புத்தக விழாவில் அடியேன்

 

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக எதுவும் எழுதவில்லை. காரணம், சமீபத்தில் வெளிவந்த பத்து புத்தகங்களுக்கான பிழை திருத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன். மற்ற எழுத்தாளர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. என்னுடைய எழுத்தில் பல புரியாத பெயர்கள், வார்த்தைகள் இருக்குமாதலால் அதை நானேதான் சரி பார்க்க வேண்டும். இதற்காக இரவு பகலாக உழைக்க வேண்டியிருந்தது. டிசம்பர் 16ஆம் தேதி அவந்திகாவுக்குப் பிறந்த நாள். ஒரு வாழ்த்துச் சொல்லக் கூட நேரமில்லை. டிசம்பர் 18 என்னுடைய பிறந்த நாள். அதைக் கொண்டாடவும் நேரமில்லை. பல நண்பர்கள் மெஸேஜ் அனுப்பியிருந்தார்கள். அதற்கு நன்றி சொல்லக் கூட நேரமில்லை. அப்போது பார்த்து ஒரு நண்பர் என்னைச் சித்திரவதை செய்ய ஆரம்பித்தார். “பிறந்த நாள் கொண்டாட்டம் எப்படி இருக்கிறது? ” என்று ஒரு மெஸேஜ் வரும். அப்போதுதான் நான் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று காமரூப கதைகளைத் திருத்தி எழுதிக் கொண்டிருந்தேன். மெஸேஜைக் கண்டு கொள்ளாமல் கருமமே கண்ணாயிருந்தேன். உடனே ஒரு மணிநேரம் கழித்து “இப்போது எத்தனை பெக் போயிருக்கிறது? ” என்று அடுத்த மெஸேஜ் வரும். இப்படியே அன்றைய தினம் அந்த நபரிடமிருந்து ஒரு டஜன் மெஸேஜ் வந்தன. தொடர்ந்து என்னைச் சித்ரவதை செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கும் நண்பர் அவர். அவருடைய வதை புராணம் பற்றி நான் நிறையவே எழுதியிருக்கிறேன்.

பொதுவாக நான் வெளியே தலைகாட்டமல், யாரையும் சந்திக்காமல் அஞ்ஞாதவாசம் செய்து கொண்டிருக்கும் காரணம் பற்றி யார் யாரோ எப்படி எப்படியோ பேசிக் கொள்கிறார்கள். என்னுடைய அஞ்ஞாதவாசத்துக்குக் காரணம், இந்தியர்களுக்குப் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்வது என்றே தெரியவில்லை என்பதுதான். இன்னமும் இந்த நாட்டின் பெருவாரியான மக்கள் காட்டுமிராண்டிகளாகவே நடந்து கொள்கிறார்கள். ஒரு உதாரணம் தருகிறேன்.

நானும் நண்பர் ஹமீதும் புத்தகக் கண்காட்சியின் உயிர்மை அரங்கின் வெளியே நின்று கொண்டிருந்தோம். இப்படித்தான் என் மனதில் அந்த விஷயம் பதிவாகி இருக்கும்; இப்படித்தான் எழுதியும் இருப்பேன், பின்வரும் சம்பவம் நடந்திராவிட்டால். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்து என் மனம் விஷமாகி விட்டதால் இலக்கணப் பிழையை மாற்றி எழுதுகிறேன். நான் நின்று கொண்டிருந்தேன். ஹமீது அவரது வீல் சேரில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஹமீதை நெருங்கி வந்து “உங்களுக்குப் பிறவியிலேயே இப்படி இருக்கிறதா? அல்லது, அப்புறமாக வந்ததா? ” என்று கேட்டார்.

நண்பர்களே, என் குரு சிவசாமி ஐயாவின் பேச்சைக் கேட்டு, தியானம் யோகா எல்லாம் பழகி நான் ரொம்பவும் கெட்டுப் போய் விட்டேன். கண்முன்னே எவ்வளவு அயோக்கியத்தனம் நடந்தாலும் கோபம் வர மாட்டேன் என்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படி நடந்திருந்தால் “டேய் ங்கோத்தா, தேவ்டியாப் பயலே , இது பிறவியில் வந்ததா, இல்லே பாதீல வந்ததான்னு தெரிஞ்சுக்கலேன்னா உன் .......னில வலிக்குதா? ” என்று ஆரம்பித்து ஐந்து நிமிடங்களுக்கு அர்ச்சனை நடத்தியிருப்பேன். அடித்துக் கூட இருப்பேன்.

 

(அவந்திகாவும் தமிழச்சியும்)

இந்தச் சம்பவம் எனக்கு ஞாபகம் வரும்போதெல்லாம் எனது மன உளைச்சல் அதிகமாகிறது. இதனால்தான் என்னுடைய வெளி நடவடிக்கைகளை பார்க் ஷெரட்டனோடு நிறுத்திக் கொள்கிறேன்.

புத்தக விழாவுக்குச் செல்வதில் ஒரு சின்ன சிக்கல். போக வர ஆட்டோவுக்கே 200 ரூ. ஆகி விடுகிறது. ஹமீதோடு அவருடைய காரில் போகலாம் என்றால் அவர் இரண்டு மணிக்கே ஓடி விடுகிறார். நான் கிளம்புவதோ நான்கு மணி. பணத்தை விட நேரம் எனக்கு முக்கியம். இப்படியாகப் பணம் தண்ணீராய் செலவாகிறதே என்று ஒரு திட்டம் போட்டேன். புத்தக விழாவின் உள்ளே நுழைய ஐந்து ரூபாய் கட்டணம். அந்தக் கட்டணத்தையாவது மிச்சப்படுத்தலாம் என்று ஏதாவது வழி இருக்கிறதா என்று அந்த மைதானத்தைச் சுற்றிச் சுற்றி வந்தேன். புத்தக விழாவின் வெளியே இருந்த ஸ்ரீகிருஷ்ணா உணவகத்தின் அருகே ஒரு பெரிய சாக்கடை ஓடிக் கொண்டிருந்தது. (உணவகத்தின் பக்கத்தில் சாக்கடையும் கழிவறையும் இருப்பதுதானே இந்தியாவில் மரபு? அந்த மரபின் படி அந்த உணவகத்தின் பின்னால்தான் கழிவறையும் உள்ளது). அந்தச் சாக்கடையின் மேலே நடந்து செல்ல ஒரு பலகையும் இருந்தது. நன்கு பேலன்ஸ் செய்து அந்தப் பலகையின் மேலே நடந்து சென்றேன். அதுதான் புத்தகவிழாவின் எமர்ஜென்ஸி எக்ஸிட். அந்த வழியாகவே தினமும் போய்க் கொண்டிருக்கிறேன். இதில் இன்னொரு வசதி, நுழைவுச் சீட்டு வாங்குவதற்காக நிற்கும் க்யூவையும் தவிர்க்கலாம்.

***

18.1.2009.

2.00 p.m.