உங்களைப் போல் மனுஷ்ய புத்திரனுக்கு ஒரு லட்சம் வாசகர்கள் இருப்பார்கள். அத்தனை பேருக்கும் அவர் கவிதை மீது உங்களுக்கு இருப்பது போலவே கருத்துக்களும் அபிப்பிராயமும் இருக்கும். அதையெல்லாம் கேட்டு அதன்படி நடந்தால் அவர் கவிதை எழுத முடியாது. தயவு செய்து கவிஞனை டைலர் வேலை செய்யச் சொல்லாதீர்கள்.
இவ்வளவு எழுதியும் எனக்கு திருப்தி வர மாட்டேன் என்கிறது. ஒரே வாக்கியத்தில் சொல்லி விடுகிறேன். உங்களைப் போலவே அடுத்தவரும் யோசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அதுதான் ஃபாசிசத்தின் முதல் படி.
இப்போது அந்தக் கவிதை:
சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்
ஒரு சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்
ஒரு நாற்காலியின் பயன்பாட்டைவிட
பலமடங்கு அதிகமானவை.
நாற்காலியை இழந்துவிடுவோம்
என்கிற பயத்திற்கு இதில்
அவசியமே இல்லை
எந்த நியாயமான, நியாயமற்ற
காரணத்திற்காகவும்
நாற்காலியை யாருக்கும்
விட்டுக்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை
எல்லோரும் நின்றுகொண்டிருக்கும் வரிசையில்
நாம் நிற்க வேண்டியதில்லை
நமது பின்புறத்தைக் காட்டி
யாரையும் அவமானப்படுத்த நேர்வதில்லை
புனிதர்களோ கடவுள்களோ
சட்டென மண்டியிடும்படி
நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை
நாட்டின் முதல் குடிமகன்கள்
சபையில் நுழையும்போது
நம் இருக்கைகளிலிருந்து பதட்டமடையவேண்டியதில்லை
கீழ்நிலை ஊழியர்களை
ஒருபோதும் அமரச்சொல்லாத
எஜமானர்களின் தந்திரங்கள்
நம்மிடம் பலிப்பதில்லை
இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளில்
பங்கேற்கவேண்டியதில்லை
தேசியகீதம் பாடும்போது
எழுந்து நிற்கவேண்டியதில்லை
யாருக்கும் வழிகாட்டிச் செல்லவோ
யாரையும் பின்தொடரச் செய்யவோ
யாரோடும் இணைந்து நடக்கவோ
வேண்டியதில்லை
எந்த இடத்திலும்
முண்டிக்கொண்டு செல்லவேண்டியதில்லை
முக்கியமாக
சக்கரநாற்காலிகள்
பூமியின் எந்த மையத்தோடும்
பிணைக்கப்படுவதே இல்லை
* * * |